மிதந்தெனா?பார்த்தெனா?


என்ன இது இப்படி ஒரு வலி…
இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சியது போல..
சிறுநீர் கழித்து விட்டேனோ?
மலம் கூட தானாக வெளியேறிவிடும் போல..
அய்யோ ஓட்டல் அறை..
திட்டிக் குமித்து விடுவார்களே..
தீடீரென்று எல்லாம் லேசானது..
ஆயிரம் கட்டுக்கள் ஒரே நேரத்தில் சடாரென்று அறுந்துவிட்டது போல..
மிதக்க முடிகிறதே…
சுற்றிலும் துழாவி பார்க்கிறேன்..
சுற்றிலும் சுவர்கள்..
சுழலும் மின்விசிறியருகே நான்…
அறையின் கூரையை ஓட்டி மிதக்கிறேன்..
கீழே…
அட கீழேயும் நான்…!
நானல்ல என் உடல்..
பதறிக் கொண்டிக்கிறது..
‘வா..வா..விட்டு விலகாதே..’,
அது அலறுகிறது..
எனக்கென்ன கிறுக்கா?
அதன் அலறலுக்கு இரங்கி மீண்டும் இறங்க…
விட்டு விடுதலையாகி விட்டேன்..
இனி சிட்டாக பறந்து விட வேண்டும்…
இதோ ஓட்டல் சிப்பந்திகள் அந்த நானின் அலறல் கேட்டு
அறைக் கதவை மோதிக்கொண்டிருக்கிறார்கள்..
உடைத்து உள்ளேறி அள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் கொண்டு செல்லலாம்..
பெரிய ஓட்டல்…பொறுப்பானவர்கள்.. நான் நல்ல வாடிக்கையாளனும் கூட…
பிடித்து இழுத்து மீண்டும் இணைத்து விட முயலலாம்..
ஓடி விட வேண்டும்..
எங்கெ ஓட…
விட்ட இடத்துக்குத் தான்…
இணையை எங்கெ விட்டோமோ.. அங்கெ தானெ போகணும்..?
வேறெங்கெ? ஓயாமாரி சுடுகாட்டுக்குத் தான்..
அங்கெ தானெ எனக்கு பிரியமானவளின் சடலத்துக்கு எரியூட்டிப் பிரிந்தேன்..
அதற்கெதிரே தானெ அடுத்த நாள் காவிரியில் அஸ்தியை கரைத்தேன்..
கோதாவரியின் மடியில் பிறந்தவளை காவிரியின் மடியில் கரைத்தேன்…
அங்கெ போயிரணும்…
சத்திரம் பஸ் ஸ்டாண்டின் அருகே அறையெடுக்கும் பழக்கம் நல்லதாகிப் போனது…
ஓயாமாரி பக்கம்..
இதென்ன நான் என்ன ஆட்டோவா பிடிக்கப் போகிறேன்..?
மிதக்கவல்லவா செய்கிறேன் ..பறந்து விட மாட்டேன்..?
திருச்சியிலிருந்து அவள் போன பிறகு மாற்றல் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு விலகியிருந்தாலும்..அவ்வப்பொழுது ..இங்கு வந்து அறையெடுத்து தங்குவது வழக்கம்..
இருந்த..சுற்றித் திரிந்த இடங்களில் தொலைத்ததை தேடி திரிவது…
கடைசியில் ஆவியை முடித்துக் கொள்ள ஆன மட்டும் குடிப்பது…
இது வரை அதிர்ஷடம் அடிக்கவில்லை…
இன்று அடித்துவிட்டது ஆவி பிரிய ஆரம்பித்து விட்டது…
அவர்கள் இழுத்து பிடிக்குமுன்னே
பறந்து விட வேண்டும்…
பானு…பானு…
அண்ணா சிலையை தாண்டி விட்டேன்…
2.30 மணி இரவு…சாலையெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தது….
மலைக்கோட்டை பிரிவிற்கருகே அந்த டீக்கடை மட்டும் திறந்திருந்தது
யாரோ 2,3 பேர் அந்த நேரத்திலும் டீயடிச்சுக்கிட்டு இருந்தாங்ய…
கடந்து மிதந்த என்னை கவனிக்கவில்லை..
நான் கண்களுக்கு தெரிய மாட்டேனோ…?
அதோ காவிரி பாலம்..
