காலம் மாறிப் போச்சுதுங்க


காலம் மாறிப் போச்சுதுங்க.

காலத்துக்கு ஏத்த மாதிரி

சமூகப் பொருளாதார அமைப்புகளும் மாற வேணாமாங்க?

பழச செரிச்சு அதிலிருந்து

புதிய நீட்சிகள் உருவாக வேணாமாங்க?

இங்க இருக்கிற மதங்களும்

அரசியல் கட்சிகளும்.

இதைப் புரிஞ்சுக்கிறதேயில்லைங்க.

மதங்கள் ஆளுக்கொரு மையநால்வாதத்தை

வச்சுக்கிட்டு அதுவே இறுதியானதுன்னு

வம்பா  வழி மறிச்சுக்கிட்டு இருக்குதுங்க.

இத்தனைக்கும் எல்லா மையநூல்வாதங்களும்

ஆயிரக்கணக்கான வருஷங்கள்

பழசானவை  தாங்க.

 

அரசியல் கட்சிகளோ அறுதப் பழசான

கொள்கைகளை வச்சுக்கிட்டு

இருக்குதுங்க….

மறுபரிசீலனை செய்து மக்களை ஈர்க்கிறதை

விட்டுப்புட்டு வாக்கு வங்கிகளை

காப்பாத்திக்க அந்தந்த கொள்கைகளிலிருந்தும்

 கூட நழுவிடுதுங்க..

 

சமூகமோ புதுப் புதுப்

பிரச்சினையால பிதுங்கிக்கிட்டிருக்குங்க.

முன்னெடுத்துச் செல்ல

மாத்தி யோசிக்கணுங்க..

மாட்டேங்குறாங்க.

மாத்தி யோச்சிக்கிறவன்

 ஒரு விவாதத்தை உருவாக்க

மாற்றுக் கருத்தைச் சொன்னா

பெரிய வம்பா போகுதுங்க.

Toe the line!Toe the line!.

இது தாங்க கோஷமாயிருக்கு

மாத்தி யோசிக்கணுங்க..

மாத்தி யோசிக்கறவனை

விடணுங்க.

பல்லாயிரம் கோடி மக்களில்

ஒரு ஆயிரம் பேரு தான்

மாத்தி யோசிக்கிறாங்க.

அவங்கள்ளையும்

ஒரு நூறு பேரு தான்

யோசிச்சதை

வெளிய சொல்ல

முன் வராங்க.

அவங்களையும்

விடலைன்னா

எப்படிங்க?

 

 

 

 

 

 

 

Advertisements

கலைஞன் உணர்ச்சி மயமானவன்.


கலைஞன் உணர்ச்சி மயமானவன்.

தான் வாழும் சமுதாயத்தினோடு  தன்னை இறுக்கமாகப்

பிணைத்துக் கொண்டவன்.

சமுதாயம் ஒரு macrocosm  என்றால்.அதனின்  microcosm ஆகவே தன்னை உணரக் கூடியவன்.

தான் சார்ந்த சமுதாயத்தினை விட்டு விலகி ஒதுங்க முடியாதவன்.

தான் வாழும் சமுதாயத்தின் வீழ்ச்சியைக் கண்டு வாளாவிருக்க அவனுக்கு இயலுவதில்லை.

அவன் கண்ட, கேட்ட அனுபவங்கள் அவனை சிந்திக்க வைக்கின்றன.

பலப்பலவாறான உணர்ச்சிகள் எழுந்து அவனை ஆட்டிப் படைக்கின்றன.

தர்க்க அறிவைக் கொண்டு விடை தேட முடியாத உணர்ச்சிகளுக்கு ஒரு உருவம் கொடுத்து அவன் படைப்பதே கலைவடிவம்.

அந்தக் கலைவடிவம் சிறந்த கலைவடிமாவதற்கு மூன்று அமசங்களில் கலைஞன் மிக அதிகமான கவனத்தைச் செலுத்த  வேண்டியது  அவசியம்.

