கூழு!


‘இந்தா ஒத்தாலமரம்..அடுத்து சுடுகாடு வரும்….’
சுடுகாடும் கடந்தது…
‘இங்க வச்சுத்தான் எல்லாம் முடிஞ்சிருக்கும்..
இதே சுடுகாட்டுல வச்சுத்தானெ.. என் பேய் பிசாசு பயத்தை ஓட்டினான் ,அரசு.
இந்த சுடுகாட்டுல தோண்டியெடுத்த மண்டையோட்டையும்,எழும்புகளையும் வச்சுக்கிட்டு அன்னைக்கு நெடுஞ்சாலையில் நட்டநடுவில் நிண்டு வண்டிக்காரங்யள அவன் பயமுறுத்தி அடிச்ச லூட்டி..’

உதயனுக்கு அடிவயித்திலிருந்து ஏதோ ஒன்று கிளம்பி மேல வந்து நெஞ்சை அடைத்தது…
“சந்தையில இறங்கிறவங்க முன்னால வந்திருங்க”.
நடத்துனர் குரல் அவன் துக்கத்தை இடைமறிக்க..சுதாரித்து எழுந்து முன்னால் சென்று காத்திருந்தான்..
வண்டி நிற்க தயங்கித் தயங்கி இறங்கினான்..
‘எல்லாம் முடிஞ்சப்பெறகு போயி என்ன செய்யப்போறோம்….துக்கத்தை தாங்க முடியாம அதைக் கடக்க செரமப்பட்டிக்கிட்டிருக்கிற பொண்டாட்டி,பிள்ளைங்களை விசாரிக்கிறேன்னு திருப்பி அழ வைக்கத் தானே போறோம்… பேசாம
அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு போயிறலாமா?’
‘சாலையைக் கடந்து விட்டால் எதிர் திசையில் வரும் பஸ்ஸில் ஏறிவிடலாம்..’

கடக்க முயலுகையில் எதிரில் ஒரு அரை பாடி வண்டி வேகமாக வர பின்வாங்கினான்.
அவனைத் தாண்டிச் சென்ற வண்டி முன்னேறிச் செல்லாமல் சரக்கென்று நின்றது…
“உதயா டேய் உதயா…”நின்ற வண்டியிலிருந்து தான்..
பக்கத்தில் போவதற்குள் அதிலிருந்து குதித்திறங்கினான் ஜெயா…ஜெயபாலன்!
“வர்றேன்னு போன் போடிருக்கலாம்லடா. சரி வந்த பெறகாவது கூப்பிட்டிருக்கலாமலடா?”
உதயன் பேசாமலிருக்க.”..சரி சரி வந்துட்டேல்ல வா…”
வண்டிப்பக்கம் திரும்பி உதவியாளனிடம்,”டேய் இன்னைக்கு நீயே லோடடிச்சிரு…வேலை முடிஞ்சவுன்ன கூப்பிடு…”
“ நீ வாடா உதயா…
அரசு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்கிட்ட பூராத்தையும் சொல்லணும்…
வா அரசு கடைக்கே போயிறலாம்… அங்க தான் பேசுறதுக்கு வசதி..”

நெடுஞ்சாசையைக் கடந்து நாலெட்டில் அரசு கடையை அடைந்தார்கள்..

அரசு கடை உண்மையில் ஒரு பட்டறை. அந்த நகரமயமாகிக்கொண்டிருக்கும் பெரிய கிராமத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் மூன்று நான்கு பட்டறைகளில் அதுவும் ஒன்று.
உள்ளே இரண்டு இளவட்டங்கள் ஒரு மோட்டாரைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“வாடா உள்ள வா ….உக்காருன்னு “. பெஞ்சைக் காட்டினான்…ஜெயா.
“செயபாலண்ணே… வாங்க..”
உதயனுக்கு அவர்களைத் தெரிந்திருக்கவில்லை…அவர்களுக்கும் அவன் புதுசு.
“சாரு?”
“சாரா…உதயன்…உதயசூர்யன்…அரசு அடிக்கடி சொல்லுவான்லப்பா…”
“அந்த அண்ணனா…?”
விருட்டென்று எழுந்து கொண்டார்கள்.
“வாங்கண்ணே… காபி வாங்கியாரட்டுமாண்ணே..?”
“கேக்குறீங்க? யாராவது போயி வாங்கிட்டு வாங்கடா..”
ஒருத்தன் இறங்கி ஓடினான்.
“ஏண்டா உதயா எதுவும் பேச மாட்டேங்கிற?”

“என்னடா பேச…?எங்கிட்ட சொல்லாமேயே ….”அதூவரை அடக்கி வைத்திருந்தவன் உடைந்து விம்மினான்.
“அழுகாதடா….”,சொன்னானே தவிர உதயனைத் தோளில் சாய்த்துகொண்டு அவனும் சேர்ந்து கண்ணீர் வடித்தான்.
“அண்ணே…அண்ணே…”
இரண்டு நடுத்தர வயது ஆண்கள் கட்டிசேர்ந்து அழுவதைப் பார்த்திராத அந்த இளவட்டம் தான் பதறிப் போய் கூப்பிட்டான்..
பிரிந்தவர்கள் முகத்தைத் துடைத்துக்கொண்டார்கள்..
மூக்கை உறிஞ்சி காரித் துப்பினான் ஜெயா.
“கொஞ்சம் தண்ணி குடுறா தம்பி …”
செம்பை வாங்கி வாயைக் கொப்புளித்துவிட்டு உதயனுக்கும் கொடுத்தான்..
மற்றவன் காபி கொண்டு வர வாங்கி முழுங்கிக் கொண்டார்கள்..
ஒரு சிகரெட்டைப் பத்தவைத்துக் கொண்ட ஜெயா…இன்னொன்றையும் தீப்பெட்டியையும் உதயனுக்கு கொடுத்து விட்டு…
அமைதிப் படுத்திக்கொள்ள இரண்டு இழுப்பு இழுத்துவிட்டான்.
மெல்ல ஆரம்பித்தான்:
“சொல்லல சொல்லலங்கிற.. அரசு தான் உனக்கு சொல்ல வேணாம்முட்டான்…
என்னைய என்ன செய்யச் சொல்லுற …எல்லாம் முடிஞ்சபெறகு சொல்லிர்றான்னான்… அவன் சொன்னபடி நடந்துகிட்டேன்…
நீ வந்து எகிறுறே…”
“அவன் சொல்லக் கூடாதுன்னா நீ சொல்லாம் இருக்கலாமா…?”
“ டேய் உதயா என்னைய என்ன செய்யச் சொல்லுற …நான் அவனுக்கும் விசுவாசமா இருக்கணும்டா…
அவன் உன்னைய செரமப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சான்.. ஏற்கெனவே
அவன் மக கலியாணத்துக்கும் பையன் படிப்புச் செலவுக்கும் நீ நிறைய உதவியிருக்க… இனியும் உதயனை தொந்தரவு செய்யக் கூடாதுடாண்ட்டான்… தெரிஞ்சா உதயன் ஓடி வந்து நிப்பாண்டா… வேணாம்டா…அப்படித்தான் அவன் சொன்னான்…”