அங்கு எத்தனை மாலைகளில் காற்று வாங்கி இன்பமாக கழித்திருக்கிறோம்..
பாலத்திற்கு முன்னாலேயே ஓயாமாரிக்கு சாலை பிரியும்…
ஒரு ரெயில்வே கிராஸிங்கு கூட
அட பூட்டியிருக்கே!
நமக்கென்ன…?
வந்து விட்டேன் வாசலுக்கு..
உள்ளே ஒரு சிதை எரிந்து கொண்டிருக்கிறது..
அது தான் ஓயாமாரியாச்சே……
உள்ளே நுழைகிறேன்…
யாருமில்லை…
அவர்கள் தான் டீயடிச்சிக்கிட்டு இருந்தாங்யளோ..?
சுற்றி சுற்றி வந்தேன்…
ஆளுகளுமில்லை ஆவிகளுமில்லை..
அவளுமில்லை..
அவளுக்கென்ன ராசாத்தி…
மேலே சொர்க்கத்திலிருப்பாள்..
இனி என்ன செயவது…?
படித்துறைக்கு சென்றாலென்ன..?
படித்துறைக்கும் வந்தாச்சு….
இந்த படித்துறையையும் ஓயாமாரியையும் அவர்கள் பல முறை
முன்னிரவு நேரங்களில் அவன் வண்டியில் கடந்திருக்கிறார்கள்..
அவள் ஒரு முறை சொல்லியிருக்கிறாள்..
‘என்னையெ இங்கெயே…’
‘ஏய்..என்ன இது…?’
‘எங்க ஊரு வேண்டாம் மாமா..
இங்கெயே..’
நிஜமாகி தொலைந்தது…
என்னையும் இங்கெயே…எங்கெ…ஆளைக் கூப்பிட்டு ஊருக்குல்ல
ஏத்திவிட்டுருவாங்ய..
தொலையட்டும்..
என்ன இது நம்மளை தவிர ஒரு ஆவியையும் காணோம்…
எதிரே ராஜகோபுரம்…பின்புறம்
மலைக்கோட்டை..தாயுமான சாமி..
அதெல்லாம் அண்டாதோ..
அப்ப நம்ம கதி..
இதென்ன அபூர்வமான ஒரு மணம்..?
அட எல்லாம் ஜில்லிட்டுக்கிட்டு…?
ஆகா பானு..பானு..
அதென்ன வெள்ளையா? பொன்னிறமா? இரண்டும் கலந்த கலவையா? தக தகன்னு..
விரிந்த கூந்தல்..காதோரத்தில் சொர்க்கலோகத்து அதிசய பூவா…?
என்ன அழகு..சூரியகாந்தி மாதிரி ஆனா மென்சிவப்பு நிறத்தில்…
என்னை விட்டு பிரிந்த பிறகு,அவள் இருந்த காலத்தில் சொல்லத்தெரியாமல் மனசில் இருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்து விட இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று தவித்தவனா நான்..?
இதென்ன பேச்சே வர மாட்டேங்குது…?
‘என்ன மாமா பேச்சு ராலேதா?
பர்வாலேது நாக்கு எல்லாம் தெலுசு…நீ மனசு நாக்கு தெலுசு மாமா’
‘எல்லாந் தெரியுமா பானு?’
‘முக்கால் வாசி தெரியும்…பாக்கி மேலெ போனவுடன் புரிஞ்சு போச்சு..’
‘மேலெ போனா எல்லாம் புரிஞ்சு போகுமா..?’
‘எல்லாம் புரிஞ்சு போகும் மாமா…’
என்ன இது கண்டு சேர்ந்து விட துடித்த எனக்கு வாரியணைத்து கொள்ள ஏன் தைரியம் வரவில்லை….?
அவள் என்னிலும் ஆயிரம் மடங்கு தூயவளாக தெரிகிறாளே…
‘என்னை விட்டு நீ எப்படி…?’
‘அய்யோ மாமா… மேலே பெத்த பெத்த சாமி உண்ணாரு..
எல்லாம் அவங்க இஷ்டப்படி தான்…நாமெல்லாம் அவங்க கையிலெ காயிங்க..
மேல வந்தா நீக்கும் தெலுசு போத்ததி…’
‘கோபம் வராது..துக்கம் வராது…சந்தோஷம் லேது…அது ஒரு அலாதி ஆனந்தம்…’
‘அப்ப சரி நானும் வாரேன்…’,எட்டி அவள் கையை பிடிக்க எழுந்தேன்…
சுருங்கி விலகினாள்..
‘வேண்டாம் மாமா..நீக்கு இன்னும் நேரம் வரலை…
அதை உனக்கு புரிய வைக்க தான் என்னை பெரியவங்க அனுப்பி வச்சாங்க..’
‘ஏன் விலகுறெ…?’