1. கலைஞன், அவன் கையிலெடுக்கும் கருத்துருவுடன் ஆழமான தார்மீக உறவு பூண்டிருக்க வேண்டும். அவன் எடுத்துக் கொண்ட விவாதப் பொருள் மீது ஆழமான விருப்போ, வெறுப்போ,சலிப்போ கொண்டிருக்க வேண்டும்.

2.அவன் சொல்ல வருவதை மிகத் தெளிவான, அழகான ஒரு உருவமாக்க வேண்டும், Tolstoyஇதை clarity of exposition or beauty  of form  என்பார்.

3.அவன் கண்ட கேட்ட அனுபவங்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

அதன் வழி அவன் படைக்கும் கலைவடிவத்தின் உறுப்புகள் அமையவேண்டும். அந்த நேர்மையை அந்த உறுப்புக்கள் பிரதிபலிக்க வேண்டும்.கதையாயின் கதாபாத்திரங்களின் மீது படைப்பாளி கொண்டிருக்கும் பிடிப்போ, வெறுப்போ தெள்ளத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

அவன் படைத்த கலைவடிவம் அவனுடைய பிடிப்பையோ, வெறுப்பையோ, சலிப்பையோ மிகத் தெளிவாக கலாரசிகர்களுக்கு கடத்துவதாக இருக்க வேண்டும்.

 

இந்த மூன்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பவன் சிறந்த கலைஞனாகிறான். இந்த மூன்றையும்  உள்ளடக்கமாக்க் கொண்ட படைப்பு

சிறந்த கலைவடிவமாகிறது.

இப்படிப்பட்ட படைப்பு சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்து அந்த சமுதாயத்தையே புதிய பாதைக்கு திருப்பி மேன்மையை நோக்கி பயனிக்க வைக்கிறது.

இப்படிப்பட்ட படைப்புகளைத் தந்திருக்கும் கலைஞனின் புதிய,புதிய படைப்புகளை மிக ஆவலுடன் சமுதாயம் எதிர்நோக்க வேண்டும்.

வா கலைஞனே வா..வாழ்க்கையினை புதிய கோணத்தில் கண்டவனே.. வா

உன் ஓளியைக் கொடுத்து எம் இருளைப் போக்க வந்தவனே …. வா உன் புதிய படைப்பைத் தாவென வரவேற்க வேண்டும்.

அந்தச் சிறந்த கலைஞனின் உயர்ந்த படைப்புகள் அர்ங்கேற வேண்டும்.,நாம் பயன்பெற.

இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் காசு,பணத்திற்காக இதைச் செய்வதில்லை.

இவர்களிடமிருந்து மாறுபட்ட சில கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காசு பணத்துக்காக வெகுஜனங்களின் நடப்பு விருப்பு,வெறுப்புக்களை,சூடான சர்ச்சைகளை,சூடு குறையுமுன்னே மையப்படுத்தி அதைச் சுற்றி அவசர கோலத்தில் எந்த வித நேர்மையுமின்றி

ஒரு குறைபட்ட படைப்பை உருவாக்கி வெளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால இவர்களே எண்ணிக்கையில் அதிகம்.

இன்னும் ஒரு வெட்கக் கேடு ; இந்த இரண்டாம் வகையினரின் படைப்புகள் வணிக ரீதியாக பெரும் வெற்றிகளையும் பெற்று விடுகின்றன.

எதனால் என்று நிச்சயமாக என்று உணர முடிவதில்லை. ஒருவேளை மக்கள் ஏற்கெனவே அறிந்தவற்றைப் பிரதிபலிப்பதால இவ்வகைப் படைப்புகளோடு அவர்கள் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறதா?

தெரியவில்லை.

சமுதாயத்தின் பொழுதைப் போக்க மட்டுமே உதவும் இவ்வகை குறைபட்ட படைப்புகள் ,பல கூடிச் சமுதாயத்தின் பொழுதை ஆக்கக் கூடிய படைப்புகளை,  பல நேரங்களில் மூழகடித்து விடுகின்றன.