குத்தவைத்துக் வாய்பார்த்துக் கொண்டிருந்த இளவட்டங்களில் ஒருத்தன்
தைர்யம் கூடி ஜெயாவின் உதவிக்கு வந்தான்,
“உங்களுக்கு மட்டுமில்லண்ணே எல்லாருகிட்டேயும் மறைச்சிருக்காரு..அவர் பையன் தான் கண்டுபிடிச்சிருக்காரு.. அவருக்குத் தொண்டையில் புத்துநோயின்னு அவரு மகனுக்குத் தெரியும் போதே முத்திப்போச்சு..”
“ஆமாண்டா …அவன் மகனும் படாதபாடுபாட்டுக் காப்பாத்த பார்த்தான்… முத்திப்போச்சுன்னுட்டாங்ய…. பாவிப்பய செலவு அத்துரும்னு மறைச்சுட்டான்…”
“ரொம்பக் கஷடப்பட்டானாட…?”
“கடைசியில் ரொம்ப பட்டாண்டா…பேச்சு படிப்படியா கொறைஞ்சு…நிண்டு போச்சு… வாயிலிருந்து வாணியா வடிஞ்சு….”,பேசமுடியாமல் நிறுத்தி சிகரட்டை உறிஞ்சினான் ஜெயா.
“ அப்பக் கூட தோளில் கிடக்குற துண்டில துடைச்சுக்கிட்டு எழுதி எழுதிப் பேசுவாருண்ணே…..”,இரண்டாவது இளவட்டம்.
“அவன் ரோசக்காரண்டா.. தெம்பு இருக்கும்போதே எல்லாத்தையும் பைசல் பண்ணிட்டாண்டா ..
இருந்த இரண்டு ஏக்கரை வித்து பெரும்பகுதிக் கடனை அடைச்சுட்டாண்டா….
கொஞ்சக் கடன் பாக்கி இருக்கு அதுக்கும் வழி சொல்லீட்டுப் போயிட்டாண்டா..
வீட்டை ஓத்தி வச்சு அதையும் நேர் பண்ணச் சொல்லீட்டாண்டா..”
“கடை…?”
“அவனைப் பத்தி உனக்குத் தெரியாதா…ஒரு வருசமா இவங்ய தானெ எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்ய.. இவங்யளையே நடத்திக்கங்கடாண்ட்டான்..”
“ஆமாண்ணே.. தொழிலையும் கத்துக்கொடுத்து கடையையும் நடத்திக்கங்கடான்னு குடுத்துட்டாரு… “,தழுதழுக்கச் சொன்னார்கள் அந்த இளவட்டங்கள் இருவரும்.
“உங்கிட்ட வாங்கினது மட்டுந்தான் பாக்கி…கணக்கு வழக்கில்லாம வாங்கியிருக்கேன்னு சொன்னானே ஒழிய அதுக்கு அவன் வழி சொல்லல…”
“டேய் என்னையக் கொல்லாதடா….அவந்தான் ஒதுக்கி வச்சு என்னைய உசிரோட கொன்னுட்டான்னா.. நீயும் கொல்லாதடா..”
“போடா போ.. உன்னைய ஒரு வகையில் அவன் ஒதுக்கி வச்சு காப்பாத்திருக்காண்டா…கடைசி 20 நாளு அவன் பட்ட கஷ்டம் சகிக்கலைடா…
சத்து ஊசியோ வலி ஊசியோ நெதம் ஒரு ஊசி… சாப்பாடு கிடையாது… எல்லாம் தண்ணியா …. குழாய் வலியா..அவனுக்கே பிடிக்கலே…
யாரையும் ரொம்பவும் தொந்திரவு பண்ணல …முடிஞ்ச மட்டும் பல்லைக் கடிச்சிக்கிட்டான்…தூக்கத்திலேயே போயிட்டான்..விடிஞ்சு தான் தெரியும்…”,
இறுக்கம் கூடிப்போக அடுத்த சிகரெட்டை இருவரும் பத்தவைத்துக் கொண்டார்கள்…
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த ஜெயா,
“உனக்கு சொல்லலன்னு கொறச்சாலம் போட்டுகிட்டே இருக்காதடா! ஆக வேண்டியதைப் பாருடா உதயா…”
“அந்தப் புள்ளையையும் பையனையும் பார்த்து…. என்னத்தடா சொல்லி தேத்துறது…எனக்கே இழப்புச் சம்மதிக்கல்ல..அவங்ய…முடியலடா…”.
“மிரண்டு போயிருக்காங்யடா… எங்களை விட
படிச்சவன்… ஊரு உலகம் சுத்தி வந்தவன்.. நீதாண்டா எதாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லணும்…தேத்தணும்”
சிகரெட்டை அணைத்துவிட்டு, “வா போகலாம்…”.
கடையைவிட்டு இறங்கி நடந்தார்கள்.. போகும் போது மாரியாத்தா கோவில் எதிர்பட்டது..
‘இந்தக் கோயிலுக்கு கம்பிக் கதவு எல்லாம் அரசு தான் செஞ்சு போட்டான்..’
‘கைவிட்டுட்டியே ஆத்தா…’
‘பழைய பரம்பரை வீடு… 150 வருசமிருக்கும்.. ஒத்தி வைக்க போறாங்ய..
பையனுக்கு வீடு வாய்க்கணும்…திருப்ப ஏதாவது உதவி செய்யணும்…

