நம்பணும்…


முட்டிக் கொண்டு முழிப்புத் தட்டியது பாரிக்கு…இன்னும் விடிந்திருக்கவில்லை..
விடிந்திருந்தால் கண்ணாடி ஜன்னல்கள் ஒரு மெலிதான வெளிச்சத்தைப்
அறைக்குள் படர விட்டிருக்கும்.. இன்னும் இருட்டை அப்பிக்கொண்டிருந்தன…
முழுச் சுதாரிப்புக்கு வந்து விளக்கை எரிய விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் . முட்டிக்கொண்டு வந்ததை ஊற்றிவிட்டு திரும்பியவனுக்கு துணுக்கென்றிருந்தது…
பாத்ரூம் தரையில் அங்கங்கே திட்டு திட்டா ரத்தக்கறை….
பாதத்திலிருந்து தான்… ‘ஆறித் தொலைய மாட்டேங்குதே…’
டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து வலது காலை மடித்துப் பார்த்தான்…
ஆறமாட்டேன்னு அடம்பிடிச்சுகிட்டிருந்த காயத்தைச் சுற்றி உலர்ந்தும் உலராமல் ரத்தம்..
கழுவிக்கொண்டான்.. ‘சனியன் பிடிச்ச சர்க்கரை வியாதி…’
தரையையும் கழுவிவிட்டான்..கிருமிக் கொல்லியைத் தெளித்துவிட்டு வெளியே வந்தான்…
‘இனி தூக்கம் வராது.. ஒரு காபியைப் போட்டுக்குடித்தாலென்ன?’
அடுப்படிக்குள் சென்று தண்ணியை சுட வைத்தான்…
பாலில்லாக் காப்பியைக் கலந்து கொண்டு உண்ணும் மேஜைக்கு வந்தான்..
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கசந்த கலவையை குடித்தான்…கசப்பு பழகியிருந்தது…இனிப்பும் இனிமையையும் மறந்து கசப்பு பழகியிருந்தது…
காபியைக் குடித்ததும் மனம் தடுத்தாலும் உடல் சிகரெட்டுக்காக அலைந்து பரபரத்தது…
அணைத்து வைத்திருந்த துண்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டான்..
இரண்டு இழுப்பு… பரபரப்பு அடங்கியிருந்தது… துண்டை அணைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டான்..அடுத்த தவிப்புக்கு…
‘இந்தப்பய ‘ஓல்டு’ குமாரு என்ன ஆனானோ?’
முன்னறைக்குச் சென்று ஓளிரவிட்டு மடிக்கணினியைத் திறந்து அதை சொடுக்கினான்…இணைய தொடர்பை உண்டாக்கிக்கொண்டு இணைய உலாவியைச் சொடுக்கி மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தான்…
கட்டையன்…’கட்டை’ குமாரு மின்னஞ்சல அனுப்பியிருந்தான்…
‘ஓல்டு’ குமார் பிழைச்சுக்குவானாம்…
‘அப்பாடா… 15 நாளு போராட்டம்…
கூடப் படிச்சவங்களா போராடிக் காப்பாத்தியாச்சு..
கட்டையனை சும்மா சொல்லக் கூடாது… பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில இருக்கிறவன்…கோயில் கட்டி கும்பிடணும்…
அலைஞ்சு திரிஞ்சு பணத்தை திரட்டி நாளு தவறாமெ மருத்துவமனைக்குப் போயி… காப்பாத்திட்டான்…’
மீண்டும் படித்தான்…
….அடுத்து 4 மாதங்களுக்கு de-addiction programmeஇல் இருந்தாகணும் ‘ஓல்டு’ குமார்….
இந்தப் பின்பகுதி உறுத்தியது….
மடிக்கணினியை அணைத்து விட்டு… திரும்பவும் அணைத்து வைத்திருந்த துண்டை பற்ற வைத்தான்.. தவித்தது…
‘ஓல்டு’குமாரும் ‘கட்டை’குமாரும் பாரியுடன் படித்தவர்கள்..
ஓரே பெயர் அதனால வேறுபடுத்த இந்த அடைமொழிகள்..
