வலியில்லாமல் இருந்து விட கூடாதா?


விரல் பிடித்து
நடக்க வைத்து
படிக்க வைத்து
ஆளாக்கிய அப்பன்…
படுத்த படுக்கையாய்..

விழுந்த பொழுதெல்லாம்
தூக்கி நிறுத்தியவன்..
நெடுஞ்சாண்கிடையாய்…

தூணாய் தாங்கியவன்
வலி தாங்காமல்
அரற்றும் குழந்தையாய்…

பிதுக்கியெடுத்துவிட்டது
சிகிச்சை
அவரையும்,
எங்கள் கையிருப்பையும்…

அப்பனுக்கு குறையவில்லை
உடல்வலி..
எங்களுக்கு குறையவில்லை
மனவலி……

இருக்கத்தான் வந்தோம்..
இல்லாமல் ஆகத்தான் போகிறோம்..
இருக்கும்வரை வலியில்லாமல்
இருந்து விட கூடாதா?
.

Advertisements

அந்த படம் ஞாபகமிருக்கா?


உதயா..உதயா..
எங்கிருந்தோ யாரோ கூப்பிடுறது போல இருக்க
‘ம்ம்…ம்ம்…ம்ம்..’
உறக்கத்திலிருந்து விடுபடாத ,நிதானம் பிடிபடாத உதயன் குழறினான்..
‘’அய்யா…உதயா..”
‘அய்யோ அப்பா..’
வாரிச் சுருட்டி எழுந்தவனுக்கு அறையில் பரவியிருந்த
அந்த துர்நாற்றம் நிலைமையை புரிய வைத்தது…
அப்பா மலம் கழித்திருக்கிறார்….
“இந்தா வந்துட்டேம்பா..”
சுதாரித்து எழுந்து விளக்கை எரியவிட்டான்.. ஏ.சியை நிறுத்தி சன்னல்களை திறந்து விட்டான்..
ஒருக்களித்து படுத்திருந்த அப்பா தலையைத் திருப்பி சங்கடப்பட்டிருந்த
அந்த அவஸ்தையிலும் சங்கடப்படுத்துகிறோமே என்பது தொனிக்க அவனை பார்த்து,
“வந்துருச்சுப்பா…”
“இந்தா எடுத்துர்றேம்ப்பா…”
அட்டாச்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் ஒரு கோப்பையில் தண்ணியை பிடித்து அதில் டெட்டாலை கலந்து கொண்டான்..
தயாராய் கட்டிலுக்கருகே வைத்திருந்த கையுறைகளை மாட்டிக்கொண்டு பஞ்சை நனைத்து மலத்தை ஒதுக்கி அவர் புட்டத்தை துடைத்து விட்டான்..
பஞ்சை அதிலேயே போட்டு அப்படியே அண்டர்பேட்டை சுருட்டி அவருக்கடியிலிருந்ததை அகற்றி ஒரு பாலித்தீன் பையில் போட்டு முடித்து குப்பைகள் வைக்கும் இடத்தில் வைத்தான்..
படுக்கை விரிப்பு அசிங்கமாகவில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்
மற்றோரு புதிய அண்டர்பேடை விரித்து அவரை மல்லாக்க படுக்க வைத்தான்…(அண்டர்பேட் 3அடி நீளமும் 2 அடி அகலமான ஒரு விரிப்பு..மேற்புரம் மென்மையாக உறிஞ்சிக்கொள்ளும் வகையிலும்,அடிப்புறம் உறிஞ்சியதை வெளிவிடாத வகையில் வழுவழுப்பாகவும் இருக்கும்.. நவீன மருத்துவ வசதி..படுத்தபடுக்கையாய போன வயதானவர்களுக்கு பேருதவி.. அனைத்து வர்க்கத்தினருக்கும் கிடைக்கும் வகையில் மலிவானால் புண்ணியம். ஆகுமா? ஆகணும்..)
கொஞ்சம் தண்ணி…
இந்தா..
அவசர அவசரமாக பாட்டிலிலிருந்து தண்ணியை ஒரு சின்ன டம்ளரில் ஊற்றி அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான்…
“போதுமாப்பா…?”
“போதும்பா..”
“ரொம்ப நேரமா கூப்பிட்டீங்களா..?”
“ம்ம்..ம்ம”
“சாரிப்பா…அசந்துட்டேன்…”
“வழக்கமா …உடனே முழிச்சுக்குவ..இன்னைக்கு கொஞ்சம்….
ஏண்டா அய்யா.. உடம்பு கிடம்பு…?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா…கொஞ்சம் அசந்துட்டேன்…அவ்வளவு தான்.”
“மணியென்ன பாரு ..”
எழுந்து கைபேசியையெடுத்து பார்த்தான் இரவு 3.30..
“மூணரைப்பா..வேற எதாவது வேணுமாப்பா..
டீ கீ போட்டுத்தரட்டா…”
“வேணாம்யா…படுத்துக்க…”
‘தூக்கம் பிடிக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும்…’
விளக்கை அணைத்தான்..
‘நாற்றம் போக கொஞ்ச நேரம் பிடிக்கும்…ஒரு தம்மைப் போட்டுட்டு வருவோம்..அப்புறம் சன்னலை சாத்தி ஏசியைப் போடலாம்…’