உள்ளே நுழைய இருந்தவர்களின் அரவம் கேட்டு ஓடி வந்தது ஒரு நாய் குட்டி… வெள்ளைவெளேர்னு… ஜெயாவைக் கண்டதும் தாவிக் குதித்தது.
“யாரு?”
“ஜெயா வந்திருக்கேம்மா…”
“வாங்கண்ணே…”
வெளியே வந்தவள்… உதயனைக் க்ண்டு மிரண்டு ஒடுங்கினாள்..
சொல்லலைங்கிற சங்கட்டமா….காசுகீசு கேப்பான்னு பயமா.?

“வாங்கண்ணே… டேய் சேகரு…… மாமா வந்திருக்காரு…”,உள்ளே இருந்தவனைக் கூப்பிட்டாள்.
அப்படியே பட்டாசாலையில் தரையில் உக்கார்ந்தவர்களை…
“சேரை எடுத்தாரண்ணே…”
“அது எதுக்கும்மா உதயன் என்ன வேத்தாளா?..விடு”
கதவுகிட்டப் போயி பம்மி நின்றுகொண்டாள்.
உள்ளிருந்து வந்த சேகரும் .உதயனைக் கண்டு வகை தெரியாமல் தயங்கி நின்றான்.
ரொம்பத் தான் மிரண்டு போயிருக்காங்ய...
“வாடா அய்யா இங்க வா….”உதயன் கூப்பிட…
தயக்கம் உடைந்து ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதான்…
அடித் தொண்டையில் அவன் அலறியது உதயன் நெஞ்சை உடைத்தது…
மகன் அழுவதைக் கண்ட அரசு சம்சாரமும் விம்மினாள்..
அந்தக் குட்டி நாய்க்கு ஏதோ புரியும் போல …
சேகரை முனங்கிக் கொண்டே நக்கி கொடுத்தது.

“என்ன உதயா எதாவது இதமா பேசி தேத்துவியா? அழவிட்டுக்கிட்டிருக்க… ஒரு வருசமா அழுகிறாங்யடா…”
‘ஆமா எம்புட்டுத்தான் அழுவாங்ய…திராணி கூட இருக்காது ந்ல்லாச் சோறு சாப்பிட்டு ஒரு வருசமாயிருக்கும்..
மனசைத் திடப்படுத்திக்கொண்டான் உதயன்..
“அய்யா சேகரு…அழாதய்யா..போதும்யா…
நீயும் அழாதம்மா….
போனவன் பட்ட பாடெல்லாம் வீணாக கூடாதுய்யா…
எந்திருச்சு நிக்கணும்யா..”

“பயந்து வருது மாமா…”

“பயப்படாத…ஊக்கமா இருக்கணும்… நான் இருக்கேன்..ஜெயா இருக்கான்..ஆமா பத்மினி எங்க?”
பதிமினி அரசுவின் மகள்.
“அவ புருசன் வீட்டுக்கு போயிட்டா.. நேத்துத் தான். தலைமுழுக்கு முடிஞ்ச கையோட”, மெதுவாக விவரத்தைச் சொன்னாள் அரசு சம்சாரம்.

“நீ எப்படா வேலைக்குப் போகணும்…?”

“இன்னும் இரண்டு நாளில லீவு முடியுது . போகணும் மாமா..அங்க போய் வீடு பார்க்கணும்..
இது வரை அடுத்தவங்களோட ஒண்டிக்கிட்டு இருந்தாச்சு…அம்மாவ கூட்டிக்கிட்டுப் போகணும்..ஏகப்பட்ட வேலை மாமா …ஓண்ணும் புரியல..”

“ஒண்ணும் கவலைப்படாத. எல்லாம் ஒண்ணோன்னா அதுவா நடக்கும்..24 வயசுல இம்புட்டு செஞ்சிருக்க…இனி செய்யமாட்டியா? நீ ராசாடா..அய்யா..”.
இன்னும் சொன்னான்,“அம்மாவ பார்த்துக்…உன்னையப் பார்த்துக்க…வீட்டை மீக்கணும்…நினைவில வச்சுக்க…ஒத்தாசைக்கு நாங்க இருக்கோம்..ஜெயா… நானு…எப்பவேண்ணா எதுக்குவேண்ணா கூப்பிடு…”

“உங்களை ரொம்ப செரமப் படுத்தியாச்சுண்ணே உங்க பாக்கிக்குத் தான் என்ன செய்யப்
போறோமுன்னே புரியலண்ணே….”
“கூறுகெட்ட தங்கச்சி….. அந்த லூசுப்பய தான் என்னைய விலக்கி வச்சு கொன்னுட்டான்..
நீயும் அந்நியமா பார்க்காத…”
பேச்சை மாத்த விரும்பிய ஜெயா குறுக்கிட்டு,“ஏம்மா வந்தவனுக்கு ஏதாவது குடுக்கலாம்ல? மத்தியானம் ஆகப் போகுது…
இவனும் ஓண்ணுமே சாப்பிடல…”,.என்றான்.
“சேகரு போயி கலரு வாங்கியாடா…”
“எதுக்குடா.. வேணாம்டா”
“வாங்கியாரட்டுமுண்ணே”.
சேகர் சட்டைய மாட்டிக்கொண்டே வெளியேறினான்…
“ஏம்மா சேகரோட பெங்களூர் போகப் போறீயா..?”
“ஆமாண்ணே..கடங்காரங்க நெருக்குனாங்க .. அதக் குடுக்க ஒத்திக்கு ஒத்துக்கிட்டு முன்பணம் வாங்கியாச்சு…காலி பண்றதுக்கு ஜெயாண்ணே தான் பேசி டயம் கேட்டிருக்கு.. நாம்போயித்தானே ஆகணும்?
“சரி சரி அவன் முதல்ல வீடு பிடிக்கணுமுத்தா..எல்லாம் பார்த்துக்கலாம்…”.ஜெயா சமாதானமாகச் சொன்னான்.