பதினைஞ்சு நாட்களுக்கு முன்னால ஒரு நாள் மாலைப்பொழுதில் தான் செய்தி வந்தது..
‘ஓல்டு’குமாரு மூச்சுப்பேச்சில்லாம தீவிர சிகிச்சைப்பிரிவுல ஒரு ஹைதராபாத் மருத்துவமனையில் கிடக்கிறான்னு…’
செய்தி கொடுத்திருந்தது அவன் பக்கத்து வீட்டுக்காரர்…
பக்கத்து வீடு இரண்டு நாட்களாக்க அடைபட்டுக்கிடக்க உடைத்துகொண்டு உள்ளே சென்றிருக்கிறார் அந்த புண்ணியவான்.. நல்லவேளை மயங்கிக்கிடந்தவனை தூக்கிக்கொண்டு போயி சேர்த்திருக்காரு… எப்படியோ அவன் நம்பர் கிடைக்க தகவலைச் சொல்லீட்டாரு…
திருச்சியில் இருந்துக்கிட்டு பாரி என்ன செய்யமுடியும்…பதறிப்போயி தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் செய்தியை அனுப்பினான்…
‘ஹைத்ராபாதிலேயே கட்டையனும் இருக்கப் போயி…உடனே போயிட்டான்…
அப்பா… அதுக்கப்புறம் கட்டையன் பட்ட பாடு…அவன் உறவினர்களை பிடிக்க முயற்சி பண்ணி அவர்கள் பொறுப்பில்லாமல் ஒதுங்கிக் கொள்ள, பொறுப்பை தலை மேல போட்டுக்கிட்டு ஆக வேண்டியதை பார்த்தான்…
கூடப் படிச்சவங்களுக்கெல்லாம் செய்தியை பக்குவமாய் எடுத்துச் சொல்லி உதவி கோரி…
அந்த உதவியெல்லாம் ஒருங்கிணைச்சு.. சங்கடப்படாம இந்தா சாதிச்சுட்டான்… காப்பாத்தீட்டான்.. இன்னும் நாலைஞ்சு பேரு கூட மாட ஒத்தாசையாயிருந்தாங்க… வர முடியாதவங்க எட்ட இருந்தாலும் தாராளமா அள்ளிக் கொடுத்து காப்பாத்த உதவினாங்க…
‘ஓல்டு’ குமாரு பய இந்த நிலமைக்கு ஆளாகிறதுக்கு முன்னாடி நல்லா இருந்தான் …நல்ல பேரு சம்பாரிச்சு வச்சுருந்தான்… அதான் மக்கள் உதவினாங்க…
இந்தப் பய ‘ஓல்டு’குமாரும் பெரியபெரிய நிறுவனங்கள்ள இருந்தவன் தானெ..
எப்படியிப்படி சோறு தண்ணியில்லாம் குடிச்சுக்கிட்டு கிடக்கிற அளவுக்கு…’
பாரிக்கு புரியலை…
‘அவன் வளர்ந்து வந்த வேகத்துக்கு இன்னைக்கெல்லாம் மிகப் பெரிய நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்திருக்கணும்..இளமையில் சீரும் சிறப்புமா இருந்துட்டு நடுத்தர வயசில் ஏன் இப்படி ? ‘
விவாகரத்தாகிப் போச்சுன்னு தெரியும் பாரிக்கு.. ‘ஓல்டு’குமாருக்கு தோளுக்கு மேல வளர்ந்த மகன் உண்டுங்கிறதும் தெரியும்.. ஆனா அவங்கிட்ட அதுக்கு மேல கேட்டுக்கிட்டதில்ல…
இப்படி இவன் குடிப்பான்னோ… உறவுகள் எல்லாம் ஒதுக்கி வச்சிருக்கும்னோ பாரிக்குத் தெரியாது…
‘நாப்பத்தஞ்சு வயசானவன் சூதானமா இருக்க வேணாமா..இந்த வயசுல இப்படி தடுமாறிக்கிட்டு நின்னா லேசில மன்னிக்க மாட்டானுங்களே!’
