அந்த ஆயா.


அப்பொழுது நான் சென்னை தம்பு செட்டித் தெருவில் ஒரு மேனிலைப் பள்ளியில் +1 படிச்சுக்கிட்டிருந்தேன்.
டிசம்பர் மாசம் முதல் வாரம். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்த உடற்பயிற்சி ஆசிரியர் கொடிநாளுக்கு உண்டியல் குழுக்க ஆள் ‘வேணும்’னார். யாராவது மூணு பேரு ‘வாங்க’ன்னார்.
அதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லாமல் உக்கார்ந்திருந்தவனை பக்கத்தில் இருந்த நண்பன் உசுப்பிவிட ,அவன் போக்குக்கு உடன்பட்டு கையைத் தூக்கினேன்.
நானும் இன்னுமிரண்டு நண்பர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தாட்சிக் கடிதத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.
அங்கு எங்களுக்கு ஒரு அரசு ஊழியர் உண்டியலகளையும்,சட்டையில் குத்திக்கொள்ளும் பாட்ஜ்களையும்,கொடிகளையும் குடுத்தார். மேலும் அரசு முத்திரை குத்தப்பட்ட ஒரு அத்தாட்சிக் கடிதத்தையும் குடுத்தார்.
அடுத்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு உண்டியல் குழுக்கி,முடிந்த அளவுக்கு சேர்த்து ஒப்படைக்க வேண்டும். பேருந்தில், மின்சார ரயிலில் எதில் வேண்டுமானாலும்,ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.பயணச்சீட்டு வாங்க வேண்டாம்.
நண்பன் ஏன் உசுப்பிவிட்டான் என்று புரிந்தது. இரண்டு நாட்கள் ஊர் சுத்தலாம்.

உதட்டுக்கு மேலே மீசை அரும்பு விட ஆரம்பித்திருந்த நேரம்..அதோடு
மனசுக்குள் ஏகப்பட்ட ஆசைகளும் அரும்பு விட்டிருந்தன.
குஷியாகிப் போனோம். ஆனால் ஒரு சின்ன கவலை. டப்பாவை நிரப்ப வேணுமே. வீட்டில் கெஞ்சிக் கூத்தாடி சில்லறைக்காசுகளாக வாங்கிப் பாதி நிரப்பிக் கொண்டோம். மீதியைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தோம்.
எங்கள் கவனம் உண்மையில் ஊர் சுத்துவதிலும், கலர்கலராக பார்த்துத் திரிவதிலும் தான். இடையிடையில் கொஞ்சம் நினைவு வந்து உண்டியல் குழுக்குவோம். அத்தனை சிரத்தையிருக்கவில்லை.
முதல் நான் மதியம் மூணு மணியிருக்கும். சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் நடைமேடையில் அமர்ந்து கொண்டோம். ஒவ்வொரு ரயிலாக வர வர இறங்கிச் செல்லும் பயணிகளிடம் உண்டியலை நீட்டிக் குழுக்குவோம்.
இருபதுக்கு ஒருத்தர் தான் ஏதாவது போடுவாங்க.அதுவும் பத்துபைசா. அதிகம் போனா நாலனா. சில பேரு திட்டக் கூட செய்வாங்க.இத்தனைக்கும் பார்வைக்கு வசதிப்பட்டவங்களா தெரிஞ்சவங்க கிட்ட தான் குழுக்குவோம்.
இடைப்பட்ட நேரத்தில் பெஞ்சில் உட்கார்ந்து கொள்வோம்.
அப்போது ஒரு ஆயா அங்கே உக்கார்ந்திருந்தது.. அது சாப்பாட்டுக் கூடை சுமக்கிற ஆயா.. அலுவலகங்களில் வேலை பார்க்கிறவங்களுக்கு அவர்கள் வீடுகளில் இருந்து சாப்பாட்டு டப்பாக்களை சுமந்து திரும்புகிற ஆயா.
மிச்சம் மீதி சாப்பாட்டை வழிச்சு அங்க இருக்கிற இல்லாதவங்களுக்கு காசுக்கும்,சும்மாவும் தருகிற ஆயா.
ரொம்ப நேரம் எங்களையே பார்த்துக்கிட்டிருந்துருக்கும் போல.
எங்களை கூப்பிட்டுச்சு.

