பழைய முடிச்சு…


மதுரகாளியம்மனை மனசார கும்பிட்டுவிட்டு
வெளியே வந்தான் உதயன்.
மனசு மிக மிக லேசாகியிருந்தது.
“நான் கூட நிக்குறேன் , நீ கவலைப்படாம ஆக வேண்டியதப் பாரு ராசா”ன்னு
ஆத்தா சொல்லி அனுப்பின மாதிரியே ஒரு உணர்வு.
திருச்சி –சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு முன்னால சிறுவாச்சியூர் கிட்டக்க இடதுபக்கம பிரிஞ்சு கொஞ்சம் தூரம் போனா மதுரகாளியம்மன் கோயில்.
திங்கள்,வெள்ளி ,அமாவாசை, திருவிழா நாளு மட்டுமே நடை திறந்திருக்கும்.
மீதி நாளுகள்ல சாமி பக்கத்திலே இருக்கிற மலைக்கு போயிருமாம்.
நம்பிக்கை.
அவன் திருச்சியிலிருந்த போது, உடன் வேலை பார்த்த நண்பர் முதன் முதலாக அழைத்து வந்திருந்தார்.
அன்னைக்கு ஆரம்பிச்ச பழக்கம்..
மனசு ரொம்ப விசனப்பட்டுக் கிடந்தா கிளம்பி வந்துருவான்.
சாமி முன்னால நிக்கும் போது,
“பண்றதெல்லாம் பண்ணீட்டு எங்கிட்ட ஓடி வர்றீயே ”ன்னு
ஆத்தா முதல்ல கோபப்பட்டு கேக்குற மாதிரியே மனசுக்குப் படும்..
ஆத்தா கோபமெல்லாம் கொஞ்ச நேரத்துக்குத் தான். சின்ன வயசுல அவன் காயம்பட்டு வீட்டுக்குப் போனா முதல்ல ரெண்டு அடியடிச்சிட்டு பெறகு மருந்து போட்ட அவன் அம்மாவின் கோபம் மாதிரியே…
“சரி… சரி…கிடந்து மருகாத..பிரச்சனைகளைக் கண்டு ஓடிவராத.. எதிர்கொண்டு சமாளிக்கப் பாரு.. ஆத்தா நான் கூட நிக்குறேன்
ஆக வேண்டியதப் பாரு”ன்னு ஊக்கப்படுத்துவதாகவே படும் உதயனுக்கு.
வெளியே வரும்போது புதுசா பிறந்தது மாதிரி வருவான்..
அன்னைக்கும். அப்படித்தான் நம்பிக்கையுடன் வெளியே வந்தான்.
“இனி புதுசா எந்த முடிச்சையும் போட்டுக்கக் கூடாது..
கிட்டத்தட்ட பழைய முடிச்சுக்களையெல்லாம் அவுத்தாச்சு..
அவுத்தாச்சா.?..ம்..ம்.. எப்பவோ விழுந்த இரண்டுமூணு பழைய முடிச்சு இன்னும் கிடந்து நெருடத் தான செய்யுது..அதையும் அவுத்திரணும்..”

காலையில் சாப்பிடாமக் கொள்ளாம மதுரையிலிருந்து கிளம்பியிருந்தான்..
பசித்தது..
“ஏதாவது டீ..கீயடிச்சா நல்லா இருக்கும்..”
கொஞ்சம் தள்ளி மரத்தடியில் தட்டுவண்டியில் இட்டிலி வடையெல்லாம்
வித்துக்கிட்டிருந்தாங்க..
பக்கத்தில் போனான்.. டீக்கும் வழி இருந்தது..
இரண்டு வடைய வாங்கீட்டு டீக்கு சொன்னான்.
“அழகரும் ஒண்ணும் சாப்பிட்டிருக்க மாட்டான்ல”
கைபேசியை எடுத்து அழகரைக் கூப்பிட்டான்..
“அழகரு..வா..வெளிய வந்துட்டேன்..மரத்தடி டீக்கடைக்கு வா”
அழகர் ,அவன் டிரைவர். அந்தப் பேருக்காகவே அவனை வேலைக்கு வச்சிருந்தான். அழகரும் தங்கமானவன்.
வந்து நின்னான் அழகர்.
“வேணுங்கிறத வாங்கி சாப்பிட்டுக்க அழகரு..”
“சரிண்ணேன்..”
அவனுக்கு வேண்டியதைச் சொல்லிவிட்டு
“அண்ணேன்”
“என்ன அழகரு..?”
“யாரோ ஒருத்தரு..கோயிலுக்கு வந்தவரு…அவரு வண்டி மக்கர் பண்ணீருச்சு..
பெரம்பலூர் போயி மெக்கானிக்கை கூட்டியாந்து தான் சரி பண்ண முடியும்…”
“அதுக்கு..?”
“அவரும் மதுரை வரை தான் போகணுமாம்…
நம்ம வண்டியிலேயே கூட்டிக்கிட்டு போயிரலாம்ணேன்..”
டீய வாங்கிக்கிட்டான் உதயன்..
“யாருன்னே தெரியாம எப்படி அழகரு.?.”
“அந்த டிரைவரு பாவம்ணேன்.. அவந்தான் ரொம்பக் கேட்டுக்கிட்டான்..
ஓரே இனமுண்ணேன்…விட்டுத் தரக் கூடாதுண்ணேன்..”
“அது சரி அழகரு..நாளைக்கு எனக்காக நீ இன்னொரு டிரைவரை கேக்க வேண்டிவரலாம்….புதுசா ஒரு முடிச்ச போடணுமான்னு தான் பார்க்கிறேன்..”
“ஓண்ணும் ஆகாதுண்ணேன் .பெரிய இடத்து ஆளு மாதிரி தெரியுது..
உங்க வயசிருக்கும்ணேன்..”
“கோயிலுக்கு வந்த இடத்தில்.. மாட்டேன்னு சொல்லக் கூடாது..
கூட்டிட்டு போவோம் ..ஆனா சொல்லீடு… நாம இன்னும் இரண்டு கோயிலுக்கு
போயிட்டுத் தான் மதுரைக்குப் போவோம்னு..”
“சொல்லீட்டேன்..
அப்ப நீங்க தம்மடிச்சிட்டு நில்லுங்கண்ணேன்..நான் அவுங்களை ஏத்தீட்டு
வந்துர்றேன்..”
“செய்யி…”