‘இப்ப எப்படி முன்னெடுத்துச் செய்யிறது… கட்டையனும் எவ்வளவு தான் தனியா பொறுப்பாக முடியும்… நல்லவேளை முழிச்சுகிட்டான்…ஆனா குடியை விடணும்னா அவன் மனசு வச்சாத் தானெ…விட்டுற முடியாதா ?நான் விடலையா?
இந்த ஏழெட்டு வருசத்தில் நான் குடிச்ச நாட்களை எண்ணி விடலாம்..
அதுக்கு முன்னால நான் குடிக்காததா… அதுவும் அவ இறந்து போனதுக்குப் பிறகு துக்கம் தாளாமெ குடிச்ச குடி… ஈரக்குலை வலிக்கவும் நிறுத்திட்டேனே….ஆனா நம்மளை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு அலைய
ஆளு இருந்துச்சு… சாய்ஞ்சுக்க தோளு குடுக்க நெருக்கமான உறவு இருந்துச்சு… தொடர்ந்து வாழணும்னு விரும்பி உதவ ரத்த உறவுகள் இருந்துச்சு….வேலை போனா என்னன்னு தைரியம் சொல்லி கடை வச்சுக் கொடுக்க பெரிசு இருந்துச்சு .. விட்டுட்டோம்…
அவனைத் தான் எல்லோரும் கழட்டிவிட்டுட்டாங்களே….

ஒருவேளை அரவணைக்கிறதுக்கு ஆளு இல்லாமெத் தான் இப்படி ஆயிட்டானோ ?’
தவிப்பு கூட கூட இன்னொன்றைப் பற்ற வைத்துக்கொண்டான்…
‘கட்டையனும் மக்களும் உதவ தயாரா இருக்காங்க.. அவன் ஒத்துழைக்கணும்… அவனை அருகிலிருந்து பார்க்காட்டியும் அவன் உறவினர்
யாராவது கொஞ்சமாவது உத்தரவாத ஒப்புதல் குடுக்கவாவது முன்னுக்கு வரணும்…நடக்குமா…?’
“என்னடா? என்ன பண்ணிக்கிட்டிருக்கிறே கிடந்து தூங்காமெ?”
அ’ய்யோ அம்மா!’சிக்ரெட்டை நசுக்கி அணைத்தான் பாரி…
“இதென்னடா முழிச்சு உக்கார்ந்து ஊதிக்கிட்டு… கால் புண்ணு ஆறணும்னா சிக்ரெட்டு குடிக்க கூடாதுடா…”
“இல்லம்மா…அந்தப் பய குமாரு…”
“என்ன ஆச்சு …?
அம்மாவிடம் எல்லாம் சொல்லியிருந்தான்….
ஆளைப் பார்த்திருக்காவிட்டாலும்.. ‘ஓல்டு’ குமார் மீது ஒரு பரிவு ஏற்பட்டிருந்தது பாரியின் அம்மாவுக்கு.. அவனிலும் பாரியையே பார்த்தாங்க…
‘“பிழைச்சுக்குவானாம்…ஆனா…”
ஆனா… குடியை விடறதுக்கு 4 மாசம் ஆகுமாம்.. அதுக்கான ஆஸ்பத்திரியில் சேர்க்கணுமாம்…. அவன் குடியை விட மனசு வைக்கணும்… ஒத்துழைக்கணும்… எந்திரிச்சு வேலைக்குப் போகணும்… நடக்குமாம்மா…”
“நடக்குண்டா… நடக்கணும்னா…நடக்குமுன்னு நாமெ முதல்ல நம்பணும்டா… முழுக்க நம்புடா.. எல்லாம் நல்லபடியா நடக்கும்…நீயும் வேணும்னா ஒரு நடை போயிப் பார்த்துட்டு வா…இப்ப போ.. படுத்துக்க…நீ நல்லா இருந்தாத் தான் அடுத்து உதவ முடியும்..
போ போயி படுத்து தூங்கப் பாரு…”
‘நம்பணும்.. நம்பணும்’, மந்திரம் போல திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டே தூங்கப் போனான் பாரி….
——————————————————————————————————————————————

Advertisements