ஆதிமுகங்கள்…


பழைய நண்பர்களை
தவிர்த்து வந்தேன்.
அவர்கள் குற்றமில்லை!
பழகிய இடங்களையும்
தவிர்த்து வந்தேன்.
அவைகளின் குறையுமில்லை!
எனக்கே பிடிக்கவில்லை.
என் பழைய முகங்களை.
இன்றைய என் மதிப்பீடுகளில்
அன்றைய என் முகங்கள்?
தாழ்ந்த அந்த தட்டு
தடுத்தே வந்தது….
நேற்று வரை.

இன்று புறப்பட்டு விட்டேன்!
பழகிய இடங்களுக்கு
பழைய நண்பர்களை தேடி..

இன்றைய என் முகத்திற்கு
உருவம் தந்தது
அந்த ஆதிமுகங்கள் தானே!

Advertisements

போர்வை.


கூட்டம் இழுத்துக்கொண்டே போனது…
முடிகிற மாதிரி தெரியவில்லை…
இத்தனைக்கும் இவன் பகுதியில் திட்டமிட்டபடி தான் வேலை நடந்து கொண்டிருந்தது…
‘சே எப்ப முடிஞ்சு.எப்ப போக…
இன்னைக்கு எப்படியாவது ரெண்டு போர்வை..இரெண்டென்ன நாலஞ்செ வாங்கிப்போட்டுரணும்..’

அவனது அலுவலகத்திலிருந்து ரொம்பத் தூரமில்லை கோ-ஆப்டெகஸ்..
‘இவங்ய முடிக்கணுமே.. தஞ்சாவூரை இப்பத்தான் எடுத்திருக்காங்ய…அதுக்கப்புறம் திருநெல்வேலி..’
மாத ஆய்வுக்கூட்டம் இந்த வட்டம் திருச்சியில் அவன் பகுதியில்…
மதுரை திருநெல்வேலி ,தஞ்சாவூர், சேலம் பகுதி மேலாளர்களெல்லாம் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்..
நிறுவனத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்ய சென்னை வட்ட அலுவலகத்திலிருந்து மூத்த அதிகாரிகள் வந்திருந்தார்கள்.
வட்டாவட்டம் ஒவ்வொரு பகுதி அலுவலகத்தில் நடத்துவார்கள்.
போனமாசம் மதுரையில்…இவன் பொறுப்பிலிருக்கும் திருச்சி பகுதியின் ஆய்வு முடிந்தவுடன்…
‘வேலெ கெடக்குதுன்னு கம்பி நீட்டியாச்சு..
இங்க முடியாதே .. எல்லாம் முடிஞ்சு.. மேலதிகாரிகளை கொண்டு போய் தங்குமிடத்தில் சேர்த்து கவனித்து நாசூக்காகத் தான் நழுவனும்..
7,8 மணி ஆயிடும்…’

ஆய்வுக் கூட்டம் நடப்பது அவன் கட்டுப்பாட்டிலிருக்கும் திருச்சி அலுவலகத்தில்…
கடுப்பாகிப் போனவன் அந்த அறையிலிருந்து
வெளியே வந்தான்…
‘ஊதிவிட்டு வந்தாலென்ன..
ஊதுறுதுக்கு சுத்துச்சுவரைத் தாண்டிரணும்…’