‘அய்யோ நான் என்னை தொட்டுட்டா அப்புறம் நீ ஒன் உடம்புக்கு திரும்ப முடியாது..
வேண்டாம் மாமா உன்னால ஆக வேண்டியது நிறைய இருக்கு ..நீ திரும்ப போ…’
‘என்ன வேலை பாக்கி இருக்கு பானு..? எல்லாம் முடிச்சுட்டேன்.. நம்ம பொன்னு சத்யா படிச்சு முடிச்சு வேலைக்கு போயிருச்சு..மாப்பிள்ளை கூட தேடிக்கிச்சு.. கலியாணம் கூட நடந்திருக்கும்… ஒரெ இடத்திலெ இருக்க மாற்றலுக்காக காத்திருக்கா..நானெல்லாம் இனி …’’
எல்லாந் தெலுசு மாமா… இரண்டு நாய்க்குட்டிங்க இப்ப நாலாயிடுச்சு.. நான் விட்டுட்டுப் போன பூந்தொட்டியெல்லாம் மறக்காமெ ஊருக்கு கொண்டு போயி காப்பாத்தியிருக்கெ ..என் சின்ன சின்ன ஆசையை கூட நீ மறக்காமெ முடிச்சிருக்கெ..’
‘பெறெகென்ன நானும் ஒன் கூட வாரேன்..’
‘அய்யோ அலாகெ செப்ப ஒத்து… நீக்கு இன்னும் சானெ பணி உந்தி…
அம்மா..அப்பா எல்லாம் பார்த்துக்கணும்.. சாமிங்க்ளுக்கு உன் வழியா
சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு… இரு மாமா…’
‘மாட்டேன்… வருவேன்..’
ஆவேசத்துடன் அவளை நெருங்கினேன்…
முடியவில்லை ..
பலர் சேர்ந்து பின்னுக்கு இழுப்பது போல…
அவள் கண்களில் பரிதாபம் தென்பட்டது…
‘நேரம் வரும் மாமா.. நானே வந்து கூட்டிக்கொண்டு போறேன்…’
இழுவை கூடியது…
பானு மறையத் தொடங்கினாள்..
அப்படியே பல நூறு இரும்புக் கரங்கள் என்னை அலாக்காக தூக்கி கொண்டு பறந்தன..
எங்கெ எங்கெ…
கீழே திருச்சி தில்லை நகர் தெரிந்தது..
அதோ அதே தனியார் மருத்துவமனை..
அதன் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து தான் பானுவின் உயிர் பிரிந்தது..
அங்கு தான்
ஒரு அறையில் கீழே ஒரு உடலைச் சுற்றி
டாகடர்களும்…நர்சுகளும்…
ஏகப்பட்ட நவீன உபகரணங்கள்..
தீயை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு மந்த்ரவாதிகள் மந்திரச்சடங்குகளை செய்வது போல..
அட நான் தான்..
என் உயிரை இழுத்துக் கட்டத் தான்…
தப்பிக்க வழியில்லை…
அது வரை மிதந்த நான் உடலுக்குள் புகுகிறேன்..
மீண்டும் வலி…ஆனால் மெல்ல மெல்ல குறைகிறது..
ஒரு கட்டத்தில் எல்லாம் சீரானது மாதிரி…
“அப்பாடா ஸ்டெபிலைஸாயிடுச்சு”,சீனியர் டாகடர் சொல்லி பெருமூச்சு விட்டார்..
ஆப்சர்வேஷன்ல வச்சுருங்க… 48மணி நேரம்..
சரியியாயிடும்னு நம்பறேன்…
மெல்ல எல்லாரும் விலகுகிறார்கள்..
ஒரு நர்சு மட்டும்…
சே ஓட்டல்காரங்ய கிட்டெ இருந்து ஆரம்பிக்கணும்..
தொந்தரவாகிப்போனதுக்கு ம்ன்னிப்புக் கேட்டு ஆரம்பிக்கிறதா?
இல்ல உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த்துக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறதா?
இந்த மிதந்து போன கதை… பானுவை பார்த்த கதையெல்லாம் சொல்ல்லாமா? நம்புவாங்களா? நான் மிதந்தெனா…பார்தெனா..இல்லை ஜீவ மரணப் போராட்ட பிரமையா.. பி..ர..மை..யா.. தூ..க்..க.. ம..ரு..ந்…