“ஏன் கண்ணுங்களா படிக்கிற புள்ளைங்களா தெரியிறீங்க. நீங்க ஏன் உண்டியல் குழுக்கிறீங்க?

“இல்ல ஆயா கொடி நாளுக்காக குழுக்கிறோம்”, என் நண்பன்.

“அப்படின்னா..?
“இல்ல ஆயா நாட்டுக்காக ஊனமுற்ற ராணுவத்தினருக்கும் ,அவுங்க குடும்பத்தினருக்கும், ஏதாவது செய்யணும்னு வசூலிக்கிறது..”

“அப்படியா..இந்தான்னு…”

நல்லா நினைவிருக்கு…முந்தானையில் முடிஞ்சு வச்சிருந்த காசிலிருந்து மடிச்சு வச்ச ஒரு ருபாய நோட்டை போட வந்துச்சு’…

“இல்ல ஆயா நீங்க எதுக்கு வேணாம்”னோம்.
“இல்ல கண்ணுங்களா …யாருக்காகவோ இந்தச் சின்ன வயசுல குழுக்குறீங்க..
உங்க மனசு உடஞ்சுறக் கூடாது.. ஊக்கப்படுத்தணும்.. இல்லைன்னா
நாளைக்கு அடுத்தவங்களுக்காக,,,ஏன் எங்களுக்கே கூட உண்டியல் குழுக்க ஆளே இருக்காது .வாங்கிக்கங்கன்னு” போட்டுட்டு போயிருச்சு..

அது வரை அவ்வளவு சிரத்தையில்லாமல் குழுக்கிக்கிட்டிருந்த நாங்க
ஓடி ஓடி உண்டியலை குழுக்கிச் சேர்த்தோம்…

Advertisements

திருப்தி.


அது என்னமோ தெரியாதுங்க ..அம்மாங்க பிள்ளைங்களுக்குச் சமைக்கும் போது காய் ,கறி ,பலசரக்குச் சாமான்களோட கொஞ்சம் அவுங்க உசுரையும் சேர்த்து சமைப்பாங்க போல..
அம்புட்டு ருசி..
அவசரத்துக்கு வச்சுத் தர்ற வெறும் புளிச்சாறும் பருப்புத் துவையலும் கூட அம்புட்டு ருசியாயிருக்குதுன்னா வேற என்னங்க காரணமாயிருக்க முடியும்?

சில நாட்களில் ராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிருக்கேன்.
வீடும் பூட்டியிருக்கும். சுத்துச் சுவர் கேட்டும் பூட்டிக் கிடக்கும். ஏறிக்குதிக்க
சங்கடப்பட்டுக்கிட்டு …கூப்பிட்டா காது கேக்குமான்னு சந்தேகப்பட்டுக்கிட்டே
“அம்மா..”ன்னு ஒரே ஒரு தடவை தாங்க கூப்பிடுவேன்..
“இந்தா வந்துட்டேண்டா அய்யா”ன்னு எந்திரிச்சு வந்துருவாங்க…
தூங்காம …உசுரு கிடந்து அடிச்சுக்கிட்டிருக்கும் போல…
நமக்கே கூச்சமா இருக்கும்.. உள்ள போயி மேக்கொண்டு தொந்தரவு செய்யாம கவுந்தடிச்சு படுத்துக்கத் தான் பார்ப்பேன்…”சாப்பிட்டுட்டேம்மா”ன்னு பொய்யைச் சொல்லிட்டு…
“இருடா கொஞ்சம் போல சாப்பிட்டுப் படுடான்னு..”
இருக்கிற சோத்தைப் போட்டு.. ரசத்தை சூடு பண்ணி ஊத்தி, பிசைஞ்சு தருவாங்க. அந்த நேரத்திலும் “சும்மா சாப்பிட மாட்டானே”ன்னு ஒரு கருவாட்டுத் துண்டை எண்ணையில் பொரிச்சுத் தருவாங்க..
“போயிப் படுத்துக்கங்கம்மான்னா’’ மாட்டாங்க..
கூட இருந்து சாப்பிட வைப்பாங்க…
இந்த வயசிலயும் சாப்பிட்டவுடன் சாப்பிட்ட கையைப் பிடிச்சு கழுவிவிட்டு
வாயை துடைச்சி விடுவாங்க..
இது எல்லாஞ்சேர்த்துத் தான் அந்த ருசி வருதோ என்னமோங்க…