சிகரெட்டை முடிச்சு கீழே போடுறதுக்கும் வண்டி வந்து நிக்கிறதுக்கும் சரியாயிருந்துச்சு…
நின்னதும்.. ஒரு இளவட்டப் பயலும்..
உதயன் வயசு ஆளும் இறங்கினாங்க..
இளவட்டப் பயல் டிரைவர் போல..
அவன் தான் முதல்ல பேசினான்..
“ரொம்ப தாங்க்ஸ் சார்.”
“நீயும் வர்றீயா?”
“நான் சிறுவாச்சியூர் மெயின் ரோட்டுல இறங்கிக்கிறேன் சார்..அங்க இருந்து பெரம்பலூர் போயிக்குவேன்..”
பின்னால் இறங்கியவருக்கு அவன் வயசிருக்கும். எங்கெயோ பார்த்திருக்கமே
“அட செல்லையா.. பழைய முடிச்சு…”
அவன் அடையாளங் கண்டதைப் போல அவரும் … இல்ல இல்ல அவனும்… கண்டுகொண்டான்.
“உதயசூர்யன்..உதயா..?”
பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொண்டான் செல்லையா..
“பார்த்து முப்பது வருசமிருக்குமில்ல?
அப்படியே மாறாம இருக்கீயே உதயா…”
“நீயும் தான் …ஏறி உக்காரு போயிக்கிட்டே பேசலாம்..”
பேசலாம்னு ஏறி உக்கார்ந்தார்களே தவிர இருவரும் பேசிக்கோள்ளவேயில்லை.
திடீரென்று எழுந்து வந்து கொட்டிய பழைய நினைப்புகளில் திக்குமுக்காடிப் போயிருந்தார்கள்.
டிரைவர்கள் இருவருக்கும் புரியவில்லை. முதலாளிகள் இருவருமே
ஏற்கெனவே அறிமுகமானவர்களென்பதில் ஆச்சர்யம்..பேசாமல் வந்ததில் இன்னும் ஆச்சர்யம்..
சிறுவாச்சியூர் வர அந்த இளவட்டப் பயல் இறங்கிக் கொண்டான்.
செல்லையாவும் இறங்கி அவனுக்குத் தர வேண்டியதைத் தந்து சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி வைத்தான்..
அழகரை நெருங்கி நன்றியுடன் சொல்லிவிட்டு விலகிப் போனான்…

“ஏண்ணேன் சமயபுரந்தானே?”
“ஆமா அழகரு..”
வண்டி கிள்ம்பியது…..
“சரி பண்ணி சென்னைக்கே கொண்டு போகச் சொல்லீட்டேன்..”
ஆரம்பித்தான் செல்லையா…
“விவரமான பய தானெ..”,-உதயன்..
“அதெல்லாம் பொறுப்பா பார்த்துக்குவான்…”
“ஆமா நீ..தூத்துக்குடிக்கரனில்ல மதுரைக்கு போறேன்னு சொன்னானே அழகரு.. ஏதும் விசேஷமா..”
“இல்ல உதயா இப்ப அம்மா அப்பா மதுரையில.. தம்பி ஃபென்னரில் வேலை பார்க்கான். கோச்சடையில் வீடு வாங்கி செட்டிலாயிட்டான் ..அவங்கூட இருக்காங்க..
அவங்களைப் பார்க்கத் தான்..”

“ஓ..”
“தூத்துக்குடியில் இப்ப யாரும் இல்ல நான் சென்னையிலே செட்டிலாயிட்டேன்..”
“சமயபுரம் போயிட்டு உறையூர் வெக்காளியம்மனைப் பார்த்துட்டு
போயிரலாமில்ல..”

“எனக்கொன்னும் அவசரமில்ல உதயா.. அதுவும் உன்னைய பார்த்திரணும்னு ரொம்ப நாளா நினைப்பு… தவிப்பு…”
“ம்..ம்..ம்..”
“ கோர்ஸ் முடிஞ்சதிலிருந்தே உன்னை பார்க்க முடியலை…
ஏனோ நீ என்னை மெனக்கெட்டு தவிர்த்துக்கிட்ட …. அது மட்டும் நல்லாத் தெரிஞ்சது..”

—-பழைய முடிச்சு.. அவுத்துரணும்—–

“முதல்ல நீ தான் விலகின செல்லையா
அப்புறம் தான் நான் விலகினேன்…”
“நான் உம்மேல சந்தேகப்பட்டு விலகினது தப்பு தான்…உதயா.
பெறகு தான் தப்பு பண்ணினது நீயில்லன்னு தெரிஞ்சு போச்சே..
உன்னைய சமாதானப் படுத்தக் கூட நீ சந்தர்ப்பம தரலே..
சந்திப்ப தவிர்த்துக்கிட்ட …
சரி அதைத் தான் விடு .அதுக்குப் பெறகு நம்ம செட்டுப் பசங்க கல்யாணம் எத்தனை நடந்த்து. எங்கயாவது வச்சு உன்னைய பிடிச்சுரலாம்னு பார்த்தா சுத்தமா வெட்டிக்கிட்டியே…”
“நம்ம மக்கள் வெள்ளிவிழாவுக்கு கூடினப்போ…நிறைய்ய்ப் பேரு கூடினாங்க—அதுக்கு கூட நீ வரலை….”