வெளியே போய் அவன் வண்டிக்குள் வைத்திருந்த சிகரெட் பெட்டியைத் திறந்து ஓன்றை எடுத்துப் பத்த வைத்தான்…
இரண்டு இழுப்பு இழுப்பு இழுத்து ஊதியிருப்பான்..
“என்னடா அனலா…?நீ பாட்டுக்கு வந்துட்ட…”
வைத்யா… அவனோட மேலதிகாரி…
“இல்ல சார் ரெண்டு இழுப்பு இழுக்கலாம்னு…”
“நாங்க இழுக்கமாட்டமாக்கும்…”
“இந்தாங்க சார்…”
வாங்கி பத்த வைத்துக் கொண்டார்…
“ஏண்டா ஒரு மாதிரி இருக்க..?”
‘என்னத்த சொல்லுறது…சீக்கிரம் விட்டுருங்கன்னா….’
“இல்ல சார் வீட்டுல விருந்தாடிங்க வந்திருக்காங்க…..”
“சீக்கிரம் போகணுமாக்கும்… விருந்தாடிங்கள கவனிக்கணுமாக்கும்..
அப்ப நாங்க…. நாங்களும் விருந்தாடிங்கதானெடா…”
‘நல்ல விருந்தாடிங்க….இதுக்குன்னே ஊரெ விட்டு கிளம்பி வந்துருராங்ய….’
“டேய்..டேய்…. சத்தமா யோசிக்காதெடா.. காதுல விழுகுது….”
“சார்…சார்..என்ன நீங்க பாட்டுக்கு…என்னென்னமோ…”
“அப்படித்தான் நானும் எம் மேலதிகாரிங்க கிட்ட பொய் சொல்லி சமாளிச்சிருக்கிறேன்..சரி சரி உள்ள வா…சீக்கிரம் முடிக்கப் பார்க்கலாம்…”
‘இந்தாளு வேறெ,…’
பின்னாலேயே சென்றான்…
உள்ளே தஞ்சாவூர் படம் இன்னும் ஓடிக்கிட்டிருந்தது…
ஆயாசத்துடன் உட்கார்ந்தான்…
‘சே ஒரு போர்வையை வாங்கணும்.. விடமாட்டேங்குறாங்களே…
திடுதிப்புன்னு விருந்தாடிங்க வந்துட்டாங்ய… இருந்த போர்வையெல்லாம் பிரிச்சுக் குடுத்துட்டு ஓண்ணை வச்சு சமாளிக்கலாம்ணு படுத்தா முடியலியே…
நிறைய படுக்கை விரிப்புக்கள் இருந்துச்சு…
அதுல ரெண்டை திரையா தச்சு..இவ படுத்துற பாடு இருக்கே…’

“என்ன நீங்க காண்ட்ராக்டர் பேமெண்ட் வரலெ வரலென்னே சொல்லிக்கிட்டிருக்கீங்க….
வேலைய எப்பத்தான் முடிப்பீங்க…
சரி..பில்லை எப்ப அனுப்பி வச்சீங்க…”
“அது ..அது போன மாசம் …”இழுத்தார் தஞ்சாவூர் மேலாளர்…
“நீங்க தான் தப்பு பண்ணியிருக்கீங்க…இந்த மாதிரி வரும்னு உங்களுக்குத் தெரியாதா…வேலை செய்யிறவங்களுக்கு பேமென்ட் சரியான நேரத்துக்கு கிடைக்கணும்னா நீங்க தான் பில்லை முன்கூட்டியே அனுப்பி வச்சு அதை தொடர்ச்சியா வாங்கித் தர அழுத்தம் கொடுத்திருக்கணும்…இப்படி ரெண்டையும் போட்டு குழ்ப்ப்பிக்கிட்டு ..சே.. இது நல்லால்லே…”
“சாரி சார்…”
‘முன்கூட்டியே எங்கிட்டு வாங்கி வைக்கிறது…
யாருக்குத் தெரியும் திடீருன்னு விருந்தாடிங்க வருவாங்யன்னு.. அதுவும் மார்கழி மாசத்துல…’

“பாருங்க…அனலனை…தீயா வேலை பார்த்திருக்காரு…”
தஞ்சாவூர் மேலாளர் அனலனைப் பார்த்த பார்வையில் தீப்பொறி பறந்தது…
‘கொளுத்தி போட்டுட்டு போயிருவாங்ய… கிடைக்கிற கொஞ்ச நஞ்ச உதவியும் கெட்டுப் போகும்…
எப்படியோ தஞ்சாவூர் முடிஞ்சு.. திருநெல்வேலி ஆரம்பிச்சுருச்சு..
சீக்கிரம் முடிஞ்சுரும்…
அப்புறம் இங்கெ இருந்து ஓட்டலுக்கு..
அங்கெ எப்படியும் ஒரு மணி நேரம்…
கோ-ஆப்டெக்ஸ் எட்டரை மணிக்கு வரை திறந்திருக்காதா?
நாலெஞ்சை புடிச்சுப்போட்டுரணும்…
நேத்து ஏன் இப்பிடிக் குளிருச்சு…அவளும் பாவம் குளிருக்கு நல்லா இழுத்துப்போர்த்திக்கிட்டா.. அலுப்புல உருண்டு விலகி…
அவ விலகிப் போனதில் போர்வையும் விலகி குளிரெடுத்து…முழிச்சு.. வெட வெடத்து சே…
இன்னைக்கு எப்படியாவது வாங்கீரணும்…’