குளீருட்டப்பட்ட அவசர சிகிச்சை அறையில் … ஒரு கணம்… ஒரே ஒருகணம் அமானுஷ்யமாக மேலும் ஜில்லிட்டு..அபூர்வ மணம் பரவி… விலகியதை.. உணர்ந்து அதிர்ந்த அந்த நர்சு எழுந்து… ஒரு முறை அறையை சுற்றி வந்தாள்..
எல்லாம் சீராக இருக்கவே சந்தேகத்தை தோள்களை குலுக்கி தவிர்த்து தன் இருப்பிடத்திற்கு சென்று அமைதியானாள்..

Advertisements

ஒவ்வொரு மணித்துளியும்…


“கடவுளே இல்லையா?”
உயிரை குடிக்கும் வலியில்
அப்பா.

“கடவுள் இருக்கான்
கைவிட மாட்டான்
வலி குறையும்”
நம்பிக்கையுடன் அம்மா

“முன்னெச்சரிக்கை கொடுத்துருக்கான்
உழைக்க சொல்லுறான்”
காப்பாற்ற எப்பாடும் பட
முனைகிறான் தம்பி..

நால்வராக இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
பரிசென்று
வாழ்கிறேன் நான்….

நல்லா விசாரிக்கிறாங்ய!


“முடியெல்லாம் கொட்டியிருக்குமே”
“வெள்ளையணுக்கள் கொறைஞ்சிருக்குமே”
“பல்லெல்லாம் கருத்திருக்குமே”
“வலி உசுரு போகுமே”
நலன் விசாரிக்கிறார்களாம்..
நல விரும்பிகளாம்…
உற்றாராம் உறவினராம்..
அவர்கள் கேட்டு வைத்திருந்த
செய்திகளை உறுதி செய்ய
அப்பா என்ன சோதனை எலியா?
“நல்லா இருக்காரா?”
கேட்டதும்..
“நான் இருக்கேன்”
கையை பற்றி
சொல்லாமல் சொன்னதும்..
மிகச் சிலரே!

விபரீத பாம்பு…


பாதுகாப்பு தேடி நெடுநாள்
அலைந்திருக்குமோ?
அப்பாவின் நெஞ்சுக்கூட்டை
கோட்டையாக்கி கொண்டது
எப்படியோ உள்புகுந்து..
காற்று வசதி தேவையோ?
நுரையீரலில் புற்றை கட்டிக்கொண்டது…

உண்ட வீட்டுக்கு இரண்டகம்
செய்யாதவர் தானுண்டோ?
மலைப்பாம்பாக நீண்டு
முதுகுத் தண்டை வளைத்து
இடுப்பெழும்பை கவ்விக் கொண்டது..
நாகமாகவும் கொத்துகிறது!

விபரீத பாமபை கொல்ல
வினோத விஷம் கூட
கொடுத்து பார்க்கிறோம்..
பாம்பு தளர்ந்த பாடில்லை
விடாமல் நெருக்கி கொத்துகிறது!