இதைப் பற்றி எடுத்துக் கூறி ஆதங்கப்பட்டு பாடியிருப்பார் தாகூர் ,தனது PAPER BOAT என்னும் கவிதையில்.

வெறு பொழுது போக்கு அம்சங்களைக் கொண்ட படைப்புகளை வரவேற்கும் மக்கள்,

ஏனோ சமுதாயத்தினை உன்னதப் படுத்தக் கூடிய

படைப்புகளை ஊதாசினப் படுத்தி விடுகிறார்கள்.

சில நேரங்களில் அவை அரங்கேறக் கூட முடிவதில்லை.

ஏன்?

தங்களைத் தாமே சுய விமர்சனம் செய்து கொள்வதை மக்கள்

விரும்புவதில்லையோ?

 

 

 

 

 

“அம்மீ ..அம்மி குத்தலியோ அம்மீ..”


அம்மீ ..அம்மி குத்தலியோ அம்மீ..”

கூவிக்கிட்டே

எங்க தெரு வழியா வருவாங்க

அம்மி குத்துறவுங்க.

பொதுவா தனியா வரமாட்டாங்க

கூட அவுங்க சம்சாரமும் குழந்தையும்.

எப்பவாச்சும் அம்மா உள்ள கூப்பிட்டு அம்மிய குத்தச்சொல்லுவாங்க

அவுங்க அம்மி குத்துற அழகே தனிங்க.

இம்மி பிசகாம அந்த உளி  ஒரு நேர் கோட்டில் அடுத்த புள்ளிக்கு நகரும்.

 உளி நகர்வதும் சுத்தியல் அதன் தலையில்  நச்சென்று விழுவதும் ஒரு லயத்தில் இருக்கும்.

அடுத்த புள்ளி. நச். அடுத்த புள்ளி….

பார்த்துகிட்டே இருக்கலாம்.

ஆனா ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுரும்.

வேலைய முடிச்சு கிணத்து மேட்டில் மேலு காலக் கழுவிக்குவாங்க.

என்ன கழுவினாலும் அவுங்க  மேல விட்டு அந்தப்பொடி போகாத மாதிரி தான் படும். அவுங்க உடல்மொழி அப்படி ஒரு தோற்றத்தை நம்ம மனசில் ஏற்படுத்தும்.

தண்ணீ …”கேட்டு வாங்கிக் குடிப்பாங்க .

இப்ப மாதிரியில்ல… அப்ப யாரு எங்க கேட்டாலும் செம்பு நிறைய கொடுப்பாங்க.

சில சமயம் கஞ்சி.. இல்ல.. நீசத்தண்ணி கேப்பாங்க. அம்மா குடுப்பாங்க..

அப்பல்லாம் சோத்தை பொங்கி வடிக்கிறது தானே. எப்பவும் அதுக்கு பஞ்சமிருக்காது.

அவுங்களுக்கு எப்படித் தான் கட்டுபடியாச்சோ.. கூலி ரொம்ப கம்மியாத்தான் இருக்கும்.  

போயிட்டு வர்றேம்மா”ன்னு ,போகும் போது அந்த வேகாத வெயிலில் அழுக்குபிசுக்கேறிய உடையில் அலைந்து திரிஞ்சாலும் , சிரிச்சிட்டு வாய் நிறைய சொல்லிட்டுப் போவாங்க.

அந்த சின்ன வயசில் அது நம்மை என்னமோ செய்யும்.

ரொம்ப நேரம் அவுங்க  போகிறதை …பார்வையை விட்டு விலகுற வரைக்கும் பர்த்துகிட்டே இருந்திருக்கிறேன்.. காட்சியை விட்டு விலகின பிறகும் கூவுற அந்தக் குரல்  கேக்கும்…..

 “அம்மி குத்தலியோ.. அம்மீ..”