பாத்ரூமிறிகுள் நுழைந்து பத்தவைத்து இழுத்துக் கொண்டான்..
‘சே அசந்திருக்க கூடாது…
என்ன செய்ய உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதே…
நமக்கும் நாப்பத்தஞ்சாச்சே…
ரோசக்கார மனுசன் …மனசு என்ன பாடு பட்டுச்சோ…
நல்லா வளர்த்த பாசக்காரரு..பாவம் இரண்டரை வருசமா படுத்தபடுக்கையா..
வயசு 80 ஆகிப் போச்சு..நாமளும் முடிஞ்ச மட்டுந்தான் பார்க்குறோம்..இன்னமும் இந்த முறுக்கும் ரோசமும்…….’
போதுமென்று அணைத்து விட்டு வெளியே வந்தான்..
சன்னல்களை சாத்திவிட்டு ரூம் ஃப்ரஷ்னரை அடித்து ஏசியை ஓட விட்டான்…
படுத்துக்கொண்டவன் கண்மூடி தூங்க முயன்று தோற்று அடிக்கடி புரண்டு படுத்தான்…
“உதயா…”
“என்னப்பா?”
‘புரண்டதில் முழித்துகொண்டாரோ…’
“என்னப்பா தூக்கம் வரலியா…?”
“இல்லடா…நீயுந்தான் தூங்கல”
“எடையிலெ முழிச்சமா…கொஞ்ச நேரமாகும்…”
“அது வரை எதாவது பேசிக்கிட்டிருக்கலாமாடா..?”
“பேசுங்கப்பா…கேக்குறேன்…”
“அந்தப் படம் திடீர்னு நினைப்புக்கு வந்துருச்சுடா..”
“படமா எந்தப் படம்பா..?”
“அதாண்டா .அந்த இங்கிலீஷ் படம் கிளிண்ட் ஈஸ்ட்வுட் படம்.
பேரு கூட …ஏதோ பேபின்னு…”
“மில்லியன் டாலர் பேபி… அவனுக்கு நினவுக்கு வந்து விட்டது..
இருந்தும் வராதது போல
“நினைப்புக்கு வரலை..”
“டேய் குத்துச்சண்டைக்காரிக்கு பயிற்சியாளரா நடிச்சிருப்பாருல்ல…”
அப்பா எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்ட உதயனுக்கு நெஞ்சு வலித்தது..
‘வலிக்காதா…அவர் யுதனேசியாவை பத்தி பேச வர்றார்.. யுதனேசியா கருணைக்கொலை…அந்தப் படத்துல அந்த காயம்பட்டு செயலிழந்து படுத்துபடுக்கையாகி விடும் சிஷ்யையை ஊசிபோட்டு கருணைக்கொலை செய்வார் அந்த பயிற்சியாளர்…’
விருட்டென்று எழுந்து விளக்கை எரிய விட்ட உதயன் …
“ஏம்பா ..ஏம்பா ..இப்படியெல்லாம்…?”
“முடியலடா சிரமப்பட்டுக்கிட்டு உங்களையெல்லாம் சிரமப்படுத்திக்கிட்டு…”
“அம்மா கேட்டா துடிச்சிப்போவாங்கப்பா…”
“என்னப்பா இப்படி மனசை தளர விடுறீங்க…?”
“இதெல்லாம் ஒரு பொழப்பாடா…?”
“அப்பா நீங்க இருக்கிற ஒவ்வொரு நிமிசமும்..எங்களுக்கு பெரிய சொத்துப்பா
முடிஞ்ச வரை பார்த்துருவோம்பா..
உங்களுக்கென்னப்பா நான் இருக்கேன் தம்பி இருக்கான் ..
நீங்க பாட்டுக்கு இருப்பீங்களா அத விட்டுட்டு…”
“சரி ..சரி.. சத்தமா பேசாத மற்றவங்கள்லாம் முழிச்சிக்க போறாங்க…”
யாருக்கும் கேக்காதுப்பா..
“இப்படில்லாம் நினைக்காதீங்கப்பா…
அவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு..மீண்டும் கொஞ்சம் தண்ணீரை குடிக்க வைத்தான்..
குடித்து கொஞ்சம் ஆசுவாசமானவரை
“தூங்குங்கப்பா தூங்கப்பாருங்க…”
“ஏண்டா லைட்டை அணைச்சுட்டு கொஞ்ச நேரம் என் கையைப்ப் பிடிச்சுக்கிட்டு பக்கத்தில் இருக்குருறீயா..?”
“பக்கத்திலேயே இருக்கேம்பா தூங்குங்க”
விளக்கை அனைத்து விட்டு அவரருகில் உட்கார்ந்து கையை பிடித்துக் கொண்டான்..
மெல்ல மெல்ல சீராக மூச்சு வர வர ஆரம்பித்தது…
‘இரண்டரை வருசமா கிடந்து கஷ்டப்பட்டதில் சலிச்சுப் பேசறாரு..
எந்த உயிர் அத லேசில் விட்டுத் தரும? துடியா துடிச்சிராது…