“அனலன்… அனலன் என்ன இங்க கவனிங்க..”
தடுமாறி..
“என்ன.. என்ன சார்..?”
“திருநெல்வேலிக்கு எரெக்ஷன் ஆளுங்க வேணுமாம்…
உங்க ஆளுங்க யாரையாவது அனுப்பி வையுங்க.. உங்களுக்குத் தான் வேலை கிட்டத்தட்ட நெருக்கி முடிஞ்சுருச்சுல்ல…”
“சரி சார் ஏற்பாடு பண்ணிருறேன்…”
‘அடுத்தவனுக்கு குடுத்துட்டு நான் என்ன பண்ணிறது…அதுவும் இந்த திருநெல்வேலிக்காரன் வில்லங்கம் பிடிச்சவன். மலைமுழுங்கி அனுப்புற ஆளை அங்கே அமுத்திப் பிடிச்சுக்குவான்…
சுயநலந்தான்! என்ன பண்ணித் தொலைக்கிறது…சுயநலம்னு வந்துட்டாலே எல்லா களவாணித்தனமும் வந்து தொலைக்குது…
நேத்து இப்படித்தானே… அதுக்குத் தானே போர்வைய…
சீக்கிரம் முடிங்கப்பா…’

ஒரு வழியா கூட்டம் முடிஞ்சு பிரிய 6.45 ஆகிவிட்டது…
பிற பகுதி மேலாளர்கள் எல்லோரும் தப்பித்தால் போதுமென்று விலக, மூன்று மேலதிகாரிகளையும் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு கிளம்பினான்…
அவன் அலுவலகம் இருந்தது தில்லை நகரில். அவர்கள் தங்கியிருந்தது திருச்சி பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில்…
போகும் வழியிலேயே அவர்கள் அருந்த ஒரு ஃபுல் பாட்டிலைப் பிடித்துக்கொண்டான்..வைத்யாவுக்கு பிடித்த சரக்கு தான்…
சாப்பாடெல்லாம் கம்பெனி கணக்கில்.. பார் பில்லை கம்பெனி தராது…

அந்தச் செலவு எப்பவும் இப்படித்தான் ..அந்தந்த பகுதி மேலாளர் செலவு,

-நானெல்லாம் செலவழிச்சுத் தாண்டா மேல வந்திருக்கேன்…சீக்கிரம் மேலுக்கு வந்துடு –கேட்டால் வைத்யா இப்படித்தான் சொல்வார்.

‘நீ செலவு பண்ணு…இல்ல கான்ட்ராகடர் தலைல கட்டு…எனக்குத் தெரியாதும்பார்..
எல்லாம் சுயநலம்…அதுனால களவாணித்தனம்…’

ஒரு வழியா ஓட்டல் வந்தது…
வைத்யாவுடன் அவர் அறைக்குச் சென்றார்கள்..
“முதல்ல டீ சொல்லுறா…”
வைத்யா இப்படி அவனை ஒருமையில் விளித்தது மற்ற இருவரையும் நெளிய வைத்தது. கம்பெனிக்கு புதியவர்கள்..
அவர்களையும் இன்னும் சில நாட்களில் வைத்யா அப்படித் தான் விளித்துப் பேசுவார் என்பது அவர்களுக்கு தெரியாது…
அவர் அப்படித் தான்…
“சரி சார்…”
‘டீய குடிச்சுட்டு குளிக்கப் போவாங்கய….அப்புறம் தான் ஆரம்பிப்பாங்ய..
ஆரம்பிச்சா கழண்டுக்கலாம்..’