இது மாதிரி  இன்னும் நிறையப்

 பேரு.

ஈயம் பூசலையோ ஈயம்….”

 “கொட ரிப்பேஎர்….. கொட ரிப்பேஎர்….”

செருப்பு ரிப்பேஎர்…… செருப்பு ரிப்பேஎர்….”

 இவுங்களைத்  தவிர  இவுங்களைப் போலவே ஆனா கூவாம சேவை செய்யிறவங்களும் வந்து போவாங்க..

கையில் ஒரு சின்ன தகர பெட்டி மட்டுமே கொண்டு வரும் முடிதிருத்தும் தொழிலாளி;

தென்னை மரமேறி மட்டைய ஒதுக்கி விடுகிறவர்;

சேர்த்து வச்ச காலி தகர டப்பாக்களை முறம் போன்ற அழகான

பொருட்களாக  வடிவா மீட்டெடுத்து தருகிறவர்;

இப்படி நிறையப் பேரு..

கேட்டு வேலையிருந்தா செஞ்சிட்டுக் குடுக்குறத வாங்கிகிட்டு போவாங்க.

அவுங்க பேரெல்லாம் தெரியாது.

ஒவ்வொருத்தரும் வந்து வேலை செஞ்சிட்டுப் போகிறவரை

அவுங்களையே சுத்தி சுத்தி வருவேன்.

அவுங்க வேலை செய்யிறதும் நுணுக்கமாகவே படும்  அதிசயம் அதிசயமா  தெரியும்..

அவங்க கிட்ட ஏதேதோ கேக்கனும், பேசனும்னு ஆசையா இருக்கும்

கூச்சத்தில் வாய்மூடியே இருப்பேன்.

குத்த வச்சு முகம் நிறைய கண்கள் விரிய பார்த்துகிட்டிருப்பேன்

அவுங்களுக்கும் அது புரியும் போல.

ரொம்ப கனிவா நடந்துப்பாங்க.

போகும் போது வாசல் வரை கூடவே போவேன்.

 

இன்னைக்கு அவுங்கள்ளாம் என்னவானாங்கன்னு தெரியலை.

அவுங்க வழியில் அந்த தொழில்களை இன்னைக்கு யாரும் செய்யிற மாதிரியும் தெரியலை.

அந்த மாதிரி தொழில்களெல்லாம் சிலது உருமாறியும் பலது அழிஞ்சும்  போச்சு போல,  நியாயந்தான்.

அதில் சந்தோஷமும நிறைய.

சமூக  அமைப்பின் இடைவெளிகள் கொஞ்சமாவது கொறைஞ்சா சரி.

இருந்தாலும் இந்த சமூகத்தின் நலனுக்காக வெட்டுப்பட்ட  காய்களாக வாழ்க்கையை முடிச்சுக்கிட்ட அந்த அப்பாவிகளை நினைக்காம இருக்க முடியலை.

யார் யாரையோ நினைச்சு  பார்க்கிறோம்,

நம் அன்றாட வாழ்வில் அவசியப் பங்கு வகிச்ச அந்த அப்பாவிகளை, உண்மையில் உறவுகளை,

கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்க வேணாமா?

நாம் வளர்ந்து உருவெடுத்ததில் அந்த வெட்டுப்பட்ட அப்பாவிகள் பங்கு

 ரொம்ப சின்னதா  இருக்கலாம். ஆனா அவசியமானதுன்னே படுது.

ஏன் வேடன் வடிவம்.? ஏன் வேட்டை?


செவி வழி

புராணக் க(வி)தைகள்

சுவாரஸ்யமானவை…..

அவைகளில்

சுவாரஸ்யமானது

தொடர்ச்சியாக

மலைக்க வைக்கும்

கவித்துவ உருவகம்

வேட்டுவ வடிவம்…..

.

 

பாசுபதம் வேண்டி

ஒற்றைக்காலில்

நின்றவனை

வம்புக்கு இழுத்தது

வேடத்தியுடன் வந்த

வேடன்.