நிலைகுலைகிறார் அவர்..
குலைநடுங்குகிறது எங்களுக்கு..
இரக்கமற்ற கழுகுகள் வேறு
சுற்றி வட்டமிடுகின்றன…

எல்லாம் புதுசு…


மதுரை மாநகரின் சாலையெல்லாம் வெறிச்சோடிக்கிடந்தது ஆதியின் மனசைப் போல.
ஏனோ போக்குவரத்து சுத்தமா இல்லை…
‘பத்தரை மணியாச்சு.. திருவிழா மாதிரி இருக்க வேணாம், தேர்தல் நாள்..
144 தடை உத்தரவு காரணமோ.. தேர்தல் நாளன்று இந்த தடை உத்தரவு புதுசு..
புதுசு.. அப்பாவுக்கும் இந்த தேர்தல் புதுசு..
அவரோட 65 வயசில் அவர் வாக்களிக்காமல் விடப்போகும் மொத தேர்தல்..
மொத ஆளா போட்டுருவாரு நம்மளையும் கெளப்பி போட வச்சுருவாரு..’
ஆமாம் ஆதியின் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்..
குறுக்கு வலிக்குதுன்னவரை கூட்டிக்கிட்டு தான் மருத்துவமனைக்கு போனான்..அது இப்படியாகும்னு அவன் நினைச்சே பார்க்கவில்லை..
‘குத்துவாளா நெஞ்சுல குத்துதே..’
வலி குறையாமல் கூடிக்கொண்டே போக MRI scan எடுத்துப் பார்க்கச் சொன்னார்கள்.. அதில் ஏதோ தட்டுப்பட மருந்தேத்தி மறுபடியும் MRI scan..
நுரையீரல்ல கட்டி இருக்குன்னுட்டாங்க அது முதுகெல்லாம் பரவி இடுப்பை பிடிச்சு எழும்பை அரிச்சு…
carcinoma of the lung ன்னுட்டாங்க..அதுனால skeletal metastasis..
எல்லாம் புதுசு ….அச்சுறுத்தின புதுசு..
வகையையும் தன்மையையும் தெரிஞ்சுக்க பயாப்சி பண்ணனும்னு சொல்லிட்டாங்க..
முதல் நாள் தான் பயாப்சி முடிந்திருந்தது..
CT guided needle biopsy of the right iliac bone.
வலியெடுக்குதுங்கிற வலது பக்க இடுப்பெலும்பிலிருந்து கொஞ்சத்தை எடுத்திருந்தாங்க..இனி அது சோதனைக் கூடத்துக்குப் போயி.. என்னன்னு தெளிவு வந்தால் தான் அதன்படி அதற்கு சிகிச்சை ஆரம்பிக்க முடியுமாம்…
5,6 நாளாகும்..
இந்த பயாப்சி கூட இரண்டாவது…
‘மொதல்ல நுரையீரல் கட்டியிலிருந்து தான் கொஞ்சத்தை எடுத்தாங்ய.. CT guided needle lung biopsy..
ரத்த நாளங்களுக்கு பயந்து பயந்து விலகி எடுத்த கொஞ்சூண்டு பத்தலைன்னுட்டாங்ய’
Pathologist அந்த கொஞ்சூண்டு துணுக்கு பத்தலைன்னு கையை விரிக்க…
skeletal metastasisஆன வலது பக்க இடுப்பெலும்பிலிருந்து இப்ப கொஞ்சத்தை எடுத்து அனுப்பியிருக்காங்க..
இதெல்லாம் ஆதியையும் அவன் தம்பியையும் பயமுறுத்திய புதுசு.. அப்பாவை புரட்டி பிதுக்கியெடுத்த புதுசு..
இதற்காக மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்தது புதுசு..
அதுலயும் அவன் வீடு முதல் மாடியில்.
ஏத்தி இறக்கப் பட்ட பாடு புதுசு..
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முழு விவரத்தையும் சொல்லாமல் மறைத்து மறைத்து செயல் பட்டது எல்லாவற்றையும் விட புதுசு..

இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் சென்று வலது பக்கம் திரும்பினால் அந்த பெரிய தனியார் மருத்துமனை..
நுழைந்து நிறுத்த இடம் தேடி நிறுத்தி இறங்கினான்.
இன்று அதிசயமாக நிறுத்தத்திலேயே இடம் கிடைத்தது..
வழக்கமாக கிடைக்காமல் வெளியே சாலையோரம் தான்..
முகப்பை கடந்து இடது பக்கம் திரும்பினால் அவசர சிகிச்சை பிரிவு. அதைத் தாண்டினால் A-Block அதில் இரண்டாவது மாடியில் அறை எண் 223…
இடது பக்கம் திரும்பி அவசர சிகிச்சை பிரிவை நெருங்கியிருப்பான்…
அந்த அலறி அழும் ஓலி..
‘அய்யோ அடிவயித்திலிருந்துல்ல அலறுறாங்க..’