“இதுல இந்த நாய்க்குட்டிய என்ன பண்ற்துன்னு தெரியலண்ணே…பெங்களூரில் எல்லாம் அடுக்குமாடி வீடுகளாமே… நாய் வச்சிருந்தா வாடகைக்கு விட மாட்டங்களாமே…”
“பதிமினிகிட்ட குடுத்துரு…”
“அவ வீட்டுல மாட்டேன்னுட்டாங்க…அவரு ஆசை ஆசையா வளர்த்தது…”
“இதை எப்படா ஆரம்பிச்சான்…”
“5 மாசமிருக்கும்டா உதயா.ரொம்ப மன அமைதியில்லாம இருந்தான்.. மனசை மாத்த நான் தான் வாங்கி குடுத்தேன்..ஏதொ கலப்பினம்…”.
“ஆமாண்ணே .அவரு சாப்பிட முடியாததெல்லாம் அதுக்குப் போட்டு சந்தொஷப்படுவாரு.. பேச்சு சுத்தமா நின்னு போனவுடன் அது கூடத் தான் ரொம்ப ஓட்டிக்கிட்டாரு…. அதுவும் அவரைப் பிரியாது .தலைமாட்டிலேயே கிடக்கும்.
ராத்திரி சின்ன சத்தம் குடுத்தாக் கூட அது தான் முதல்ல எந்திரிச்சு அவரு கிட்டப்போகும்…”

“மாமா இந்தாங்க …சாப்பிடுங்க…”
திங்க பிஸ்கெட்டும் குடிக்க பவண்ட்டோவும் வாங்கியாந்திருந்தான்.
முறைக்கு பாக்கெட்டை உடைத்து… இரண்டை கையிலெடுத்துக்கொண்டு மீதியை கீழே வைத்தான்.

அந்த வெள்ளை நாய்க்குட்டி பக்கத்தில் வந்து அதை ஆசையுடன் முகர்ந்து பார்த்தது…

“டேய்…டேய்…கூழு…..வேணாம்….”,பிடித்திழுத்தான் சேகர் அதைப் பின்னுக்கு பதறி..
அது பாவம் கிடந்து முண்டியது…
“விடுய்யா சேகரு….வாடா….இந்தா…”, வாய்க்கு கொண்டு போனதை அதுக்கு நீட்டினான்..
தாவிக் கவ்விக் கொண்டது..அஙகேயே அப்படியே படுத்துக் கொண்டு சுவைக்க ஆரம்பித்த்து…
அதன் தலையைத் தடவிக் கொடுத்த உதயன் கேட்டான், “இது பேரு கூழா? யாரு வச்சது?
“அப்பா தான் வச்சாரு… ஆசை ஆசையா வச்சுக் கூப்பிட்டாரு..”
.
“நல்லா கொழுக் மொழுக்குன்னு இருந்துச்சா….கையில எடுத்தா நெளு நெளுன்னு இருக்கும் அதான் அப்படி வச்சாரு போல..”, -இது அரசு சம்சாரத்தின் விளக்கம்.
கண்களில் நீர் கோர்க்க உதயன் ஜெயாவைப் பார்க்க…அதைப் பார்க்க சக்தியில்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்..ஜெயா.
“ஏம்மா இதை எனக்கு குடுத்துருறியா…. நான் கொண்டு போயி வளர்த்துக்கிறேன்…”,
…. ஏனோ அவன் குரலில் ஒரு கெஞ்சல் புதுசாகப் புகுந்திருந்தது….

“எதுக்குண்ணே உங்களுக்கு வீண் சிரமம்….?”
“இல்லம்மா இதை என்ன செய்யிறதுன்னு தெரியல்லியேண்ணியே…”,என்றதில் கெஞ்சல் கூடியிருந்தது…

“அவங்கிட்ட குடுத்துரும்மா…அவன் எடுத்துட்டுப் போகட்டும்…”,ஜெயா இடைமறித்து முடிவாகச் சொன்னான்…
“நீ எடுத்துக்கிட்டுப் போடா உதயா…”,உறுதியும் செய்தான்…
கிடைத்த்தை தின்றிருந்த கூழு அடுத்த பிஸ்கட்டுக்காக பாக்கத்தில் வந்தது…
வாரியெடுத்துக்கொண்டவனை முகம் நனைய நக்கிக் கொடுத்தது…கூழு..
அடுத்த துண்டுகளைப் போட கவ்விக்கொண்டு திங்க ஆரம்பித்தது…
அது திண்பதை பார்த்துக்கொண்டே .”..உம் பேரு கூழாடா…?”,கொஞ்சினான் உதயன்.
அதன் பேரை கேட்டவுடன்.. தலையைத் தூக்கி காதை விரித்து அவனைப் பார்த்து வாலாட்டிக்கொண்டே மென்றது…
வந்த போதிருந்த சோகமெல்லாம் கரைந்து அதுவரை அரித்துக் கொண்டிருந்த்து மறைந்து தெளிந்துவிட்டதைப் போல உதயன் முகத்திலொரு அமைதி….
“சேகரு இங்க வாடா.. இந்தா இதை இப்பதைக்கு வச்சுக்க…”,
கையில் வந்ததை வாரிக் கொடுத்தான்…
“இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கேளு தர்றேன்…நீங்க நல்லா வரணும்டா…”

திகைத்துப் போன சேகர்,”… ஏற்கெனவே வாங்கினத….” தயங்கி மறுத்தான்.