 

காசியில்

நான்கு நாய்களுடன்

ஆதிசங்கரரை

வழிமறித்து

வாதிட்டது

வேடன்…

 

அவிர்பாகத்தை

அவனே

நேர் வந்து

கொள்ள வேண்டும

என்று வேட்டவன்

வேள்விக்கு

வந்ததும்

கள்ளுண்ட

வேடன்.

 

உள்ளுர்

முனியனும்,

முத்துப் பேச்சியும்

சங்கிலி கறுப்பனும்

ஆடுவது

வேட்டை.

 

 

உச்சமாக

ஆறே நாளில்

காட்சி தந்து

ஆட்கொண்டதும்

வேடனை.

 

 

ஏன்  வேடன் வடிவம்.?

ஏன் வேட்டை?

முந்திரிபருப்பு குழம்பு….


எனக்கு அப்ப ஆறு வயசிருக்கும்.
சமையன் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார்.
எங்க அம்மா வழி தாத்தா வீட்டில் பண்ணைக்காரர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுச் சென்ற பிறகு அப்ப தான் வருகிறார்.

எனக்கு அந்த தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.
வீட்டில் ,
வயலில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார்.

அவரின்றி ஓரணுவும் அசையாது.

காலையில் எந்திரிச்சதிலிருந்து தூங்கப் போகிறவரை அவர் ஏதாவது வேலையில் லயித்திருப்பார்.
எங்கம்மாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
சின்ன ஆயி கையால சோறு போட்டாத்தான் என் வயிறு நெறையும் கூழு” என்பார். ஆமா சின்ன வயசில் என்னை அப்படித் தான் கூப்பிடுவாங்க.

கருப்பா குண்டா கூலுமுட்டி மாதிரி இருப்பேனாம்.
அதுனால கூழுமுட்டி..அது சுருங்கி கூழு.
அவர் ஓய்வு பெற்று போறன்னைக்கு சரியா விளங்கிக்காம

ஏன் தாத்தா போறீங்க”ன்னு நான் கேட்டதுக்கு,

கண்ணு மங்கிப் போச்சு கூழு… முன்ன மாதிரி வேலை செய்ய முடியலை கடைசி காலத்தில்  மக வீட்டுல இருக்கலாம்னு போறேன்”னார்.
அவரை ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
அம்மாவுக்குந்தான்.
என்னவெல்லாமோ விசாரிச்சுகிட்டிருந்தாங்க.
நான் வழக்கம் போல வாய் பார்த்துகிட்டிருந்தேன்.
அப்புறம் சாப்பாடு போட்டாங்க வெள்ளை சுண்டல்கடலை புளிக்குழம்பு வச்சிருந்தாங்க, தேங்காயை சிறு சிறு துண்டா வேறு நறுக்கிப் போட்டிருந்தாங்க. நல்லா சாப்பிட்டார்.
அப்பாவின் வரவுக்காக காத்திருந்தார்.ரொம்ப நேரம ஆகவே “
சரி ஆயி அய்யா வந்தாங்கன்னா சொல்லிடுங்க வெளிச்சத்தோட போனாத்தான் இல்ல சிரமம்”னு கிளம்பிவிட்டார்.

வர்றேன் கூழு…”போய்விட்டார்.

சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட்டார்.
இப்பத்தான் போனாருங்க”

ஆமா எதுக்கப் பார்த்தேன்”

உள்ளே வந்த அப்பா அம்மாவிடம் கேட்டது.
அது என்ன முந்திரிபருப்பு குழம்பு.?”

பாவங்க ,வெறும் சுண்டல்கடலை குழம்பு.’”

அப்பாவும் “பாவம்” என்று வருத்தப்பட்டார்.
எனக்கு புரியவில்லை.

ஏம்மா தாத்தாவுக்கு என்ன கிறுக்கா..?
சுண்டல்கடலை குழம்பைப் போயி
முந்திரிபருப்பு குழம்புன்னு…..”