“ஓண்ணு தெரியுமா உன்னைய தொடர்பு கொள்ள முடியாததுனால நீ…நீ… போயிட்டேன்னு கூட ஒரு வதந்தீ…”

“இரண்டு வருசத்துக்கு முன்னாடி தான் தெரியும் நீ நல்லா இருக்கேன்னு…
அதுவும் மதுரையில் இருக்கேன்னு…”

பதில் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வந்தான் உதயன்
—ரொம்ப நாளா நெருடிக்கிட்டிருந்த பழைய முடிச்சு… இன்னைக்கு அவுந்திரும்… அவனும் மனசை விட்டுப் பேசீரணும்…அப்பத் தான் அவுறும்—

“அண்ணேன் கோயில் வந்துருச்சுண்ணேன்..”
“கோயில் வந்துருச்சு.. வா செல்லையா ..”

“இந்தா அழகரு காசு.. நாங்க உள்ள போறோம். நீவண்டிய நிறுத்தீட்டு 25 ரூபாய் டிக்கெட்டு மூணை எடுத்துட்டு வா..”
மெல்ல நடந்தார்கள் செல்லையாவும் அவனும்…திங்கள்கிழமையினால கூட்டம் அதிகமிருக்கலை.. அங்கங்கே கொஞ்சம் பேரு மாவிளக்கு வச்சுக்கிட்டிருந்தாங்க..
பெரிய நெரிசல் இருக்கலை..
உள்ளே நுழைந்து வலது பக்கமாக திரும்பி சிறப்பு தரிசன நுழைவாயில் கிட்ட நின்னுக்கிட்டு அழகருக்காக காத்துக்கிட்டிருந்தாங்க..
ஓட்டமும் நடையுமா ஓடி வந்தான் அழகர்..
அவன் பின்னே உள்ளே நுழைந்து வரிசை அசைய அசைய சாமியை நெருங்கினார்கள்..
சன்னிதானத்தை நெருங்க நெருங்க …மனசு அமைதியாயிருச்சு..ஆத்தா முகம்..
இங்க மூப்பெய்தி கனிஞ்சிருக்கும்…அவனுக்கு அவனோட அம்மாச்சி முகந்தான் நினைவுக்கு வரும்..
—-ஆதித்தாய்—-

உருகி நின்னான்..

—-குரோதமெல்லாம் கூடாது ராசா.. அடுத்தவங்களை தப்பு சொல்லுறதை
விட உன் கிட்ட தப்பு இருக்கான்னு பாரு ராசா..எல்லாமுடிச்சும் அவுந்திரும்.—-

—தப்பு ஏன் பேரிலா!—-

“அடுத்த ஆளு…
கும்பிட்டவங்க நகருங்க சார்..”
போலீஸ்காரர் ஓழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார். கண்ணில் ஓத்திக் கொண்டான்.
தட்டில் காணிக்கையை செலுத்தினான்

கொடுத்த திருநீற்றை வாங்கி பூசிக் கொண்டான்.
வெளியே வந்தார்கள்..

நிக்க விடாமல் அழகர் தான் அவசரப் படுத்தினான்..

“அண்ணேன் 11.15 ஆச்சுண்ணேன்
நடைய சாத்திரதுக்குள்ள உறையூர் போயிரணும்”
ஏறி உக்கார்ந்தார்கள்..

“நான் வெக்காளியம்மன் கோயில் போனதில்ல உதயா…”

“இப்பத் தான் போறோமில்ல..”

“என்ன உதயா நான் என்னென்னமோ மனசு கேக்காம கொட்டிக்கிட்டே வர்றேன் ஓண்ணுமே சொல்லமாட்டேங்கிறீயே?”
“வெக்காளிய்ம்மனைக் கும்பிட்டுருவோம்..
நம்ம கதைய பெறகு பேசுவோம்.
மதுரை வரை பேசி தீர்த்துருவோம்..”
“சரி உதயா..”
அவனுக்கும் பழசை பூராவும் அவன் தப்புங்கிற கோணத்தில ஒரு தடவை யோசிச்சுப் பார்க்கணும்..
—அன்னைக்கு 6ஆவது செமஸ்டர் பரீட்சைக்கு பணம் கட்ட க்டைசி நாளு..
ஒவ்வொருத்தராக் கேட்டு கடைசியில் செல்லையா கிட்ட கேட்டேன்..அவனும் இல்லைன்னு கைய விரிச்சுட்டான்..
அப்பவே அங்க இருந்து …செல்லையா ரூமில் இருந்து கிளம்பியிருக்கணும்..
பகல் 2.00 மணி ஆகியிருந்துச்சு. டயம் முடிஞ்சு போச்சு. இனி கல்லூரியில் வாங்க மாட்டாங்க. வங்கி மூலமாத்தான் கட்டணும்கிற ஆயாசம். அப்ப அங்க இருந்த கூட்டாளிங்க கூட பேசிக்கிட்டிருந்தது வெட்டித் தனமாயிருந்தாலும் ஏதோ என் ஆயாசம் கொஞ்சம் குறைஞ்சிருந்த மாதிரி இருந்துச்சு.. செல்லையா..பரிதி…தினா..
நான்… நாலுபேரு தான் இருந்தோம்.. செல்லையா யாரையோ பார்க்கணும்னு கிளம்பினான்.. அவன் ரூமு தான்.. போகும்போது சாவியை நிலை மேல வச்சுட்டு போயிருங்கன்னு போயிட்டான்.. நானும் அதுக்குப் பெறகு ரொம்ப நேரம் நிக்கலை ..கிளம்பீட்டேன்—

—கல்லூரியிலிருந்து திரும்பி வந்து அப்பாவுக்கு போன்போட்டு உள்ளதச் சொல்லி
ஏச்சு வாங்கி, தம்பி கிளம்பி வந்து அடுத்த நாள் பைனோட வங்கிமூலமா பணத்தைக் கட்டி அந்த சலானை கல்லூரி நிர்வாகத்துக்கிட்ட சேர்க்குறதுக்குள்ள என் உயிர்போயி உயிர் வந்துருச்சு—