யாரோ ஒரு நடுத்தர வயது அம்மா அலறியழுது உருண்டுக்கிட்டிருந்தாங்க..
ஒரு பெரியவர் அந்தம்மாவை தாங்கிப் பிடிக்க தடுமாறிக்கொண்டிருந்தார்..
அவருமே கலங்கித் தான் போயிருந்தார்,,
ஒரு இளம்பெண் கேவி கேவி அழுது கொண்டிருந்தாள்..
அந்த இளம்பெண்ணருகே இன்னொரு நடுத்தர வயது அம்மா… அந்த இளம் பெண்ணின் அம்மாவோ..
கண்களில் கண்ணீர் கொட்ட கைகூப்ப்பி எந்தெந்த தெயவங்களையோ உதவிக்கு கூப்பிட்டுக் கொண்டிருந்தார்..
குத்தி கொன்றிருந்த குத்துவாள் இன்னும் கொஞ்சம் இறங்கியது..
இருந்தும் சோர்ந்த மனசையும் தளர்ந்த கால்களையும் இழுத்துக் கொண்டு நடந்து இடது பக்கம A-Blockகுள்..திரும்பி லிஃப்ட்டை அடைந்தான்..
பொத்தானை அமுக்கி விட்டு காத்திருந்தான்..
வந்து நின்று திறந்து கொண்டது .
ஏறியவனை, “வாங்க சார்… பகலுக்கு நீங்களா?”
அடிக்கடி வந்து போனதில் ஆபரேட்டர் அறிமுகம்.. இரசிக்கவில்லை..
“ ம்ம்ம்”
“என்ன சார் இன்னும் ஓட்டு போடலையா?”
இடது கையை பார்த்திருக்கார்..
“இனிமே தான் சாயங்காலமா. நீங்க?”
“எனக்கு ஒரு மணிக்கு தான் அனுமதி ..பாட்ச் பாட்சா பிரிச்சு மாத்தி விடுறாங்க…”
அதற்குள் இரண்டாவது தளம்..
இறங்கிக் கொண்டான்..
’இதே தளத்தில் எத்தனை முறை அறை மாறியாச்சு..’
அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.. எதிர்பார்த்திருந்த மதி எழுந்து வந்து ஆதியின் கைகளை பிடித்துக் கொண்டான்..இளையவன்.. 24 வயதே ஆனவன்..இதெல்லாம் புதுசு..பாவம் தவித்துப்போயிருந்தான்..அண்ணன் ஆதியிடமிருந்தே மனதிற்கு ஆறுதலையும் வலுவையும் பெற்றான்..
“என்னடா ஓட்டுப் போட்டியா..,?”,அவன் வந்ததைக் கண்டு கொண்ட அவன் அப்பா..
“இல்லப்பா..உங்களை இங்க வச்சுக்கிட்டு..”
“அம்மா?”, அவனை இடைமறித்து கேட்டார்.
“எல்லாம் சாயங்காலமா போட்டுக்கலாம்பா..
உங்களை டிஸ்சார்ஜ பண்ணி கூட்டிக்கிட்டு போனப்புறம்..”
அவர் மேலும் கேட்டு சங்கடப்படுத்தாதிருக்க
மதியை நோக்கி திரும்பியவன் ,
“என்னடா சொன்னாங்க..?”
“டாக்டர் வந்து பார்த்தப்புறந்தான்னுட்டாங்க..”
“எப்ப வருவாரு..?”
“11.30 ,12 மணிக்கு..”
ஆதியின் கண் அணிச்சையாக எதுரே சுவரில் இருந்த கடிகாரத்தில் 11.05 ஆனதை குறித்து கொண்டது.
“அப்ப எல்லாம் முடிச்சு வீட்டுக்கு கிளம்ப 2.00,2.30 ஆகிடும் இல்ல..”
“ம்ம்..”
ரிமோட்டை தட்டி சானல்களை மாற்றி மாற்றி வாக்குப் பதிவு விவரங்களை அறியும் முயற்சியில் அப்பா ஈட்டுபட்டிருக்க..
மெல்ல தம்பியை அழைத்து கொண்டு அறைக்கு வெளியே சென்றான்..
“ராத்திரி நல்லா தூங்குனாரா மதி..?”