அவர் பாவம்டா…உனக்கெல்லாம் புரியாது”

 கொஞ்சம் புரியிறதுக்கு 26 வயசாச்சு.

 புரிய வைத்தது மகாபாரத்த்தின்  ஒரு கிளைக்கதை.
துரோணர் அஸ்தினாபுரத்தின் இளவரசர்களின் குருவாக பதவியேற்பதற்கு முன் மிக மிக ஏழ்மையில் வாடினாராம்.
அவருடைய மகன் அசுவத்தாமனுக்கு பால் வாங்கி கொடுக்க கூட முடியாத அளவுக்கு ஏழ்மையாம்.
அசுவத்தாமன பசும்பாலை குடித்தே அறியாதவனாம்.
பாலின் சுவை இன்னவென்று அறியாமலே வளர்ந்து வந்தானாம்.
இதைக்கொண்டு அவனைக் கேலி செய்து விளயாட நினைத்த சிறுவர்கள்  சிலர் அரிசிமாவை தன்னீரில் கரைத்துப்
பால் அசுவத்தாமா என்று கொடுத்தார்களாம்.
வாங்கி மடக் மடகென்று குடித்த அசுவத்தாமன்
பாலைக் குடித்துவிட்டேன் என்று ஆனந்தக் கூத்தாடினானாம்.
ஆனந்தத்தை தந்தையிடம் கூறிக் கொண்டாட குதித்தோடி
வீட்டுக்கு வந்தானாம்.
சந்தேகத்துடன் கடை வாயில் வழிந்ததை தொட்டெடுத்து

சுவைத்துப் பார்த்த துரோணர் பதறிப் போனாராம்.
தன் ஏழ்மை காரணமாக ,பாலின் சுவையே அறியாமல் மகனை வளர்க்க ,அரிசி மாவை பாலென்று நினைத்து மகன் அடைந்த ஆனந்தம், அவர் நெஞ்சைப் பிளந்ததாம்.
அவர் நெஞ்சைப் பிளந்ததோ என்னமோ,
அசுவத்தாமன் குடித்த பாலும் சமையன் தாத்தா சாப்பிட்ட முந்திரிப் பருப்பு குழம்பும் ஒன்று தான் என்று புரிந்து  எனக்குநெஞ்சு வலித்தது.
விதி அத்துடன் என்னை விட்டுருக்கலாம். என்னுடன் இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கனும்னு நினைச்சுச்சோ
;
கொடிது கொடிது வறுமை கொடிதுன்னு சுகமாக படுத்துகிட்டு பாட்டை மட்டும் கேக்குறவனுக்கு இல்லாதவங்க வலியை இன்னும் நெருக்கத்தில் நிக்க வச்சு காமிக்கனும்னு நினைச்சுச்சோ,
42 வயசில் உச்சி மண்டையிலேயே
 ஓங்கி அடிச்சிருச்சு.

என் வீட்டம்மா கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவங்க. நெசவுத் தொழில் நொடிச்சுப் போக சிரமப்பட்ட குடும்பம்.
நான் நல்லாத்தான் வச்சிருந்தேன்.அப்படித் தான் நினைச்சுகிட்டிருந்தேன்.
ஒரு தடவை ஒரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போயிருந்தோம்.
பால் பாயாசத்தோட பலமான சாப்பாடு.
அருகருகே உக்கார்ந்திருந்தா ஒரு வேளை என்னைய மட்டும் கேட்டிருப்பாங்க
எதிர் வரிசையில் இருக்கப் போயி கண்கள் பளபளக்க பொதுவில

கேட்டே விட்டாங்க
ஏங்க பாயாசத்தில் மஞ்சப்பொடி போட்டிருக்கீங்களா?”