இந்த உணவு விடுதியிலெல்லாம் என்னென்னமோ காய்களெல்லாம் போட்டு கலர் கலராத் தான் வைக்கிறாங்ய….வம்பாத் தாங்க முழுங்க முடியும்..
திருப்தியா இருக்காதுங்க…..

அம்மா கையால சோறு போட்டா வயிறு நிறைஞ்சு உசுரு குளுந்து போவுங்க.

ஆனா ஒரு விஷயத்தில் இந்த உணவகங்கள்ளாம் கெட்டிக்காரங்ய..
காய் மாறும்,கலரும் மாறும் ஆனா ருசி மட்டும் மாறவே மாறாதுங்க…

பொண்டாட்டியும் பிரியமாத்தாங்க வகை வகையா சமைச்சுப் போட்டாங்க..ஆனா அம்மா ருசி வராதுங்க..சொல்லாமயும் இருக்க முடியாது… வாங்கிக் கட்டாமயும் இருக்க முடியாது…
எனக்கு கலியாணம் ஆன பிறகு தான் அப்பா அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல் வர்ற சண்டைகள் புரிய ஆரம்பிச்சுச்சு..
நம்ம பிள்ளைங்களுக்கு வேணுமின்னா அவுங்க சமையல் உச்சபச்ச ருசியாகலாம்..
நமக்கு நம்ம அம்மா சமையல் தாங்க…
அவுங்க கைப்பக்குவம் மாதிரி வேற
உள்ள இறங்குமா?

நீ மாயன்.


நீ மாயன்!
விளங்காத மர்மம்.
கண்டிராத
ஆழம்..
ஆழி!
இக்கணம்
முழ்கி
மரித்துக் கொண்டிருக்கிறேன்
உன் ஆழத்துக்குள்.

மரித்துக் கொண்டிருக்கும்
நானும்
மெல்ல மெல்ல
எனக்கு
மர்மமாகிறேன்.

உன்னிடம்
என்னை
ஒப்படைக்கிறேன்..
கொட்டும் மழையில்
முழுக்க நனையும்
மாந்தோப்பைப் போல..