—-எல்லாம் முடிஞ்சு நான் கல்லூரி முன்னால இருக்கிற டீக் கடையில் உக்கார்ந்து
டீயும் தம்மும் அடிச்சுக்கிட்டிருந்தப்ப வேக வேகமா செல்லையா வந்தான்..
கட்டீட்டியான்னு கேட்டான்..
ஓரு வழியான்னேன்..
ஏதோ அர்த்தம் தொணிக்க அவன் கேள்விக்கு
பதில் கிடைச்ச மாதிரிப் பார்த்துட்டுப் போயிட்டான்—-
—அன்னைக்கு ஓண்ணும் புரியல.
அன்னையிலிருந்து செல்லையா விலக ஆரம்பிச்சான்.
அவன் மட்டுமா இன்னும் நிறையப் பேரு.
எனக்குத் தான் விளங்கலை.
அந்த விலகலை அப்ப பெரிசாவும் உணரலை.
அப்ப விடுதியில் இல்லாம் வெளிய தனியா தங்கியிருந்தது விலகலை பெரிசாக் காட்டலை——

“அண்ணேன் கோயில் வந்துருச்சு..”
“வா..செல்லையா…”
அவசரம் அவசரமாக உள்ளே சென்றார்கள்..

“நேர அம்மா கிட்டப் போயிரலாம். அப்புறம் சுத்தி வரலாம்..”

போயி நின்னு கும்பிட்டாங்க…

“ அம்மனுக்கு நேர் மேலே கூரையில்லே.. ஏன் உதயா?””

“கூரை வேய்ஞ்சாங்களாம் …பத்திக்கிச்சாம்.. உக்கிரம் தாங்கலையாம்..
சொல்லுவாங்க.. அதான் அப்படியே விட்டுட்டாங்களாம்…..”

“அவ்வளவு உக்கிரமான அம்மனா..?”

“பிள்ளைக்கு ஆபத்துன்னா ஆத்தாக்காரிக்கு வர்ற உக்கிரத்தை கேக்கணுமா
நாம பிள்ளைங்க தானே…நமக்கென்ன ஆத்தா கிட்ட பயம் கும்பிட்டுக்க..”

கும்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தார்கள்..

பொறுக்க முடியாமல் செல்லையா விட்ட்தை தொடர்ந்தான்,“நிசம்மா அந்த நேரத்துல சந்தர்ப்ப சூழ்நிலை உம் மேல சந்தேகப்பட வச்சுருச்சு உதயா… பெட்டியில் வச்சிருந்த பணம் காணாம போச்சு..
அன்னைக்கிருந்ததுல பணத் தேவை உனக்குத் தான்.. அடுத்த நாளு கட்டீட்டேன்னு
நீ சொன்ன போது சந்தேகம் வந்துருச்சு…
ஒரு வருசம் கழிச்சுத் தான் எடுத்தது தினான்னு தெரியும்…தெரிஞ்ச உடனே நாங்கள்லாம் ரொம்ப சங்கடப் பட்டோம்.. உன்னைய உக்கார வச்சு விலாவாரியா எல்லாம் சொல்லி தீர்க்குறதுக்குள்ள அந்தப் பரிதிப் பய எல்லாத்தையும் அசந்தர்ப்பமான நேரத்தில் உடைச்சிருக்கான்..
நீ சுத்தமா எங்க கிட்ட இருந்து விலகீட்ட…”

“விடு செல்லையா எனக்கு யாரு மேலயும் வருத்தமில்ல…”

“எல்லாம் என் தப்பு… பரீட்சைக்கு கட்ட வேண்டிய பணத்தை செலவழிக்கிற அள்வுக்கு ஊதாரிய இருந்தது என் தப்பு..எவ்வளவு பெரிய ஊதாரியா இருந்துருக்கேன்..கடனை வாங்கினா ஓழுங்கா டயத்துக்கு தந்ததில்லே…அதுனால அன்னைக்கு நீ தரலை… எல்லாம் என் தப்பு செல்லையா…”
“இல்லப்பா ,தினா லூசுத்தனமா பண்ணினது”
“அட விடு செல்லையா இருக்கிறதிலையே அவன் தான் ரொம்ப பாவம்..
எல்லாரை மாதிரியும் எல்லாருக்கும் செலவழிச்சு சந்தோசப் படுத்த ஆசை.வீட்டுல கொடுக்க மாட்டாங்க.. நாம எல்லோரும்னு அவனைப் படு கேவலமா கஞ்சகக் கூ……..ன்னு…”

“அய்யய்யோ…தப்பு..தப்பு..” கன்னத்தில் போட்டுக் கொண்டான் உதயன்.
“முதல்ல வா செல்லையா கோயிலை விட்டுப் வெளிய போயிருவோம்…”

வெளியே வந்த செல்லையா பொறுக்க மாட்டாமல் சிரித்துவிட்டான்..
“பேச்சு வாக்கில வந்துருச்சு செல்லையா..”

“நிசந்தான் உதயா. அவன் மேல தப்பு கிடையாது..அவனை அந்தளவுக்கு தள்ளினது நாம தான். எல்லாத்துக்கும் மேல பணத்தைக் கவனமா வச்சுக்காம தொலைச்சது
என் தப்பு.. அதை விடப் பெரிய தப்பு ஆதாரமில்லாம சந்தேகப்பட்டது…”

“அதான் செல்லையா .தப்பு நம்ம பேருல தாங்கிற கோணத்தில பார்த்தா
யாரு மேலயும் குத்தஞ் சொல்ல மாட்டோம்…”

“சரி சாப்பிடலாமா உதயா… பசிக்குது..”

“வா வா பிரியாணியே வாங்கித் தர்றேன்.,செல்லையா..”

“பிரியாணியா ..கோயிலுக்குப் போயிட்டா..”