நான் விக்கித்துப் போனேன்.
குங்குமப்பூ போட மஞ்சளாகியிருந்த பால் பாயாசத்தை
மஞ்சப்பொடி பாயாசமாக்கிட்டாங்க
நண்பரின் மனைவி விவரத்தை எடுத்துச் சொல்லி துபாயிலிருக்கும் அவர் அண்ணன் கொடுத்திருந்த குங்குமப்பூ டப்பாவையும் காண்பித்தார்.
அப்படியா ,நான் கேள்விப் பட்டிருக்கேன் ஆனா பார்த்ததில்லைன்னு அப்பாவியாக என் வீட்டம்மா சொல்ல
நான் சங்கொடிந்து போனேன்.

விருந்து வயிறை நிறைத்ததோடு
விழிகளையும் நிறைத்தது.
வீட்டுக்கு திரும்புமுன் ஒரு டப்பா குங்குமப்பூவை வாங்கிக் கையில்
கொடுத்து விட்டேன்.

ஆனா அன்னைக்கு பூராவும் சமையன் தாத்தா சாப்பிட்ட முந்திரிபருப்பு குழம்பு,அசுவத்தாமன் குடித்த பால், என்வீட்டம்மா சாப்பிட்ட மஞ்சப்பொடி பாயாசம் மூணும்  என் மார் மேல ஏறி உக்கார்ந்துகிட்டு இறங்கவேயில்லை.
இன்னும் எத்தனை பேர் எந்த எந்தப் பேர் வைத்து எதை எதை சாப்பிட்டுக்கிட்டிருக்காங்களோ?

 

குழந்தை பொம்மை..


எங்க ஏரியாவில்

ஒரு புது பைத்தியக்காரன்

ஆமாம்

இங்கே ஏற்கெனவே

நாலு பேரு…

இவன் அஞ்சாவது.

 

அவர்களைப் போலவே

இவனும் யாரையும்

ஒனறும் செய்வதில்லை..

 

அவர்களைப் போலவே

இவனும்

பழைய துணிகளை,

பழைய உடைமைகளை

அழுக்கு மூட்டைகளை

பிரிய மாட்டான்…

பிரியத்துடன்

சுமந்து திரிகிறான்.

 

அவர்களைப் போலவே

ஏதோ ஒரு கடந்தகாலப்

புள்ளியில்

இவனும்

லயித்து நின்று விட்டான்?

 

குழந்தை பொம்மை

ஒன்று,

மடியில்,

தோளில்,

இடுப்பில்

மாறி மாறி

 

 

 

கந்தல் சட்டை,

பொத்தல் ஸ்வெட்டர்..

போட்ட

குழந்தை பொம்மை..

 

இருப்பதும்

திரிவதும்

தாலாட்டிக் கொண்டே.

அங்க அசைவுகள்

அத்தனையும்

அதற்கு மட்டுமே

அத்தனை வாஞ்சை.

 

புதுசு…

கொஞ்ச காலத்துக்கு

வலிக்கும்…

 

 

 

 

 

 

 

 

கழிப்பறைகள் கம்மிங்கிறது சத்தியமான உண்மைங்க


நம்ம நாட்டிலே கழிப்பறைகளை விட கோயில்கள் அதிகம்னு சொல்லி ஒரு மந்திரி ,பாவம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.

ஆனா கழிப்பறைகள் கம்மிங்கிறது சத்தியமான உண்மைங்க.

சென்னையிலிருந்து பாண்டியன் எகஸ்பிரஸ் மதுரைக்குள் அதிகாலையில் நுழையும் போது சொந்த ஊரைப் பார்க்கும் ஆர்வத்தில் தப்பித் தவறி சன்னல் வழியா எட்டிப் பார்த்து விட முடியாது.

முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்டு காலைக்கடன்களை கழிப்பவர்களைப் பார்த்து க் கூசி விசுக்கென்று முகங்களை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெருநகரங்கள், சிறு நகரங்கள்,சிற்றூர்கள் என்று எல்லா பக்கமும் ரயில்தண்டவாளங்களின் இரு புறமும், திறந்த வெளி கழிப்பிடங்களாக இருக்கின்றன.