டீ சொல்லி விட்டு ஃபோனை வைத்தவனை
புதியவர்களில் ஒருவர் கேட்டார்.. “ஏன் அனலன்..என்ன பேரு இது… நீங்க புரட்சிக்காரரா இல்ல உங்கப்பா புரட்சிக்காரரா?”
புதுசா வேறு நிறுவனத்தில இருந்து வந்து சேர்ந்தவர்.. பொறுமையா பதில் சொன்னான் அனலன்…,
“இரண்டு பேரும் இல்ல சார்.. அப்பாவுக்கு அப்பர் பாடல்கள் பிடிக்கும்…
அதுல அவருக்கு ரொம்ப் பிடிச்சது..
‘அங்கமலத்து அயனும் மாலுங்காணாத அனலுருவா நின் பாதம் போற்றி போற்றி’ங்கிற வரி …
அனலருவன்னு தான் எனக்கு பேரு வச்சாரு.. பள்ளிக்கூடத்துல சேர்க்குறதுக்குள்ள அத அனலன்னு எல்லோரும் கூப்பிட்டே சுருக்கிட்டாங்க…”

“சே நாங்கூட…சாரி அனலன்…”
“தப்பில்ல சார்.. அப்பர் ‘நாமார்க்கும் குடியல்லாம் நமனை அஞ்சோம்’னு அந்தகாலத்துல ஆதிக்கத்திலிருந்தவங்களெ எதிர்த்தவர் தானே… என்ன,உழவாரப்படை ஏந்தினாரு”

“இவனும் அனலன் தான்.. இன்னைக்குப் பாருங்க எவ்வளவு தகிக்கிறான் எல்லாம் கிளம்பிறதுக்கு …அனலா கொதிக்கிறான்…”, வைத்யா அவர் எரிச்சலை காட்டினார்.

“சார்.. விருந்தாடிங்க ..சார்..”

“பார்த்தீங்களா…”

“அப்படின்னா கிளம்பட்டுமே எதுக்கு அவரை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு…”,
“சரிடா சாரு தான் சொல்லிட்டாருல்ல… பாட்டிலை ஒப்படைச்சுட்டு கிளம்பு…”

‘அய்யா சாமிங்களா நல்லா இருக்கணும்…’

“இந்தா இருக்கு சார்.. நாளைக்கு காலைல வர்றேன் சார்…”
“எட்டரை மணிக்கெல்லாம் வந்துடு.. வேலையெல்லாம் சுத்திப் பார்த்துட்டு நாங்க சென்னைக்கு கிளம்பணும்…”

அப்பாடா…
வெளியே வந்தான்…
சரியா 7.45..
விழுந்தடித்துக்கொண்டு கோ-ஆப்டெகஸுக்கு பறந்தான்…
நல்லவேளை திறந்திருந்தது…
படியேறி அஞ்சு போர்வைகளை அள்ளிக்கொண்டான்…
‘அப்பாடா…வாங்கியாச்சு..
இனிமேல் கவலையில்லை..
ராத்திரிக் குளிரில் வெடவெடத்த போது…
சுயநலம் தலைக்கேறி கட்டின பெண்டாட்டி போர்த்தியிருந்த போர்வையை உருவ நினைச்ச களவாணித்தனம்… அதைச் செய்ய முடியாமெ வந்த கோபம்
எல்லாம் ஒரு நிமிசந்தான்…
ஆனா அந்த ஒரு நிமிசம் ….அருவருப்பாகிப் போச்சு…
சுயநலம்- களவாணித்தனம்- கோபம் எல்லாம் வந்து தொலைச்சு..
சே…
போர்வைய வாங்கியாச்சு.’

விலகி விலகி…


துயரம்,-
பெரும்பாலும் அது தான்-
துன்பத்தை
இரட்டிப்பாக்கித் தொலைக்கிறது!
தன்னிச்சையாக
சாய்ந்து கொள்ள
அவள் தோள்
தேடும் தலை
அது கிடைக்காமல்
தடுமாறி கனத்து
சுமந்து திரியும் பாரத்தை
இன்னும் பருக்க வைக்கிறது….

சந்தோஷம்,-
தப்பித் தவறி
எப்பொழுதாவது தான்-
அதுவும் கூட கொல்லுகிறது….
பகிர்ந்து கொள்ள
அனிச்சையாக துழாவும்
கைகளுக்கு
இல்லாத அவளின்
கைகள் எட்டுவதில்லை.
உண்மை
அறைய உறைகின்றன
சட்டென்று…

இப்பொழுதெல்லாம்
விலகி விலகி
தனிமையை
அதிகம் நாடுகிறேன்..

உள்ளே ஓங்கும் ஒலம்
பிறர் செவிப்பறைகளில்
மோதாமலிருக்க…