“என்ன செல்லையா.. நாமெல்லாம் சாவல அடிச்சு,கடா வெட்டி சாமி கும்பிடறவங்க தான.. ஆதியில் அஞ்சி அப்புறம் அன்பாகி பலி உணவு படைச்சு கும்பிட்டவங்க தான…நமக்கு வேண்டாம் பாசாங்கெல்லாம் ”
“அழகரு..”
“என்னண்ணே”
“விடு புகாரிக்கு…”
முடிச்சு அவுந்திருச்சு.

——————————————————————————–

Advertisements

சாவு…


சாவு?
என்னவென்றே தெரியாது
சிறு வயதில்..

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு..
அது இளமையில்..
பாம்பை பழுதென்று
எடுத்ததுண்டு…

கொஞ்சம்
கலங்கியது உண்டு
நடுவில்.
இருந்தும் ஓடியதுண்டு
இழந்து நிற்போர்
துயர் துடைக்க…

இன்று
ஒவ்வொரு சாவும்….
எவரெவர் இழப்பும்…
கழுகாய் கொத்துகிறது..
ஈரலை…
வெட்ட வெட்ட
வளரும் ஈரலும்
சீழ் பிடிக்க
தொடங்கி விட்டது…

வலது கை…


காலையில் சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி அமர்ந்தவன் திருச்சி வந்து சேரும் போது மணி 3.00 .
கோயம்பேட்டுக்குள் நுழையும் போது வந்த குறுஞ்செய்தி அவனை திருச்சிக்கு மாத்திப் பேருந்தேற வைத்தது. மதுரைக்கு வண்டியேறுவது தான் அவன் திட்டமாயிருந்தது. அவசர அலுவலக வேலையாகச் சென்னை சென்றிருந்தான்.
மதுரையில் தான் அவனுக்கு வீடு,வேலை எல்லாம்.
வைத்யாவின் மனைவி இறந்துவிட்டதாக சேதுராமன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
வைத்யா. எஸ்.எஸ். வைத்தியநாதன். அவனுக்கு நிறைய செய்திருக்கார்.
முதல் முதலாக வேலை தேடிப் போகும்போது நேர்காணலில் அவனைத் தேர்வு செய்தவர். வேலை பார்க்குமிடத்திலும் மேலே உயர உயர அவனையும் உயர்த்தியவர். நிறுவனங்கள் மாறும் போதும் அவனையும் கூட்டிக் கொண்டே செல்வார். இன்னைக்கு ஓரளவுக்கு அவன் நல்ல உத்தியோகத்தில் இருக்க அவரும் ஒரு காரணம்.சேதுராமனும் அவனைப் போல் வைத்யாவின் கண்டுபிடிப்பே.. அவன் வலதுகை என்றால் சேதுராமன் வைத்யாவுக்கு இடதுகை
வைத்யா ஓய்வு பெற்ற பிறகு திருச்சி தில்லை நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக் குடியேறியிருந்தார்.
மகள் எங்கேயோ வடக்கே. மகன் சென்னையில்.
அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருந்து வந்தார்கள்.
பூர்வீகம் வைத்தீஸ்வரன்கோயில் பக்கம்..

-என்ன ஆச்சுன்னு தெரியலை.
போயிக் கேட்டுக்குவோம்..-

அந்தம்மாவுடன் அவன் நெருங்கிப் பழகினதில்லை. அவர் அதையெல்லாம் அனுமதிக்க மாட்டார். அவர் எப்பவுமே ஒரு மேலதிகாரி.. இருந்தாலும் அந்தம்மாவின் மரணச் செய்தி அவனை பெருந்துக்கத்தில் ஆழ்த்திவிட்டது..

-ஏன்.. அவர் சம்சாரம் இறந்ததுக்கு நமக்கேன் இவ்வளவு துக்கம்..அவரே துக்கப் படமாட்டாரு.. நல்லா தூக்கிப் போட்டுருவாரு.. ஊரு மெச்ச…ஆனா வருத்தப் படுவாரா..இழப்பை உணருவாரா…. தவிப்பாரா சந்தேகந்தான்-

7 மணி நேரப் பயணத்திற்கு பிறகு இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு முகம் கழுவி திருச்சி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தான்.
நெடு நேரமாகிவிட்டது என்று ஒரு சிகரெட்டைப் பத்த வைத்து இழுத்தான்.
துக்க வீட்டுக்குப் போனாலும் அங்கும் அவன் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஒழுங்காகச் செய்கிறானா என்று தான் பார்ப்பார் வைத்யா..

-கட்டிப் பிடிச்சு அழவா போறாரு
மேலதிகாரியாகவே நடந்துக்குவார்.. மாலை வாங்கணும்
முதலில் வயித்துக்கு எதாவது போட்டு விடலாம். பிறகு துக்க வீட்டுக்குப் போகலாம். எல்லாம் முடிய ராத்திரியாயிடும் .இடையில் ஓண்ணுத்துக்கும் வழியிருக்காது-

.
எதிரே சப்பாத்திக் கடை .கண்கள அதைத் தாண்டி பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தன.

அந்தம்மா இறந்த துக்கமா.. வைத்யா மீது எழுந்த இனம் புரியாத கோபமா..
கால்கள் அதை நோக்கி நடந்தன.
திருச்சியில் இருக்கும் போது பல முறை அங்கு சரக்கு வாங்கியிருக்கிறான். ஆனால் அங்கேயே பாரில் அமர்ந்து குடித்ததில்லை.
வீடிருந்தது.எல்லாமிருந்தது.
அத்துமீறி நடக்க தீர்மானித்து ஒரு குவார்ட்டர் போல்ஸ் பிராண்டியை வாங்கிக் கொண்டு பாருக்குள் நுழைந்தான்.போல்ஸ் பிராண்டி அவனுக்குப் புதுசு. அவன் கேட்ட சரக்கு இல்லை.’நல்லா இருக்கும்’, .கடை ஊழியர் சொல்ல ‘பாப்பமேன்னு’, வாங்கிக் கொண்டான்.
-அத்துமீறி நடக்கிறதும் புதுசு தானே-