பெத்தவங்க ரேஞ்சே வேறங்க


பெத்தவங்க மனசு பிள்ளைங்க நலனைத் தவிர வேற எதையுமே நினைச்சுப் பார்க்காதுங்க…
நானெல்லாம் இதை ரொம்பத் தாமதமா புரிஞ்சுக்கிட்டவன்..
உள்ளதைச் சொல்லணும்னா மண்டைய உடைச்சு அப்புறம் மருந்தைக் கட்டுறவன் தான் நான்..
இளவயசுல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அவுங்களை ஆட்டி வச்சவன் தான்..
நினைச்சாலே மனசு கூசுது…
ஏதோ இந்த வயசுலயாவது அவங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கமேங்கிறதில
ஒரு சின்ன ஆறுதல்..
வேலைக்குப் போனதில் இருந்து அப்பா கறாரா “மாசம் ஏதாவது குடுடா”ன்னு கேப்பாரு.. நான் தான் ஊதாரியாச்சே. எப்பவாவது கொஞ்சமா சலிச்சுக்கிட்டே குடுப்பேன்…
நான் குடுத்ததெல்லாத்தையும் எம்பேரிலேயே வங்கியில் போட்டுட்டு வந்திருக்காரு..
இன்னைக்கு அது பெரிய தொகையா வளர்ந்து நான் கஷ்டப்படும் போது கைகுடுக்குது..
ஒரே ஒரு தடவை தான் மனுசனா நடந்துக்கிட்டேன்..
வெயில் தாள முடியாம a/c வாங்கி மாட்ட முடிவு செஞ்சேன்.அப்ப திருச்சியில் இருந்தேன்..
ஒரு குத்த உணர்ச்சி கிடந்து அரிச்சிருச்சு.. அம்மா,அப்பாவுக்கு வாங்கி மாட்டாம் நான் மட்டும் அனுபவிக்கிறதா…
முத வேலையா ஊருக்கு ஓடிப் போய் ரூ 20,000த்தை குடுத்து “வாங்கி மாட்டிக்கங்கப்பா”ன்னு வந்துட்டேன்.. நானே வாங்கி மாட்டிருந்துக்கணும்..லீவு கிடைக்கலீங்க…
நான் திருச்சி திரும்பி ஒரு a/c ய வாங்கி மாட்டிக்கிட்டு சந்தோசமாயிட்டேன்.
ரெண்டு மூணு மாசம் கழிச்சு ஊருக்குப் போனேன்..
a/c ய காணோம். “என்னப்பான்னு” கேட்டா
“எங்களுக்கு எதுக்குடா இத்தனை வயசுக்கப்புறம் அதெல்லாம்”னுட்டார்.
“காசை என்னப்பா பண்ணினீங்க”, கேட்டதுக்கு
“நீகுடுத்த காசோட எங்ககிட்ட இருந்த்தையும் சேர்த்து ரூ50,000த்தை உன்பேரில் ஒரு TDR எடுத்துட்டேண்டா”ன்னுட்டார்..
என்னால மனுசனாகத் தான் ஆக முடிஞ்சது..
பெத்தவங்க ரேஞ்சே வேறங்க. அவங்கள்ளாம் தெய்வங்க…

பண்பாட்டு அசைவுகள்


திரு தொ. பரமசிவன் அவர்களின் “அறியப்படாத தமிழகம்” எனும் கட்டுரைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்…
அனைத்தும் ஆய்வுக் கட்டுரைகள். கள ஆய்வுகளுக்குப் பிறகு எழுத்தில் வடிக்கப் பட்டவை.
அவற்றில் ஒன்று “பண்பாட்டு அசைவுகள்”.
அது என்னை அசைத்தது நிசம்..
அதை அப்படியே தருகிறேன்..
கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

“பண்பாட்டு அசைவுகள்”
இக்கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தில் கண்ட நிகழ்ச்சி இது. அது ஒரு சிறிய நகரம்.ஆனாலும் தெருக்கள் சாதிவாரியாகவே அமைந்திருக்கின்றன.இருபத்தெட்டு வயது உஅடைய இளைஞர் ஒருவர் விபத்தொன்றில் இறந்து போனார்.அவருடைய மனைவிக்கு வயது இருபத்துமூன்று.மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இரூந்தது.

அந்தப் பிற்பகல் நேரத்தில் பிணத்தை எடுத்துச்செல்ல ஊரே திரண்டிருந்தது.
ஆண்கள் இழவு வீட்டிற்கு வெளியே பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர்.வேறு சிலர் நின்று கொண்டிருந்தனர். ஒருபுறத்தில் இறுதிஊர்வலத்திற்கான மேளச் சத்தமும் அதற்குரிய நாதசுரமும் ஒலித்துக் கொண்டிருந்தன.வீட்டிற்குள் பெண்கள் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தனர்.