ரயில் பாதைகள்  மட்டும் என்றில்லை, சாலையோரங்களும் அப்படியே.

செல்போன் டவர் கட்ட ஊர் ஊராகச் சுற்றித் திரும்பும் முன்னிரவின் இருட்டில்  காரில் பயணிக்கும் போது திடீரென்று பாயும் வெளிச்சத்தில் அந்த அவஸ்தையிலும் கூசி எழுந்திருக்கும் பெண்களை சாலையோரங்களில் பார்க்க நேரிட்டிருக்கிறது. கொடுமையிலும் கொடுமை.

சென்னை மெரினா கடற்கரையில் யாராவது விடியற்காலையில் கடலோரத்தில் நடந்திருக்கிறீங்களா?

வீடில்லா பிளாட்பாரம் வாசிகளும், இன்ன பிறரும்  கடலோரத்திலேயே காலைக்கடனகள முடித்து விட்டு கடலிலே கழுவிவிட்டு விலகிப் போவதைப்

பார்த்து வெறுத்துப் போவீங்க. கடலும்  தலையெழுத்தே என மலக்குப்பைகளை அரும்பாடு பட்டுக் கரைத்து மண்ணோடு மண்ணாக்கும்.

இதெல்லாம் தெரியாத மக்கள மாலையில் சென்று கடலலைகளில் கால்களை நனைத்து விளையாடுகிறார்கள்.

பஸ் ஸ்டாண்டுகள்,மார்க்கெட்டுகள்,வாரச்சந்தைகள் கூடுமிடங்கள், பள்ளிக்கூட மைதானங்கள  எல்லாம் விடியுமுன்னரும், இருட்டிய பின்னரும்

கழிப்பிடங்களாகி விடுகின்றன.

சரி இருக்கிற பொதுக் கழிப்பறைகளாவது ஒழுங்கா இருக்கா?

கட்டணக் கழிப்பறைகளானாலும் சரி,கட்டணமல்லாத கழிப்பறைகளாலும் சரி,

பொதுமக்களின் ஒழுங்கீனத்தால்  பயன்படுத்த முடியாமல் நாறுகின்றன. பக்கத்திலேயே போக முடியாது.

தண்ணீர் இருந்தாலும் ஒழுங்காக ஊத்துறது கிடையாது. அடுத்தவன் உள்ளேயே நுழைய முடியாது.

கழுவும் தொழிலாளியும் எவ்வளவு தான் சுத்தப் படுத்த முடியும்.

அந்தத் தொழிலாளியையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்.

மனுஷ்யபுத்திரன் கவிதை வரிகள் நினைவுக்கு வருது..

என் மலத்துவாரங்கள் கூச

ஈரக் கைகளால்

எல்லாவற்றையும் பார்த்தபடி

மௌனமாய வேலை செய்கிறாள்

கக்கூஸ் தொழிலாளி..

 

மலத்துவாரம் கூசாட்டியும்

மனசாவது கூச வேண்டாமா?

 

கேரளாவில் இப்படி இல்லையாம். கேரளத்து நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நம்ம ஊரில்மட்டும் ஏன் தான் இப்படியோ?

நகரங்களில் மக்கள்தொகையின் அடர்த்திக் கூடி விட்டது  என்கிறார்கள்.

மொத்த மக்கள் தொகையில் 26 சதவிகிதம் நகரங்களில் வாழ்கிறார்கள்,அதனால் இந்த பிரச்சினை என்கிறார்கள்.

கிராமங்களிலும்  இந்தக் கேடு இருக்கே?

இது அரசாங்கம் மட்டும் முயன்று  தீர்க்கக் கூடியது இல்லீங்க.

நாமும் கொஞ்சமாவது நம்ம சுகாதாரத்தை நினைச்சு சேர்ந்து

செயல்பட்டாத் தான்  எதாவது தேறும்.

இல்ல நாறிப் போகும் நாறி.