அந்த நேரத்திலும் கூட்டமாக இருந்தது. உட்கார இடம் தேடியவனுக்கு குப்பை போட வைக்கப்பட்டிருந்த ஒரு பாலிமர் பேரலுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி மட்டும் காலியாக இருப்பது தெரிந்தது.
மெல்ல நடந்து போய் அதில் உட்கார்ந்து கொண்டான்.பெட்டியை கால்களுக்கிடையே பத்திரப் படுத்திக் கொண்டான். அனல் கக்கியது. இத்தனைக்கும் மேலே ஒரு மின்விசிறி சுத்திக் கொண்டு தானிருந்தது.
உக்கார்ந்தவுடன் கவனிக்க நெருங்கிய பார் பணியாளிடம் சோடாவுக்கும் பிளாஸ்டிக் கிளாசுக்கும் சொல்லி விட்டு சுத்தி முத்தி பார்வையை ஓட்டினான்.
அவனுக்கு இடதுபக்கம் உக்கார்ந்திருந்தவர் நடுத்தர வயதுக்காரர்.
ஏதோ ஒரு வகை ரம்மை ஊத்திக் கொண்டிருந்தார். கிளாஸும் பாட்டிலும் பாதிப்பாதி மீந்திருந்தன.காடையோ,கோழி பாதி குதறிக் கிடந்தது.
அந்த வகை ரம்மை அவன் முன்னபின்னப் பார்த்த்தில்லை..
வியர்த்து விறுவிறுத்திருந்தார் எங்கோ பார்வை நெடுந்தோலைவில் கடந்தகாலத்திலோ எதிர்காலத்திலோ நிலைத்திருந்தது..
வாய் புகையை வழியவிட்டுக் கொண்டிருந்தது..
எதிரே அதற்கு நேர் மாறாக இரண்டு கொஞ்ச வயசுப் பசங்க..
ஏதோ சந்தோஷத்தைக் கொண்டாட உள்ளே நுழைந்திருப்பார்கள் போல,
பீரும் சந்தோஷமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அவர்கள் முகங்களிலும் பேச்சிலும் சந்தோஷம் பொங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் குடித்துக்கொண்டிருந்த பீரும் ஏதோ புது வகை. அவன் கண்டிராதது.
ஏழு வருசமாக குடிக்காமல் விலகியிருந்தவனுக்கு இந்த மாற்றங்கள் என்னமோ செய்தன.
பக்கத்திலிருந்த இருந்த குப்பைத் தொட்டியும் எதையோ சொல்லுவது போல பட்டது.
கிளாஸையும் சோடாவையும் கொண்டு வைத்தவர்
‘வேற சார்’, என்று கேட்டு நின்றார்..
‘என்ன இருக்கு?’
‘ஹாஃப் பாயில்,அவிச்ச முட்டை,காடை,சுண்டல், சாலட்’
‘சாலட் கொடுங்க.’
முதல் அறுபதை ஊத்தி சோடாவை உடைத்துக் கலந்து கொண்டான்.
மூக்கின் அருகே கொண்டு சென்று முகர்ந்து பார்த்தான்.
ரொம்ப நாளா மறுக்கப்பட்டிருந்த மணம் படபடப்பை உண்டாக்கியது.
மணத்துப் பார்த்து மூச்சை பரபரப்பாக இழுத்து விட்டான்.
வாயில் வைத்து பாதியை முழுங்கினான்.
கண்ணை மூடி தொண்டை வழியாக சரக்கு இறங்குவதை துளித் துளியாக உணர முனைந்தான்.
வயித்தில் இறங்கியவுடன் குப்பென்று வியர்த்தது. பழக்கப்பட்ட
உணர்வு. ஒரு சிகரெட்டைப் பத்தவைத்துக் கொண்டான்.

ரொம்ப நாளா விட்டிருந்தது .அவசரப்படவேண்டாம்-

தன்னைத் தானே நிதானப் படுத்திக் கொண்டான்.
வந்த சாலட்டிலிருந்து வெள்ளரிக்காய்த் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தான்.
அவன் உத்தேசித்தது போல அசாதாரனமாக எதுவும் ஆகவில்லை.
தைரியம் வந்து மீதியைக் குடித்தான்.
அவன் மனைவி இறந்துவிட்ட பின் இரண்டு மூணு மாசம் வெறும் குடி தான்..
அப்புறம் உடல் நலம் கெட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே
வந்த போது விட்டது…
-வெறுங் கிளாசா வைக்க முடியாது. பறக்கும்.அடுத்த அறுபதைக் கலந்து வைப்போம்-
எதிரே இருந்தவர்கள் கணக்கு முடித்துக் கிளம்பினார்கள்.
புது வரவாக இருவர் அவர்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள்.
வியாபாரிகள் போல ,ஒரு அரை பாட்டில் விஸ்கியை பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
அதுவும் ஏதோ புது வகை..
-விட்டு விலகின உலகம் நிறைய மாறியிருக்கு. தேவையில்லாம
திரும்பிட்டோமோ..
சர்க்கரை வேற வந்துடுச்சு தேவையா
ஒரு நாளு தானே ஓண்ணும் ஆகிடாது…
ரொம்ப யோசிக்க கூடாது-

அடுத்த ரவுண்டை ஊத்திக் காலி செய்தான்..

-வைத்யா பேய் மாதிரி வேலை பார்ப்பாரு.. நம்மளையும் அப்படித்தான் வேலை வாங்கினாரு…
தொழில்ல நல்ல பேரு..அவருக்கும் எனக்கும்..
ஆனா குடும்பம்..? நான் சரியா கவனிக்காம வேலை வேலைன்னு மனைவிய இழந்துட்டேன்..
அவரு-

அடுத்த சிகெரட்டைப் பத்த வைத்து இழுத்தான்.
பக்கத்தில் இருந்த நடுத்தரவயதுக்காரர் அடுத்த குவார்ட்டருக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
ரொம்ப தூரம் போவார் மாதிரிப் பட்டது
எதிரே இருந்த வியாபாரிகள் அரை பாட்டிலை மிக வேகமாகக் காலி செய்து
கொண்டிருந்தார்கள்.
நல்ல லாபத்துக்கு சரக்க கைமாத்தியிருப்பாங்ய போல.