திடீரென்று மேளச் சத்தம் நின்றது.இழவு வீட்டிற்கு உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளியில் வந்தார்.பேசிக்கொண்டிருந்த ஆண்கள் பேச்சை நிறுத்தினர்.
அம்மூதாட்டியின் கையில் தண்ணீர் ததும்பி வழியும் செம்பொன்று இருந்தது.
அந்த தண்ணீர்ச் செம்பை அவர் கூட்டத்தின் நடுவில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.அவரது வலக்கையில் ஏதோ மடக்கி வைத்திருந்தார். கூர்ந்து பார்த்த்தில் அவை உதிரி பிச்சி (முல்லை)ப்போக்கள் என்று தெரிந்தன.
அவர் கூட்டத்தை ஒரு முறை நிதானமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர்
கையில் இருந்த பிச்சிப் பூக்களில் ஒன்றை செம்பில் நிறைந்த நீர் மீது இட்டார்.
கூட்டம் மூச்சடங்கியது போல அமர்ந்திருந்தது. பின்னர் இன்னொரு பூவை செம்புத் தண்ணீரின் மேலிட்டார்.இரண்டு பூக்கள் செம்பு நீரில் மிதப்பது எல்லார் பார்வைக்கும் தெரிந்தது. கூட்ட்த்தில் இருந்த பெரியவர்கள் ச்சூ..ச்சூ என்று அனுதாபத்தோடு ஒலியெழுப்பினர்..பின்னர் அம்மூதாட்டி மூன்றாவது பூவையும் நீரில் விட்டார். கூட்டம் மறுபடியும் அனுதாப ஒலி எழுப்பியது.ஒன்றிரண்டு நொடிகள் கழிந்த பிறகு அம்மூதாட்டி நீரிலிட்ட மூன்று பூக்களையும் கையில் எடுத்துக் கொண்டு செம்பு நீரைத் தரையில் கொட்டிவிட்டு விடுவிடுவென்று இழவுவீட்டிற்குள் சென்றுவிட்டார். கூட்டத்தில் அனுதாப ஒலியோடு பேச்சும் எழுந்தது. “ம் பாவம்…. என்னத்த சொல்லுறது”.

கூட்ட்த்தில் ஒருவனாக நின்று இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கட்டுரையாளர்,கூட்டத்தில் இருந்த பெரியவரிடம் இதுபற்றிக் கேட்டபோது கிடைத்த பதில் “இது தெரியலையா ஓனக்கு… தாலி அறுத்த பொம்பளப்புள்ள மூணு மாசமா முழுகாம இருக்கு “. விவரம் புரியாத கட்டுரையாளர் திரும்பக்
கேட்டார். “அந்த பொண்ணு முழுகாம இருக்கிற விஷயத்தை ஏன் ஊருல சொல்லணும்?”. கட்டுரையாளரின் கேள்வி எரிச்சலோடு அமைந்திருந்த்து.
ஒரு பெரியவர் இடைமறித்துச் சொன்னார் ,”பேரப்புள்ள ஏழு மாசம் கழிச்சு அவ புள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா எப்படி புள்ள வந்திச்சுன்னு”

கட்டுரையாளர் அதிர்ச்சியாலும் அவமானத்தாலும் குன்றிப் போனார்.
“இதோ இந்தப் பெண் இறந்து போனவனுக்ககாக வயிறு வாய்த்திருக்கிறாள்.ஏழு மாசம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தந்தை இன்றைக்கு இறந்து போனவன் தான்”,என்று ஊரும் உலகும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் பேசப் படும் ‘வரைவு கடாதல்’ துறையின் பெருமை கட்டுரையாளருக்கு அப்பொழுது தான் புரிந்தது. பிறக்கின்ற எந்த மனித உயிரும் தந்தை பெயர் அறியாமல் பூமிக்கு வரக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு புரிந்தது.

இந்தச் சோகத்துக்கு ஊடே சிறிய மகிழ்ச்சி தந்த மற்றொரு செய்தியும் உண்டு. ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது.

-திரு தொ.பரமசிவன்,அறியப்படாத தமிழகம்,பண்பாட்டு அசைவுகள்.காலச்சுவடுவெளீடு,பக்கம்-82,83.(நன்றி காலச்சுவடு.)