இதுவும் பூதம் தான்…


இதுவும் பூதம் தான்…
விளக்கைத் தேய்த்தால் வெளி
வரும் பூதத்தைப் போல
அபூர்வமானதல்ல!
எங்கும் எப்பொழுதும் கிடைக்கும்.
காசிருந்தால் வாங்கலாம்.

புராதன ஜாடிகளிலிருந்து
வெளிப்படும் பூதத்தைப் போல
விசுவாசமான அடிமை தான்..

பாட்டிலை
கவிழ்த்தால் வரும்.
விரும்பிய பொய்யுலகத்திற்கு
கொண்டு செல்லும்….
என்ன
குறைபட்ட விசுவாசம்!
விசுவாசத்தை நீட்டிக்க
புது பாட்டிலை
கவிழ்க்க வேண்டும்…

கவிழ்க்க கவிழக்க
விசுவாசமாயிருக்கும்
இந்த பூதம் வினோதமானது…
பாட்டுப்பாட வைக்கும்
ஆடவைக்கும்
ஏன் அந்நியமொழிகளில் கூட
அனாயாசமாக பேச வைக்கும்…

கிறங்கி கிடக்க
வாய் பிளந்து
நாக்கை விரிக்கும்
இந்த அடிமைக்கும்
வாலாட்ட ஆசை
வந்து தொலைக்கும்..

அதன் பிறகு
அதன் ஆசைக்கு
ஆட்டி வைக்கும்.
நண்பர்களை விரட்டும்,
சுற்றத்தை துரத்தும்.
மனைவி மக்களை பிரிக்கும்
அதன் பேராசை
அத்தோடு நிற்காது..
எமனாகி முடிக்கவும்
துணியும்..
குப்பியில் அடைபட்ட மதுவும்
ஒரு பூதம் தான்!

Advertisements

கையறு நிலை.


அன்று
இலக்குகளே இல்லாதவன்
நான்.
உயர உயர
பறக்க நினைத்தவன்
அவன்.
நுனிப்புல்
நான்.
நுணுகி நுணுகி
அவன்.
தடம் மாறி
நான்.
தடம் பிறழாமல்
அவன்.
வம்பாய் வம்பை
விலைக்கு வாங்கியவன்
நான்.
விலக்கி விட்டவன்
அவன்.
ஊதாரி! கடனாளி!
நான்.
கரை சேர்த்தவன்
அவன்.
படிப்பும் முடிந்து
அவரவர் வழிகளில்….
அப்பொழுதும்
இலக்குகளின்றி
நான்.
உயர உயர
அவன்..
இடையில்
இருபத்தைந்து ஆண்டுகள்
தொடர்பின்றி..

இன்று..

எங்கோ ஏதோ பிசகு…
உயர உயர பறந்தவன்
உச்சம் கண்டிருக்க வேண்டும்…
அநியாயமாய்
கிடுகிடு பள்ளத்தில்
அவன்.

சலித்து
அதுவே உருக்கொண்டு
நிலை கொண்ட
எனக்கான இலக்கின்
அசுர இலுவையில்
நான்.

மரணமே மன்னித்துவிடு!


மரணமே மன்னித்துவிடு..
ஒத்துக்கொண்டபடி
உன்னை வரவேற்று
தழுவிக்கொள்ள முடியாது…
கோபம் கொள்ளாதே…
சரி வாவென்று
அழைத்தது என்னவோ
நான் தான்..
அது கூட
உன் முன்னெடுப்புகளுடன்
மல்லுக்கட்ட முடியாமல் தான்..
இணையைத் திருடிக் கொண்டு
மனதை முறித்துப் போட்டாய்..
உடலில் அங்கம் அங்கமாக
கை வைக்க ஆரம்பித்தாய்..
சலித்து தான்….
சரி வாவென்று
அழைத்துவிட்டேன்..
உன்னை வரவேற்க வேண்டாமா?
வயிறு முட்ட
குடித்துக்காத்திருக்க
டாஸ்மாக்கை
தேடித்தான் கிளம்பினேன்..
தவறுதலாக புகுநது விட்டேன்..
புத்தக கண்காட்சிக்குள்..
கையிருப்பை அழித்து
கை நிறைய புத்தகங்களை
அள்ளி வந்து விட்டேன்..
வாங்கியிருக்ககூடாது தான்,
உன் கறாரான
முன்னறிவிப்பிற்கு பிறகு..
என்ன செய்ய
புத்தம் புதிய
பூக்களை போல மணத்த
புதிய புத்தகங்களில்
கிறங்கிப் போனேன்
வாங்கியது வாங்கிவிட்டேன்..
வாசித்து முடிக்க வேண்டும்..
இந்த ஒரு முறை
மன்னித்து விட்டு விடு…..
விலகிச் செல்!
எனக்கு நேரமில்லை…
வாசித்து முடிக்க வேண்டும்.
அடுத்த முன்னெடுப்பாக
கண்களில் கைவைப்பாய்……

கிளர்ச்சியுமில்லை…எழுச்சியுமில்லை…


இணையை
இழந்த துக்கம்
உக்கிரமாக
ஆக்கிரமித்திருந்த
காலம்…
மனச்சோர்வும்
அதனால் உடல்தளர்வும்
கிளர்ச்சிகளுக்கு
வழி விடவில்லை..

மனம்
மாறிவிட்டதாய் நம்பி
உடல் தேறிய
புதிதில்..
சில காட்சிகளும்
பல சூழல்களும்
கிளர்ச்சியடையவே வைத்தன.

கிளர்ச்சிகள்
முழு எழுச்சியடையுமுன்னே..
நெருப்பை ஊற்றி அணைத்தன
பழம் நினைவுகள்…
புலன் வழி
கிளர்ச்சியடைவதும்
கிளர்ச்சி காரணம்
மனம் தடுமாறுவதுமாய்….
புதிய காட்சிகளை
பழம் நினைவுகள்
கொல்லுவதுமாய்….
சில காலம்.

இணையற்றவளோடு
இன்னொறும் இனியில்லை!
ஏற்றுக் கொண்டேன்…
இன்ன பிற கடமைகளில்
கவனம் செலுத்துகிறேன்..
கிளர்ச்சியுமில்லை…
எழுச்சியுமில்லை…
குற்ற உணர்ச்சி
கொல்லுவதுமில்லை…
முதிர்ந்து விட்டேன்.
காத்திருக்கிறேன்…
கண்ணியமாய்
உதிர்வதற்கு!