“பேசாம குடுக்கிறத வாங்கிக்கடா …அரசு எனக்கு குடுத்தது நிறையடா…நான் என்ன செஞ்சாலும் அதை நேர் பண்ண முடியாதுடா…”

“வேணாம் மாமா…”

“வாங்கிக்கடா அவனை ஒதுக்கி வச்சு சங்கடப்படுத்தினது பத்தாதா?…வாங்கிக்கடா..அவங்ய கணக்கு வழக்கு உனக்கு புரியாதுடா..புரியவும் வேணாம்.. வாங்கிக்க… “,ஜெயா வாங்க வைத்தான்.
மிரட்சியிலிருந்து விடுபட்டிருந்தாலும் உதயனின் செய்கைகள் அவர்களை குழம்பித் தவிக்கவே வைத்தது…

ஆயினும் ஒரு இக்கட்டிலிருந்து விடுபட்டிருந்ததில் ஆறுதல்.

“சரிம்மா இவனை வண்டியப் பிடிச்சு ஏத்திவிட்டுர்றேன்.நீ வாடா உதயா..”

கூழுவைத் தூக்கி தோளோடு அணைத்து கொண்ட உதயன்…,”வாறேம்மா…வர்றேனடா சேகரு…எதுன்னாலும் கூப்பிடு…”
கிளம்பினான்….

ஒண்ணும் புரியாமல் வழியனுப்பியவர்களை பார்க்க ஜெயபாலனுக்கு பாவமாக இருந்தது…

மனசுக்குள் நினைத்துக் கொண்டான்,‘கூழு… உதயனின் சின்ன வயசு பட்டப்பேரு…
அரசு தான் வச்சது…. யாராவது என்னைக்காவது சொல்ல புரிஞ்சுக்குவாங்க… நாம
எதுக்குச் சொல்லணும்?’

Advertisements

கூறு கெட்டுப் போச்சா மாமா?


மெயின் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டான். “வீடுவரை கொண்டுவிடுகிறேன்”, சொன்ன நண்பனிடம் “பரவையில்லை நீ கிளம்பு”, என்று விடைபெற்றுக்கொண்டான். நண்பன் கோயிலுக்குப் போய் விட்டு பெங்களூருக்கு போக பஸ்ஸைப் பிடிக்கணும்..

மணியைப் பார்த்தான் ..10.20..
முதல் நாள் சனிக்கிழமை பகல் பன்னிரண்டரைக்கு வீட்டை விட்டுக் கிளம்பியவன்.
‘கூட்டாளிங்க கூட கூத்தடிச்சிட்டு வர்றதுக்கு இம்புட்டு நேரம்..’
அதுவரையில்லாதிருந்த அவசரம் தொத்திக்கொள்ள முனைக்கடையில் சிகரெட்டை வாங்கிக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினான்..
பெல்லை அழுத்திவிட்டு படியேறினான்..
சிரிச்ச முகத்துடன் அவன் மனைவி கதவைத் திறந்தவுடன் அவன் மனதில் சில நிமிடங்களுக்கு முன்னால் ஏறியிருந்த சின்ன பதட்டம் கரைந்து போனது..

செருப்பைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்து சோபாவில் உட்கார்ந்தவனுக்கு உடம்பு அசந்து வந்தது.. அப்படியே சாய்ந்து தூங்கினால் எழுந்திருக்க மாட்டான். அவ்வளவு அசதி..இருக்காதா பின்னே பின்னிரவு வரை முழிச்சிருந்து பேசிக்கிட்டிருந்தா..
“என்ன நல்லா கூத்தடிச்சு கொண்டாடியாச்சா மாமா ?”, பக்கத்திலே நெருங்கி உட்கார்ந்து கொண்ட அவன் மனைவி. கேட்டாள்..
அவள் பாவனையும் தொனியும் முழுக்கதையையும் கேட்காமல் விட மாட்டாள் என்றே பட்டது கதிருக்கு.
சாயாவிடம் கேட்டுவிட்டுத் தான் சென்றிருந்தான்….கூடப் படிச்சவங்க ஒரு 20 பேரு கூடியிருந்தார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு. இரண்டொருவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருக்க அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் கூடியது.
“உங்கிட்ட மறைக்கவா போறேன்..
கொண்டாடித் தீர்த்துட்டோம்.. சாயா”
“அளவா குடிச்சீங்களா? இல்ல தாண்டிட்டீங்களா..கறி,கோழின்னு வேற சாத்தினீங்களா..?”
“அளவோட நிறுத்திக்கலாம்னு தான் ஆரம்பிச்சேன்..அப்புறம் அந்த ஜோர்ல கொஞ்சம் மீறித் தான் போச்சு..”
“பார்த்துங்க. நேத்து சர்க்கரை மாத்திரையும் எடுத்துக்கல..ஏதாவது ஆகிடப்போகுது..”
“பயப்படாத இனி ஒரு மாசம் ஆறப்போட்டுக்கலாம் வேணுமின்னா சர்க்கரை அளவைப் பார்த்துக்கிட்டு இன்சுலின் ஊசியப் போட்டுக்கலாம்..”
“இதெல்லாம் 50 வயசுல தேவைதானா?”,கொஞ்சம் கவலையுடன் கேட்டாள் சாயா.
அவள் தலையைக் கோதிவிட்ட கதிர் “ஒருநாள் திருவிழா கொண்டாடினேன்னு நினைச்சுக்கோ. இரண்டு வருசமா எதையாவது தொட்டனா?”,என்று சமாதானமாகச் சொன்னான்.
“ஓண்ணு விடாமச் சொல்லுங்க மாமா”,
“சொல்லுறேன்..உங்கிட்ட “சொல்லாமலா..உனக்கென்ன இடது பக்கம் மட்டுமா ஒதுக்கியிருக்கேன்.என்னைக்கோ முழுசையும் தந்துட்டனே..ஒரு காபி போட்டுத்தாயேன்”
“ஆமா கேக்க மறந்துட்டேன் காலையில் எதாவது சாப்பிட்டீங்களா இல்லையா ?
“அதெல்லாம் முடிஞ்சாச்சு பொங்கல் வடைன்னு உள்ள தள்ளியாச்சு..இப்ப காபி குடிச்சா நல்லா இருக்குமேன்னு தான் கேட்டேன்..”
கதை கேட்கும் ஆர்வத்தில் அவனுக்கு காபி போட எழுந்து சென்றாள்..

