தனிமை…


 

வித்தியாசமான
எண்ணங்கள்
எழும்
தனித்திருக்கும் போது…

அப்போது தான்
அவன்
கடவுளோடு
உரையாடுவதும்..
அப்போது தான்
உணர்வான்
ஆன்மாக்களை
உருவாக்கி
வளர்த்தெடுக்கும்
விளைநிலத்தில்
தானொரு
மண்ணாங்கட்டியாய்
இருப்பதை….

அப்போது தான்
ஏன் ?எங்கே?
என்ற கேள்விகள்
எழும்….

கேட்க தோன்றும்
எங்கே தொடங்கி எங்கே
முடிகின்றன
அவன்
நாட்களும்
வருடங்களும்
என்று?

பழியேது
புகழேது
என்று?

அழகெது
அசிங்கமெது
என்று?

திரளிலிருந்து
விலகி
இனிதான
ஏகாந்தத்தில் தான்
மேலுலகத்தின்
மென்குரல்கள்
கேட்கும்…

தொலைதூரத்தில் இருந்து
ஒலிக்கும்
திவ்யகானம்
கேட்கும்…

அப்போது தான்
மறைத்த மாயை விலகி
சுயநலத்திலும்
பேராசையிலும்
உழல வேண்டியவனில்லை,
தான் ஒரு நல்ல
ஆன்மாவாக
வளர வேண்டியவனென்று….

அப்போது
தான்
தெய்வீகத்தால்
தீண்டப்பட்டு
தனக்கான
அதன்
திட்டத்தை
உணர்வான்….

மனிதனின்
பிறப்பையும்
நோக்கத்தையும்
விசாரம்
செய்வான்…

மவுனத்தில்
அவன் மனம்
மலர ஆரம்பிக்கும்…

தன்னிடமிருந்து
மறைக்கப்பட்டதை
அறிந்து விட
முனைவான்…

தான் மண்ணாங்கட்டியல்ல
மணக்க வேண்டிய
ஆன்மாவென
உணர்வான்…

வித்தியாசமான
எண்ணங்கள்
எழும்
தனித்திருக்கும் போது….

Advertisements

சில சித்தர்கள்….


 

எல்லா பரதேசிகளும்
சித்தர்களில்லை…
ஆனால்
நேசித்திருக்கிறேன்
சில
சித்தர்களை,
பல மணி நேரம்
சிரித்த
முகமாய்
கோயில் மதில்
சுவரில் ,
மரத்தடியில்
கட்டையை சாய்த்து
மெலிந்த கால்களை
தளர்ந்த மடிமேல்
மடித்து கிடத்தி
பரம திருப்தியுடன்
பரிபூர்ண
பரிவுடன்
மவுனமாக
எவரையும்
பார்ப்பவர்களை…

எங்கும்
எதற்கும்
அசையமாட்டார்கள்
அவசியமின்றி…

அப்படியே
எங்கு சென்றாலும்
பூமிக்கு நோகாமல்
மெல்ல மெல்ல
அடியெடுத்து
அதிராமல்
நடந்தே…

பிரியமாக
கொடுத்தாலும்
பிடிசோறே….

இடையிடையே
கஞ்சாவை
புகைத்தாலும்
கனிவு
மாறாத
கள்ளமில்லா
கண்கள்…

உற்றுப்பார்த்தால்
நாடி நரம்புகளில்
ரத்த நாளங்களில்,
உண்மை
கொப்புளிப்பது
தெரியும்
தெள்ளத் தெளிவாக….

புரியும்
உள்ளத்தால்
உள்ளவாறே
உலகைக் கண்டவர்களென்று,
ஊனக் கண்களாலல்ல…

 

பிச்சை….


 

இன்றைய பிச்சை
எடுத்து முடிந்தாகி விட்டது…

முச்சந்தி பிள்ளையார் கோயிலருக
சில சந்நியாசிகளுடன்
ஆலோசிக்கிறேன்
இன்றிரவு
எங்கு
கிடத்தலாம்
கட்டையை
என்று…

போன வருடம்
இதே நேரம்
நானொரு முட்டாள் சந்நியாசி…

இன்று பெரிதாக
அதிலேதும்
முன்னேற்றமில்லை…

கவிதை வாசிக்கிறேன்….


 

கவிதை வாசிக்கிறேன்
கட்டிப்போடும்
தளைகளை
அறுத்து
என்னை விடுவித்துக் கொள்ள…

கவிதை வாசிக்கிறேன்
எனக்கு சிறகுகள்
முளைக்க…

கவிதை வாசிக்கிறேன்
உயர உயர
பறக்க…

கவிதை வாசிக்கிறேன்
வானில்
வட்டமடித்து
உலகை
உள்ளபடி காண…

கவிதை வாசிக்கிறேன்
தொடுவானத்துக்கு
அப்பாலும் பறந்து விட…

 

பாழாய்ப்போன மனசு…


 

புள்ளிகளை
கண்டுட்டா
கோலம் போட்டுவிட
பரபரக்குது மனசு…

கோட்டை கண்டுட்டா
காட்சியையே
வரைஞ்சிருது…
பரிச்சயமான
தொடுவானத்தில்
ஒரு பழைய மரத்தை
ஒரு பழகிய
கோபுரத்தை
கண்டு
விரிச்சிருது
காட்சியை..

சடுதியில்
இட்டுச் சென்று விடுகிறது
கடந்த காலத்துக்குள்…

காணும் காட்சியை
நிகழ்வா
நீட்டி
அருந்த
முற்படும்
போது
உரைக்கிறது
கானல் நீரென்று…

நொடியில்
நினைவுகளை
கொண்டு வந்து
நிறுத்தி வாழவைப்பதும்
நிகழ்வாய்
நீட்ட முடியாமல்
வதைப்பதும்
அதே மனசு…

பாழாய்ப் போன
மனசு!

 

செல்வம்…


 
என்னிடம்
வேறேதும்
செல்வங்கள் இல்லை,
என் எண்ணங்களை தவிர,
என் சொத்தெல்லாம்
என் எண்ணங்களே.
உன்னைப் பற்றிய
என் எண்ணங்கள் எல்லாம்
என் மனதில்
பார்த்து பார்த்து
வார்க்கப்பட்ட
பொற்காசுகள்.

ஆனால் மிச்சம்
வைக்காமல்
செலவழிப்பேன்
என் எண்ணங்களை,
ஆம் !ஏட்டில்
எழுதி வைப்பேன்,
பாட்டுக்களாய்
பாடி வைப்பேன்…

ஏனெனில் சாவுக்கு
இப்பக்கம்
அவற்றை
செலவழித்து, பாடிவைத்து விட வேண்டும்,

அப்போது தானே
அவை அமரத்துவம் பெறும்?

 

ஞானம்…


 

என்று
தவறுகள்
இழைக்கப்படும் போது
பதறுவதை நிறுத்தினேனோ,

என்று
திறக்கப்படாமல்
மூடுண்ட கதவுகளுக்கு பின்னால்
சமரசங்கள் காத்திருப்பதை கண்டேனோ,

என்று அமைதியாகி
விட்டேத்தியாக
ஆனேனோ,

அன்று என் வாழ்வை
நேர்கொண்டு
கண்டேன்,

கிடைக்கப் பெற்றேன்
ஞானத்தையும்,

இளமையை
தொலைத்திருந்து!