……..லக்கியின் அந்தப் பார்வை..
சின்ன கண்களை அகல விரித்து பார்த்த பார்வை…
‘கடைசியில் கை விட முடிவு பண்ணி விட்டுவிட்டாயா’, என்று கேட்டு விட்டு
பதிலுக்கு காத்திராமல் சரி என்பது போல கண்களைமூடி துடித்து அடங்கியது…
இன்னும் அவன் நினைவில் இருக்கிறது…
லக்கி என்று பேர் வைத்து அதிர்ஷ்டம் வாய்க்காமல் 6 மாதத்திலேயே உயிர் விட்ட்து.. இல்லை இல்லை உயிர் நீக்கப்பட்டது…
கருணைக் கொலை…
அவன் வளர்த்து வந்த ஜூலி முதன் முதலாக ஈன்ற 6 குட்டிகளில் ஒன்று…
5ஐ பிறருக்கு வளர்க்க கொடுத்து விட்டவன் லக்கியை மட்டும் கொடுக்க மனம் வராமல் இருந்த இரண்டோடு மூன்றாவதாக வளர்த்து வந்தான்..
ஜூலி ஜானி போதாதென்று இதுவேறயா என்று விமர்சிக்காதவர்கள் இல்லை…
அவனுக்கு ஆசை
அவன் மனைவிக்கு அதை விட…
ஆசை ஆசையாக லக்கி என்று பேரிட்டு வளர்த்தார்கள்..
அதுவும் அவள் கால்களை சுற்றியே வளர்ந்து வந்தது…
அந்த அதீத நெருக்கமே…ஆபத்தாகிப் போனது…
கால்களை சுற்றி திரிந்த அந்த சின்ன குட்டி அவள் கால்களிலேயே மிதி பட்டுப் போனது..
அது எதிர்பாராமல் நடந்த விபத்து…தண்ணீர் குடம் எடுத்து வரும்போது
மிதிபட்டு முன்னங்கால்கள் உடைந்தபோயின…
பதறியெடுத்துக் கொண்டு அருகில் இருந்த மிருக வைத்தியரிடம் எடுத்துச் சென்றான்..
சின்ன சின்ன பாமரேனியன்களுக்கு இப்படி நேர்ந்தால் கிளிப் பொருத்தணுமாம்..
அதற்கு நாமக்கல் போகணுமாம்.. அவனுக்கு தெரிந்திருக்க்கவில்லை..
அவராவது சொல்லியிருக்கலாம்… ஸ்பிளின்ட் வைத்து கட்டுப்போட்டு அனுப்பி விட்டார்..
ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் நாற ஆரம்பித்த்து..
பதறி தூக்கி கொண்டு ஓடினால்…
புரையோடிவிட்டிருந்தது… அப்பொழுது சொன்னார் நாமக்கல் எடுத்துட்டு போயிப் பாருங்க…
அவனுக்கு அவர் மேல வந்த கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை..
வீட்டுக்கு வந்து மனைவியிடம் சொன்னான்…
அழுது தீர்த்தாள்.. அன்றே கிளம்பியிருப்பான்..கரூரிலிருந்து நாமக்கல் பெரிய் தூரமில்லை..முற்பகலில் மட்டுமே நாமக்கல் பல்கலைகழக மருத்துவமனையில் பார்ப்பார்களாம்..வழியிருக்கவில்லை..