அவனும் சட்டை பேண்ட்டை கழட்டியெறிந்தான்.பனியன் ஜட்டியை உருவியெறிந்து விட்டு வசதியாக கைலிக்கு மாறினான்.
சோம்பல் முறித்துவிட்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்..
அதற்குள் காபியை கலந்து கொண்டு வந்திருந்தாள்.
காபியை வாங்கி உறிஞ்சிக்கொண்டே அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானான்.
“யார் யாரு வந்திருந்தாங்க.. ?”
“உனக்குத் தெரிஞ்சவங்கள்ள பரிதி,முருகன்,இளங்கோ, மருது..
மீதிபேரை நீ அதிகம் சந்திச்சதில்ல பேரைச் சொன்னா தெரியாது..எல்லாருமா சேர்ந்து 20 பேரு..”,
நிறுத்தி காபியை குடித்து முடித்தான்.
முடித்து விட்டு தொடர்ந்தான்.
“பாட்ச் பாட்சா சாயங்காலம் வரைக்கு வந்துக்கிட்டேயிருந்தாங்க..
நல்ல இடம புடிச்சிருந்தான் மருது.. நம்ம ஊரில் இப்படி ஒரு வசதியான இடமிருக்கிறது இதுவரை தெரியாம போனது ஆச்சர்யம் .தோப்புதுரவுக்கு மத்தியில் சகல வசதிகளோட..
ரெஸ்டாரன்டு எல்லாம் உள்ளயே..முக்கியமா சத்தமே இல்லாத ஒரு இடம்..எங்க சத்தந்தான் வந்துருக்கும்.
அஞ்சாறு ரூம் போட்டிருந்தோம்.. கூட்டம் கூடினது ஒண்ணுல தான்..
பகல் 1.00 மணிக்கு மெல்ல ஆரம்பிச்சது ஆளு சேர சேர களை கட்டிக் கலகலப்பாயிருச்சு..”
“செலவு..?”.
“ஆளுக்கு 2000 குடுத்துருக்கோம் மருதுகிட்ட ..கணக்க முடிச்சு அவன் இன்னும் கேட்டா குடுக்கணும்…”.
“கம்மி இல்ல..?”
“ரூம் செலவும் சாப்பாட்டுச் செலவு மட்டுந்தான்.
சரக்கை அவனவன் கையில் பிடிச்சுட்டு வந்திருந்தாங்ய..முழுக்க குடிக்க முடியல்ல..அம்புட்டு சரக்கு.. மிச்சத்தை ஆளாளுக்கு எடுத்திட்டுப் போயிட்டாங்ய”.

“எல்லாம் வெளிநாட்டுப் பாட்டில்களா?”.
“கொஞ்சம் லோக்கலுந்தான்.. சிலபேரு ரம்மு வேணும்னு ஒத்தக்கால்ல
நின்னுட்டாங்ய.. அத லோக்கல்ல ஏற்பாடு பண்ண வேண்டியதாப் போச்சு..”
“என்ன தான் பேசினீங்க அம்புட்டு நேரம்..?”
“முதல்ல என்னமோ பரஸ்பர நல விசாரிப்புத்தான்.. நீ எப்படி இருக்கே..பிள்ளைங்க என்ன பண்றாங்க…அப்புறம் வராத பிற நண்பர்களைப் பத்தி.. அவங்க பிள்ளைங்களை பத்தி..இப்படித்தான் ஆரம்பிச்சுச்சு.
சரக்கு உள்ள போக போக பழைய நெருக்கத்தை உணர உணர சந்தோஷம் பொங்கி கரை புரண்டிருச்சு…சாயா..
எப்படிச் சொல்லுறது? கூடினதே பாசாங்கில்லாம அந்த பழைய கதிரைத் தேடித் திரும்பிப் பார்க்கிறதுக்குத் தானெ? …அந்த பழைய நண்பர்களுக்கு மத்தியில் நான் பழைய கதிராகிப் போனேன்..அதுக்குத் தானெ இவ்வளவு ஆசைப்பட்டுக் கூட்டத்தைக் கூட்டினது?…என்னைப் போல எல்லாரும் அவனவன் பழைய முகத்தைக் கண்டு சந்தோஷப்பட்டுப் போயிருப்பாங்ய”.

பேச்சு உணர்ச்சிகரமாகிப்போக அதை தணிக்க வெட்டிக் கேள்வி கேட்டாள் சாயா,” மத்தியாண்னத்துக்கு என்ன போட்டாங்க? நீங்க என்ன சாப்பிட்டீங்க?”

“மத்தியான்னமா… பட்டர் நான்,புலாவ், பன்னீர் மசாலா,கிரீன்பீஸ் மசாலா,சிக்கன் கறி, தயிர்சாதம்,ஐஸ்கிரீம்.,சாலட் எல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தான் மருது..
நான் ஐஸ்கிரீமைத் தவிர்த்து எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன்..”
“இத்தனையும் சாப்பிட்டுத் திருப்பி குடிச்சீங்களா?”
“கூட்டஜோரு ஊத்திக்கிட்டே தான் இருந்தோம்.. அப்புறமும் சில நண்பர்கள் வந்துகிட்டே இருந்தாங்கல்ல அவங்களுக்காக அவங்களோட”
“சரி,எப்பத்தான் குடிக்கிறது நின்னுச்சு..?”.
“ராத்திரி 9 மணிக்கு.. அப்புறம் ராத்திரிச் சாப்பாடு”.
“ராத்திரி என்ன சாப்பிட்டீங்க?
“ராத்திரிக்கா
இட்டிலி,கல்தோசை,மட்டன் குழம்பு,பொறிச்ச கோழி,சட்டினி சாம்பார்..”
“குடிச்சிட்டு இவ்வளவு சாப்பிட முடிஞ்சுதா…?”
“எல்லாத்துலயும் கொஞ்சம் போலத் தான், சாயா..”
“சரி ராத்திரி சாப்பாட்டோட கிளம்பியிருக்கலாமில்ல.. உள்ளுர் ஆளு நீங்களாவது திரும்பியிருக்கலாமில்ல?”