மூணாவது ரவுண்டை ஊத்தி மீந்திருந்த சோடாவையும் கலந்து முழுங்கினான்..

-அவரு குடும்பம் எங்க உருப்பட்டுச்சு.. பையனும் சரியா படிக்கலை..பொண்ணும் சரியா படிக்கலை..ஏதோ காசிருக்கப் போயி
எப்படியோ அந்தம்மா முயற்சியில் அப்படியும் இப்படியுமா தேத்திவிட்டுட்டாங்க-

நேரத்தைப் பார்த்தான் 4.30.
-கணக்கைக் கேட்டு முடிச்சிருவோமா..
அடிச்சது தான் அடிச்சிட்டோம்..
இன்னொரு குவார்ட்டரை வாங்கி ஊத்தினா என்ன-

மிதமாக ஏறியிருந்த போதை இன்னும் இன்னும் என்றது
இன்னொரு குவார்ட்டருக்கு சொன்னான்..
‘இன்னொரு சாலட்?’
‘இல்ல ஹாஃப் பாயில் கொண்டாந்திருங்க,அப்புறம் இன்னொரு சோடா’
‘ஒரு 500 ரூவா நோட்டக் குடுங்க சார்,கடைசியில்
கணக்க பார்த்துக்கலாம்..’
‘சரி’, கொடுத்து விட்டுக் காத்திருந்தான்.

-சேதுராமன் கொஞ்சம் கொஞ்சம் சொல்லுவாரு.அவர் வைத்யாவின் தூரத்து உறவினர்- நடுவீடு வரை போவாரு
-அந்தம்மா தான் வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டதுன்னு…
அன்பா ஒரு வார்த்தை… ம்ஹூம்… பேச மாட்டாராம்.. இவரு நுழைஞ்சாலே
வீடு அமைதியாருமாம் …அமைதியாயிரணும்-

அடுத்த குவார்ர்டரும் சோடாவும் வந்த்து.
‘ஊத்திக்கிட்டிருங்க ஹாஃப் பாயில் வந்துரும்..’

இந்தக் குவார்ட்டரை உடைத்து பாதியை
ஊத்திகொண்டான்.
சோடாவைக் கலக்கும் போது..
கைபேசி அழைத்தது..

சேதுராமன்..
‘என்ன வந்துட்டீங்களா?’
‘வந்துக்கிட்டே இருக்கேன்..’
‘சீக்கிரம் வந்துருங்க..’
‘அவரு எப்படி இருக்காரு..’
‘அப்படியே தான் ..முன்னால நின்னு எல்லா ஏற்பாட்டையும்
பண்ணிக்கிட்டிருக்காரு..எல்லாம் ஒழுங்கா நடக்கணுமில்ல..’
‘சரி…சரி.. சீக்கிரம் வாங்க…
வைத்யாவோட வலதுகை எங்கேன்னு எல்லாரும் கேக்குறாங்க…’

-உதயா…வைத்யாவின் வலதுகை –

-வலதுகை? விசுவாசத்துக்கும் நன்றியுணர்ச்சிக்கு அளவு வேணாம்? அவரு தப்பு பண்றப்ப சுட்டிக் காட்டினதில்ல..
திருத்த முயற்சி செஞ்சதில்லை..
அவரை மீறாமல்,தட்டாமல் அவர் சொன்னபடி நடந்ததால் பலரின்
கால்விரல்களை மிதித்திருக்கிறேன். அவரைப் போலவே பல நல்ல நண்பர்களை இழந்திருக்கிறேன்.
அவரு அதைப் பத்திக் கவலைப் பட்ட்தில்ல.நான் அவரு மாதிரியில்ல வருத்தப்பட்டிருக்கிறேன் –

கோபம் தலைக்கேற ஊத்திக் கலந்த பாதியை அப்படியே முழுங்கினான்.

சுள்ளுன்னு இருந்தது…ஹாஃப் பாயில் வந்திருக்கலை…எரிந்த தொண்டையை சோடாவை ஊத்தி நனைத்துக் கொண்டான்.. போதை ஏற ஏற கோபம் ஏறிக்கிட்டே போச்சு..
-கோபம் அவர் மேலேயா இல்லை எம்மேலேயா.. எம்மேல தான்..அவரை அன்னைக்கு தடுத்திருந்துக்கணும்..இல்ல முயற்சியாவது பண்ணியிருக்கணும்..
அந்த டிரைவரு சம்சாரத்தை அவரு சேர்த்துவச்சிக்கிட்டதை தட்டிக் கேட்டுருக்கணும்-

‘சார் ஹாஃப் பாயில்…’
‘இன்னொண்ணு கொண்டாந்திருங்க’
வந்ததில் வெந்தும் வேகாத மஞ்சக் கருவை கரண்டியில் வழித்து அள்ளி முழுங்கினான். தொண்டைக்கு இதமாக இருந்தது..அந்த மிளகுக் காரம் மதமத்த்திருந்த நாக்குக்கு சுரணையைத் தந்தது.. சப்புக் கொட்டிக் கொண்டான்.
-அவரு பாட்டுக்கு அந்த பொம்பளைய வச்சுக்கிட்டு வீட்டுக்குப் பணம் அனுப்பாம..
சே கொடுமை அவர் பொண்ணு டியுசன் சொல்லிக் கொடுத்து.. பையன் படிக்காமெ வாட்சுமேன் வேலை பார்த்து.. சே-