“எப்படியாவது காப்பாத்தீருங்க.. கால்கள் போனாலும் பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன்…”,அவள்..
இருவரும் அழுது தீர்த்தார்கள்..
விடிந்தவுடன் வண்டியமர்த்திக்கொண்டு பறந்தான்..
குறிப்பிட்ட நேரத்துக்குள் போய் சேர்ந்தான்..
விசாரித்துக்கொண்டு நாய்களுக்கான் சிகிச்சைப்ப் பிரிவுக்குச்சென்றான்..
அகல அகலமான மேசைகள்..ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டாப்…அங்கங்கே குழிவுகள்..தன்னீர் குழாய்கள்.. பயத்திலும் வேதனையிலும் நாய்கள் வெளியேற்றும் கழிவுகளை அகற்ற…சிகிச்சை கழிவுகளை அகற்ற..
நான்கைந்து நாய்கள்..இரண்டு பெரிய மருத்துவர்கள்,நிறைய பயிற்சி மருத்துவர்கள், உதவியாளர்கள்..
இவன் அருகே சென்றவுடன் ஒரு உதவியாளர் லக்கிக்கு வாய்க்கட்டு மாட்டி மருத்துவர் பார்வைக்கு அதை தயார் படுத்தினார்…
லக்கியின் முறை வந்தவுடன் மருத்துவர்களும் மற்றவர்களும் நெடுநேரம் சோதித்தார்கள்..
நடந்த விவரத்தை விசாரித்தறிந்து கொண்டார்கள்..
அவர்களுக்குள்ளே விவாதித்து முடித்த பின்..
ஒண்ணும் செய்ய முடியாதுங்க…ரொம்ப புரையோடிப் போச்சு..
“சார் …சார்.. “உதயன் கெஞ்சினான்..
“சாரி சார் …இது ரொம்ப் பாவம் இதோட வேதனையை நீட்டிக்காதீங்க.. ஊசியப் போட்டு…அதை நாங்க பண்ணமாட்டோம்..ஊருக்கு கொண்டு போய் அங்க இதுக்குன்னே ஆளுங்க இருப்பாங்க.. அங்க போயி…”
தோற்றுப் போய் நின்றவனையும் லக்கியையும் பரிதாபமாக பார்த்தார்களே தவிர அவர்களால் ஒன்றும் உதவ முடியவில்லை..
லக்கியை அள்ளிக்கொண்ட போது அது மட்டும் அவனை நம்பிக்கையாக நக்கிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது….
அதுக்கப்புறம் இரண்டு நாட்கள் வைத்திருந்து அதன் வேதனையை நிறுத்த
ஆள் பிடித்து இருதயத்தில் அந்த ஊசியைப் போட்டு மூச்சை நிறுத்தினான்…

ஆனால் அது பார்த்த பார்வை..அதற்கு அதில் சம்மதமிருக்கவில்லை என்ற செய்தியை அவன் மண்டையில் அடித்து உரைக்க வைத்திருந்தது…

‘இருக்கிற வரை இருக்க விட்டிருக்கலாம்..விட்டிருக்கணும்.. ஒரு உயிர்…அதை இழக்க எப்போதுமே சம்மதிக்காது…போராடும்..போராடணும்…
ம்ம்…ம்ம்…ம்ம்..
போராடுவோம்…’