“அப்படித் தானெ திட்டம் போட்டிருந்தோம்.. மக்கள் ரொம்ப பிரியப்பட்டாங்ய.. எனக்கும் வேற ஆசை..அதான் உங்கிட்ட கேட்டுக்கிட்டு தங்கிட்டேன் ஆனா..”
“என்ன ஆனா?”

“அப்படியே கிளம்பியிருக்கணும். நல்லா இருந்திருக்கும்..”
“ஏன் அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு..?”
“ஒண்ணும் பெரிசா நடக்கல.. சாப்பிட்டுட்டு
அப்படியே நிலா வெளிச்சத்தில் புல்வெளியில் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்காலாமின்னு சிலரு பிரியப்பட்டாங்ய.. பக்கத்து ஊருக்காரங்ய சிலரு 12 மணி வாக்கில கிளம்பத் திட்டம் போட்டிருந்தாங்ய.. அதுவரைக்கும்பேசிக்கிட்டிருக்கலாமேன்னு……….”
“பேசிக்கிட்டிருந்தீங்களாக்கும்.. அந்த நேரத்தில் என்ன என்னத்த பேசினீங்க?
“இல்ல சாயா. அதுவும் பழைய வாழக்கையை, பழைய சேட்டைகளை நினைச்சு பேசி சிரிக்க ஆரம்பிச்சது தான் ஆனா… கொஞ்சம்… கொஞ்சம் விரசமா வில்லங்கமா ஆகிப் போச்சு..”
“ புரியல..?”
“உங்கிட்ட சொல்லுறதுக்கென்ன சாயா..
சின்ன வயசுல பலான புத்தகம் படிச்சது,சீன் படம் பார்த்தது, ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க அலைஞ்சது, என்னெனமோ சில்லறை வடிகால்கள் தேடிக்கொண்டதுன்னு பழைய சேட்டைகளை நினைச்சு சிரிக்கத் தான் பேச ஆரம்பிச்சோம்..”
“ஆனா…?”
“ஆனா..அது நிகழ்காலத்தையும் தொட்டு எதிர்காலத்துக்கும் திட்டம் போடுற பேச்சா ஆகிப் போச்சு.. நானும் பேச்சு சுவாரசியத்தில் தடுமாறி அதில் லயித்துத் தான் போயிட்டேன்..”

“அப்ப பார்த்தது பத்தாதாக்கும்? இப்பவும் பார்க்கணும்.. இனியும் பார்க்கணுமா?
கூறு கெட்டுப் போச்சா மாமா உங்களுக்கு?”

“இல்ல ஒரு சேஞ்சுக்கு,ஒரு வெரைட்டிக்கு ஒரு வடிகாலுக்கு பார்த்தா தப்பென்னங்கிறது தான் மக்கள் வாதமா இருந்துச்சு..”

“50 வயசைத் தாண்டியாச்சு…பேரன் பேத்தி எடுத்தாச்சு.. பாலுணர்வோட அழகான மகிழ்ந்து முகிழ்ந்து முடிகிற கடைசி கட்டத்துக்கு வந்தாச்சு…இனியும் அந்த கன்றாவிய பார்க்கணுமாக்கும்..?”
அவன் முகம் சின்ன பிள்ளையின் முகம் போல வாட அவனுக்கு புரிய வைக்க குரலைத் தாழ்த்தி,

“பரக்க பரக்க ,ஏற்படுறது என்னன்னு தெரியாம தட்டுத் தடுமாறினப்போ காடுமேடெல்லாம் சுத்தினது சரி..இன்னைக்குத் தான் ராஜபாட்டைக்கு வந்தாச்சே..இன்னும் கொஞ்சதூரம்தானே அரன்மனை.. எதுக்கு திருப்பி சந்துகிந்தெல்லாம்..குறுக்கு வழியெல்லாம்.
கிறுக்குத்தனமெல்லாம் வேணாம் மாமா…”

யோசித்தவனை அவனாகவே நல்ல முடிவுக்கு வர
“சரி சரி பன்னிரெண்டு மணியாகப் போகுது கொஞ்சநேரம் கிடந்து தூங்குங்க நான் சோறாக்கிருறேன்..” என்று சொல்லி தனியாக விட , விலகினாள்.

“அதானே ராஜபாட்டைக்குத் தான் வந்துட்டோமில்ல..அப்புறமெதுக்கு இந்த
விலகிச் செல்லும் வேலையெல்லாம்… குறுக்கு வழியெல்லாம்.. கண்ணுமண்ணு தெரியாத காட்டுக்குள்ள கொண்டு விட்டுருச்சுன்னா..வேணாம்..வேணவே வேணாம்…”.
ராத்திரிக்குறுகுறுப்பு கரைந்ததில் கண்களில் தூக்கம் கூடி வர கண்ணைமூடி மனதைத் திறந்து தூங்கினான்..

எனக்கு பிடிக்கல..புரியவுமில்ல…


KFC .மதுரைக்கும் வந்திருச்சு.
எட்டு மாசமாச்சு ஆரம்பிச்சு. ஆச்சரியமா இருக்குது சக்கைப்போடு போடுது.
கடைக்குள்ள நுழைஞ்சா கூட்டம் அலைமோதுது. அதிசயமா இருக்கு.
வீட்டுக்குப் பக்கத்தில தான்.
நானும் போயி வாங்கித் திண்ணு பார்த்தேன்.
எனக்கென்னமோ தோதுப்படலை.உப்பு உறைப்பா நாக்குக்கு சுணையா இருக்க வேணாம்?சப்புன்னு இருக்கு.Hot and spicy chickenஐ முயறசி பண்ணிப் பாருங்கன்னு ஒரு இளவட்டப் பையன் சொன்னான்…
ம்ஹூம்..எனக்கு உறைக்கலை. எழும்பு மொழிய கடிச்சுறிஞ்சினா சுகமா தொண்டையில் இறங்க வேணாம்? எழும்புல உசிரே இல்ல.. அஞ்சாறு நாளு உறைய வச்சிருப்பாங்ய போல இருக்கு..எழும்பு மொழியெல்லாம் கறுஞ்சிவப்பா நிறம் மாறியிருக்கு..கறிக்கோழியே விளங்காது..அதிலும் உறைய வச்சது. சரிப்படலைங்க..