மீந்திருந்த பாதியையும் ஊத்திக் கலந்தான்.. அவன் மேலேயே அவனுக்கு அருவருப்பு.. ஒரே மூச்சில் முழுங்கினான்.
முழுங்கிவிட்டு சிகரெட்டைப் பத்தவைத்து இழுத்தான்..
யாரோ பார்ப்பது போலப் பட சுத்திமுத்திப் பார்த்தான்..
இட்துபக்கம் உக்கார்ந்திருந்தவரும் எதிரில் இருந்தவர்களும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் கவனிப்பதை உணர்ந்தவுடன் கண்களை தாழ்த்திக் கொண்டார்கள்.
மிதமாக ஆரம்பித்தவன் வேகங்கொண்டது
அவர்கள் கவனத்தை ஈர்த்திருக்கலாம்..
-நல்ல காலம் மேலதிகாரிகளுக்குத் தெரிஞ்சு வப்பாட்டியா வேலையான்னு கேக்கப் போயி விட்டாரு. பேசி அந்தப் பொம்பளைக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்து வலுக்கட்டாயமா பிரிச்சு விட்டதும் நான் தான்…
அதுக்க
ப்புறமாவது குடும்பத்தோட இணைஞ்சிருந்தாரா ம்ஹூம்
அந்தம்வேணுமின்னா கூசாம தூக்கிப் போட்டுறலாம்..நான் போயி அவருக்கு ஒத்தாசையா வலதுகைய்யா நிக்கிறதா..
கூடவே கூடாது-மாவை இவரு படுத்தி வச்ச பாடு சே-
-இவரு
தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டான் உதயா..
‘சார் ஹாஃப் பாயில்..’
‘வச்சிடுங்க..’
‘என்ன சார் கணக்க முடிச்சிரலாமா?’
‘இல்ல இன்னொரு குவார்ட்டரையும் சோடாவையும் கொண்டாந்திருங்க…’

இழுக்கிறது இலக்கு….


இழுத்துக் கொண்டிருக்கிறது இலக்கு.
நெருங்கி விட்டது புரிகிறது.
இழுவிசையின் வலிமையும் கூடிவிட்டது.
கொஞ்சம் பயணித்து விட்டால
அது என்னவென்று
தெரிந்து விடும்?
பாதை தான் சுட்டெரிக்கிறது…
எரிகின்றன
சுருட்டி சுருட்டிச்
சுமந்த முகங்கள்..
பொசுங்கி புகைந்து விட்டன
எத்தனையோ முகங்கள்.
இலக்கை எட்டும்போது
அதைக் காண
எது தான் எஞ்சும்?
இல்லை நான்
முகமற்றவனா?

இனி குழம்பி புலம்பி
புண்ணியமில்லை..
ஒப்புவித்தாயிற்று
இழுவிசையின் வலிவிலிருந்து
இனி விடுபட வலிவில்லை
எரிய எரிய இழுக்கிறது…
இன்னும் எரிய
இழுக்கிறது இலக்கு..

பாவம்….


பாவம்..
பெருவெற்றி பெற்றவனும்
தடுமாறி
படுதோல்வி அடைந்தவனும்.

முன்னவனை
ஒன்றுவிட்ட
இரண்டு விட்ட
மூன்றுவிட்ட
உறவுகளைக்
கொண்டாட
தேடியலையும்
ஒரு கூட்டம்.

பின்னவனை
ஓட்டிப் பிறந்த
உறவை
ரத்தம் சொட்ட சொட்ட
வெட்டியெறியும்..
உடன் பிறந்த
கூட்டம்.

கங்கை…


அவள் ஒரு யோகினி
இரட்டைகளைக் கடந்த சாட்சி.
அவளுக்கில்லை
விருப்பும் வெறுப்பும்;
இன்பமும் துன்பமும்.

அவளுக்கு இருப்பு மட்டுமே
இல்லை இன்மையென்பதே.
பிறப்பும் இறப்புமற்ற
மரணமில்லாப் பயணி அவள்!

நிலைமாறி உருமாறி
அன்னையைப் பிரிவதில்
தொடங்குகிறது அவள் பயணம்..
வானேகி திரளுகிறாள்
மேகக்கூட்டமாய்..

மின்னி இடித்து முன்னறிவித்து
மழையாய் மலையில் விழுந்து
ஏரியாய் உறைந்து
உடைந்து வழிந்து
குதித்து இறங்குகிறாள்…

இறங்க இறங்க
வேகமெடுக்கிறது பயணம்.
மேட்டில் குதித்திறங்கும் சிறுமி;
இடையில் இடை சிறுத்த குமரி.
பள்ளத்தில் பரவி
அகல்கிறது பயணம்…

அகண்டவள் பிரிந்து
பின்னர் சேர்ந்து
வளைந்து நெளிந்து
முட்டி மோதி முந்துகிறாள்..
ஆயிரங் கைகளை விரித்து
ஆர்ப்பரித்து வரவேற்கும்
அவள் அன்னையைக் கண்டு
வேகமெடுத்து ஓடி
இரண்டரக் கலந்து முடிக்கிறாள்.

அன்னையை பிரிந்து
சுற்றித் திரிந்து
அன்னையில் முடிக்கும்
அவளுக்கு பயணம் மட்டுமே.
தோற்றமுமில்லை மறைவுமில்லை..
என்றென்றும் பயணிக்கும்
அவள் நிரந்தர சாட்சி.

பேரு என்னமோ ஒண்ணு தான்.


பேரு என்னமோ ஒண்ணு தான்.
கூப்பிடுறது மட்டும்
அவரவர் தோதுக்கு…
‘பொறவா’, இது தம்பி.
‘பிரவா’, இது அம்மா
உச்சரிப்பு சுத்தமாக
‘பிரபா’, இது அப்பா.
பேருக்கு திரும்புகிறோமா?
கூப்பிட்ட குரலில்
இழையோடும் பரிவை
இனம் கண்டு
இளகி
இணங்குகிறோமா?