நாளைக்கு நமக்கும் வயசாகும்!


இன்னைக்கு ஜனவரி 6..
இன்னும் 11நாளுல அப்பாவுக்குப் பிறந்த நாள்.
76முடிஞ்சு 77 ஆரம்பிக்கும்.
வருசா வருசம் புதுசா சட்டைத்துணி எடுத்து தைச்சிருவோம்.இந்தவட்டம் ‘கைலியும் துண்டும் போதும்’மிட்டாரு.
கேட்டதுக்கு, ‘கொள்ள சட்டையிருக்குடா..
வீணா எதுக்குடா ..’ன்னுட்டாரு.
மனசு கேக்கலை. ஆனாலும் அவரு பேச்சை மீற முடியாது.
பெறகு படுத்த படுக்கையாகிப்போனதினாலெ அவரு பேச்சை கேக்கலைன்னு சங்கடப்பட்டுப் போவாரு.
ஆமா, ரெண்டு வருசமாச்சு. நடமாட்டம் குறைஞ்சு போயி.
இப்பக் கொஞ்சம் பரவாயில்லை. ஆரம்பத்தில் ஓண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் கூட படுத்த படுக்கையில் தான்.
இப்ப கொஞ்சம் தேறியிருக்காரு… ரெண்டுக்குக்கு எந்திரிச்சு கக்கூஸுக்கு போயிக்கிறாரு..
ஓண்ணுக்குக்கு கட்டிலுக்கு பக்கத்திலே வாளி வச்சிருக்கோம். இழுத்து வச்சு எந்திருச்சு உகார்ந்து இருந்துக்கிறாரு.
முடிஞ்ச மட்டும் முகம் வாடாமத் தான் பார்த்துக்குறோம்…
ஆனாலும் சில நேரங்கள்ள கோவிச்சுக்கிறாரு…
தனியா கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டேங்கிறாரு…
‘என்னடா பக்கத்தில வந்தா எதாவது வேலை சொல்கிறேன்னு வர மாட்டேங்கிறீங்களா’,-கோவிச்சுக்கிறாரு…
பேசாமக் கேட்டுக்குவோம்..
காலிங்க் பெல் அடிச்சாலோ,,ஃபோன் அடிக்கிற சத்தம் கேட்டாலோ ஆரு ஆருன்னு அலைமோதிப்போவாரு.. வந்தவங்களை,கூப்பிட்டவங்களை கவனிக்கிறதில ஆருன்னு சொல்லாம விட்டுட்டோமின்னா அவ்வளவு தான்..
‘என்னை மதிக்கலேன்னு’, பொங்கிருவாரு…
அவரால ஆகப்போறது ஓண்ணுமில்லை. எல்லாத்தையும் தான் நாங்க பொறுப்பா பார்த்துக்குறோம்கிறதை புரிஞ்சுக்கிறதில்லை.
இதே அப்பா தான் அம்மா வழித் தாத்தா இடையில் கொஞ்ச நாளு எங்க வீட்டில் இருந்து இதே மாதிரி நடந்துக்கிட்ட போது…
‘பெரியவரு அவரு பாட்டுக்கு இருந்தா என்ன’ன்னு சங்கடப்பட்டுக்கிட்டாரு…
நாளைக்கு நாமளும் இப்படித்தான் நடந்துக்குவோமா… கூடாது.
வயசானவங்க மனசைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கிறதுக்கு எதாவது புத்த்கமிருந்தா தேவலை.. கொஞ்சம் நல்லாருக்கும்.
ஏதோ கொஞ்சம்
அம்மா அவங்க அப்பாவை காவனிச்சுக்கிட்டது..
சித்தப்பா எங்க பாட்டியைப் பார்த்துக்கிட்டது…
சின்ன வயசிலே எங்க அம்மாவோட தாத்தாவை சித்தி கவனிச்சுக்கிட்டது..
போக வர பார்த்திருந்த அந்த அனுபவங்க கைகொடுக்க ,அப்பா மேல இருக்கிற மரியாதையும் பாசமும் உந்த தெரிஞ்ச அள்வுக்கு பார்த்துக்கிறோம்.