கோழிக்கறிய நான் திண்ணு பழகினதெல்லாம் வேறமாதிரி.. அது ஒரு பெரிய சடங்கு.. முத நாளே சொல்லிருவாங்க அடுத்த நாளு கோழிக்குழம்புன்னு…
வெள்ளரிசிச்சோறு அல்லது தேங்காய்ப்பால் சோறும் கோழிக் குழம்புன்னு சொல்லிருவாங்க…
கன்வோட துங்கி எந்திரிக்கும் போதே எச்சி ஊறத் தான் நாளு தொடங்கும்…
கோழின்னா அது நாட்டுக்கோழி மட்டுந்தான். லக்கான்,கறிக்கோழி இந்த சமாச்சாரமெல்லாம் ஆகாது.
அதிலயும் விடைக்கோழியாத்தான் புடிச்சிட்டு வரச் சொல்லுவாங்க.. சில சமயம் முட்டக்கோழிக்கு அனுமதி உண்டு.. ஆனா முதத்தடவை கருப்பிடிச்சதா இருக்கணும்..ஒண்ணு இரண்டு முட்டைக்கு மேல இட்டிருக்க கூடாது. உசிரோட 900கிராம்-1கிலோக்குள்ள இருக்கணும்.. இறக்கையக் கழிச்சா 750-800கிராம எடையத் தாண்டக்கூடாது.
அப்பத்தான் இளசா இருக்கும், இல்ல முத்தி சக்கை சக்கையாயிடும்.
அப்பல்லாம்.. அறுத்து, பறிக்கிறது என் வேலை..செல்லா ஊறும் உடம்பில…
மொழு மொழுன்னு மயிரைப் பறிச்சு அம்மாகிட்ட குடுத்துருவேன்..
இண்டு இடுக்குல் இருக்கிற மிச்ச மீதி மயிரைப் பொசுக்க வேணாம? கோழியை அடுப்பு மூட்டி வாட்டுவாங்க…அதுக்குப் பெறகு..நல்லா மஞ்சப்பொடியப் போட்டு தேச்சு கழுவுவாங்க..
கழுவுன பெறகுதான் இரண்டா பிளப்பாங்க.. தோலை உறிக்க மாட்டாங்க.. (இப்பல்லாம் கடைகளில் தோலை உறிச்சிப்புடுறாங்ய …என்ன ருசி இருக்கும்?)
முதல்ல நெஞ்சுக்கூட்ட பிரிச்சு பித்தத்தை நீக்கிருவாங்க..இல்லன்னா கறி கசந்துரும்.. அப்புறம் குடலு.. ஈரல்…இரண்டையும் என் கிட்ட குடுத்துருவாங்க…அறுத்துப் பறிச்சதுக்கு என் கூலி..
குடலை உருவி நாலஞ்சு தடவை அலசிக் குடுத்துருவேன்.. அதை துண்டு துண்டாக்கி,ஈரலோட மிளகாய்பொடியும் உப்பும் சேர்த்து எண்ணௌய்ல் பொரிச்சுத் தந்துருவாங்க…அது தான் எனக்கு starter..
பிளந்த கோழிய பொறுப்பா துண்டு போடுவாங்க..நாங்க மட்டுமின்னா பெருவெட்டா…விருந்தாடி யாராவதிருந்தா சிறுவெட்டா…
எழும்பை ஒதுக்கி,சிதைக்காம வெட்டுவங்க். அதிலும் ஒரு லாவகம் இருக்கும்.. எழும்பும் அதை ஒட்டிப் படர்ந்து வர்ற சதையுமா.. அப்படித் தான். துண்டு போடுவாங்க..எழும்பை குறுக்கு மறுக்கா வெட்டினா சில்லு சில்லா சிதறிப்போகும்..சோறு திங்கும் போது முள்ளாக் குத்தும்…
நாலஞ்சு தடவை அலசிருவாங்க..கவுச்சி போகணுமில்ல.
ரொம்ப எளிமையா வீட்டில் இருக்கிற மசாலா மட்டுந்தான். நல்லெண்ணெயில தான். குண்டக்க மண்டக்க ஏகப்பட்ட கறிமசாலாப்பொடியெல்லாம் சேர்க்க மாட்டங்க..(சமையல் குறிப்பை பெறகு தனியா எழுதுறேன்,யாருக்காவது தேவையின்னா)
குழம்பு கொதிக்கும் போதே வீடு பூரா வாசனை கிளம்பி பசி எடுத்துரும். இறக்கி வச்ச குழம்புச் சட்டிய திறந்து பார்த்தா அந்த நிறமும் ,மினுமினுப்பும்..அய்யோ கன்னமெல்லாம் வலிக்க எச்சி ஊறும்.
சட்டிச் சோறு உள்ள போகும்.. வேகவைக்கிறதிலயும் திறமையக் காட்டியிருப்பாங்க..நல்லா வெந்திருக்கும்..ஆனா அக்க்க்கா கழண்டு கரைஞ்சிருக்காது. துண்டு நல்லாஉருவமா ..கடிக்க வாட்டமா இருக்கும்.. கடிச்சா பலாச்சுளை போலஎழும்பை விட்டு விலகி வந்துரும். எழும்பு மொழியெல்லாம் கடிச்சுறிஞ்சினா சாறு தொண்டையில் இறங்கும் பாருங்க… .
இப்ப வீட்டுல வச்சு அறுத்துப் பறிச்சு வாட்ட முடியாட்டியும்.. மதுரைகுள்ள அறுத்து வாட்டித்தர்ற கடைங்க சநதையிலும், நெல்லுப்பேட்டையிலும் நிறைய இருக்கு..
நாளு பூராவும் கிடைக்குது..
பெறகு எதுக்குங்க உறைய வச்ச பழைய கோழிக்கறிய திங்கணும்?
எனக்கு பிடிக்கல.புரியவுமில்ல.