அவருக்கு பல்லெல்லாம் விழுந்திருச்சு.. சர்க்கரையும் இருக்கு..கிட்னி வேற ஓண்ணு தான்..
சாப்பாட்டுல் ஏகப்பட்ட கட்டுப்பாடு.. கைநிறைய மாத்திரை…காலையிலும் ராத்திரியும் இன்சுலின் ஊசி போடணும்.
அம்மாவுக்கும் கொள்ள வயசாயிடுச்சு. அடுத்தடுத்து இரண்டு கண்ணிலும் ஆபரேசன்…
பசங்க நாங்க பெரும்பகுதியை செய்யலேன்னா அம்மாவுக்கு நகண்டு போகும்..
இதுக்காகவே அவர் பாக்கத்திலேயே தான் படுத்துக்கிறது….
குளிப்பாட்டுறது கொள்றது எல்லாம் நாங்க தான்..
இடையில் மருத்துவமனையில் நர்சுகளும் வார்டுபாய்களும் கவனிச்சுக்கிட்ட்தை ஊனி பார்த்திருந்தோமா..நல்லதாப் போச்சு..
அவங்க நல்லா இருக்கணும். நல்லாப் பார்த்துக்கிட்டதோட எப்படிப் பார்த்துகக்ணும்னு செஞ்சு காட்டி மனசில் படிய வச்சுட்டாங்க.
அப்பாவை படுக்கையில் இருந்து எழுப்பாமலே படுக்கை விரிப்பை மாத்திறது..
ஓண்ணுக்கு இரண்டுக்கு போனா சுத்தம் செய்யிறது எல்லாம்..
சேவிங்க்,கட்டிங்க் கூட இந்த ரெண்டு வருசத்துல பழகிக்கிட்டோம்.
விஞ்ஞானம் வேற நல்லா வளர்ந்திருக்குங்க…
underpad ,gloves அது இதுன்னு என்னென்னமோ கிடைக்குதுங்க…
கொஞ்சம் காசு கூடத்தான்.. அதான் அப்பா நிறையா சேர்த்து வச்சிருக்காரே.. அவருக்கு பயன்படாதா காசு ஒரு காசா..?

கூடப் படுத்திருக்கிறவங்களுக்கு கொஞ்சம் சிரமந்தான்..
ஃபேனெல்லாம் அவர் தோதுக்குத் தான் போட்டுக்க முடியும் …
அவருக்கும் புரியாமலில்லை..
‘ரொம்பக் கஷ்டப்படுத்திறனாடா அய்யா?’ம்பாரு..
‘அதெல்லாமில்லப்பா’ன்னு சமாதானப்படுத்திறதுக்குள்ள சங்கடப்பட்டு போயிருவோம்.
அவரு வயசு நண்பர்களை, சொந்த்க்காரங்களை பார்க்கப் பிரியப்படுவாரு.
தேடிப்பிடிச்சு கூட்டியாருவோம்…
இன்னைக்குத் தான் காலையில் கேட்டோம்,
‘ஏம்ப்பா நல்லா பார்த்துக்குறோமா இல்ல எதாவது குறை கிறை வச்சுர்றோமா’
‘இல்லைடா அய்யாங்களா..நீங்க நல்லா இருக்கணும்டா…’
தயங்கித் தயங்கி இதையும் கேட்டோம்,
‘ஏம்ப்பா எங்களுக்கும் அம்பதாச்சு நாளைக்கு எங்களுக்கும் உதவுமில்ல.எப்படிப்பா மூப்பை எதிர்கொள்றது…’
அதுக்கு அவர் சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.
‘முதல்ல உடம்பு வெயிட்டைக் குறைச்சுக்கங்கடா…’,
ஆமா அப்பாவுக்கு கொஞ்சம் பருத்த உடம்பு . ஒரு ஆளால தாங்கிப் படிக்கத் தான் முடியும். தூக்கக் கொள்ள ரெண்டாளு வேணும்.

அவர் பிறந்த நாளுக்கு
அவருக்குப் பிடிச்ச மாதிரி கைலியும் துண்டு எடுக்கணும்..
கிருஷணா ஸ்வீட்ஸ் பாதாம் அல்வா அவருக்கு ரொம்ப பிடிக்கும்..
ஒருநாளைக்கு கொஞ்சம் திண்ணா ஓண்ணுமாகாது
வாங்கிக் கொடுக்கணும்.
நண்பன் ஒருவன் சைக்காலஜி படிச்சுட்டு counseling எல்லாம் சமூக சேவையா செஞ்சுக்கிட்டிருக்கான்.
அவனைக் கூட்டியாந்து அப்பாவோடு பேச வைக்கணும்..
நமக்கும் தெரியாம புரியாம அவருக்கு எதாவது குறை இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.தீர்த்து வைக்கணும்.
நாளைக்கு நமக்கும் வயசாகும்.

Advertisements