“நல்லா தூங்கிட்டாரு.. வலிக்கு மாத்திரையும் கூடுதலா தூக்க மாத்திரையும் தர்றாங்கள்ல..
காலைல உடம்பை துடைச்சு விட்டுட்டாங்க..
3 இட்டிலி சாப்பிட்டாரு.. அரை கப் காபி..
காலை வேளை மாத்திரையும் ஊசியும் ஆச்சு…”
“வலியில்லாம இருந்தா சரிதாண்டா. எந்த வகைன்னு தெரிஞ்சிட்டா அதன்படி சிகிச்சை ஆரம்பிச்சுருவாங்க அப்ப வலி குறைஞ்சிருமாம்..அது வரைக்கும் இந்த வலிமாத்திரை தாண்டா..”
அப்ப அது தானாடா ஆதி.. அப்பாவுக்கு?
“அதான் அந்த radiologist சொன்னதெ கேட்டேயில்ல.. இடுப்பெழும்பை அரிச்சிருச்சுன்னாரே.. வகையும் தன்மையும் தெரிஞ்சுக்கத் தாண்டா இதெல்லாம்…
கண்கலங்கிய மதியின் தோளோடு சேர்த்தணைத்து,
“பயப்படாதெடா ..மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கு.. ஒவ்வொரு கட்டமா தாண்டுவோம்..”
அண்ணன் ஆதியை மதி அதிசயமாக பார்த்தான்..
29 வயதான ஆதி,-இன்னும் திரும்ணம் கூட ஆகியிருக்கவில்லை-இந்த சில நாட்களில் மிக வேகமாக முதிர்ச்சி அடைந்து கொண்டிருந்த்து அவனை வியக்க வைத்தது.. ஆறுதலாகவும் இருந்தது..
“ஆதி மாமாகிட்ட பேசிட்டியா..
பேசிட்டேன்.வர்றேன்னிருக்கார்,டேய் அவருக்கும். வெறும் கட்டின்னு மட்டுந்தான் தெரியும்..உளறி வச்சுராதே..”
வீடு முதல் மாடியில்… ஏத்தி படுக்கையறைக்கு கொண்டு செல்ல ஆளு வேணும்..அந்தக் கவலை மதிக்கு..
தாங்கித் தூக்க தாய்மாமனை விட வேறு யார் உதவ முடியும்..
“என்னடா வெளியிலே நிக்கறீங்க…”
“மாமா!”
“வாங்க வாங்க அப்பா உங்களைத் தான் தேடிக்கிட்டிருந்தார்..”
“அப்படியா?”
அவசரமாக உள்ளே நுழைந்தார்…
“பிரியமானவருடா அவர் கிட்ட கூட மறைக்கி…”
“டேய் டாகடர்.!”
டாகடர் பிரம்மா உதவியாளர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்..
அதை முன்னிட்டு அவர்கள் அறைக்குள்ளே நுழைந்தார்கள்..
உள்ளே நுழைந்தவர்..
“அய்யா எப்படி இருக்கீங்க..?”
“எவ்வளவோ..பரவாயில்லை.
ஆனா இந்த வலி மட்டும் …”
“வலி மாத்திரைய மாத்தியிருக்கேன்.. முணு வேளையா கூட்டியிருக்கேன்..”
“ரொம்ப நன்றிங்க..”
கண்பார்வையாலேயே அவர்களை பின்வருமாறு சமிக்ஞை செய்து விட்டு வெளியேறினார்..
“Post biopsy எதுவும் பிரச்சனை இல்ல.. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிக்கிட்டு போயிருங்க.. ரிப்போர்ட் வந்தவுடன் அத வாங்கிக்கிட்டு என்ன நீங்க மட்டும் பாருங்க.. என்ன செய்யணும்னு சொல்றேன்.. specific treatment ஆரம்பிச்சா வலி குறைய ஆரம்பிச்சுரும்…பயப்படாதீங்க போயிட்டு வாங்க..”
“சரி சார்..”
அவர் அடுத்த அறைக்கு செல்ல குழுவோடு நகர்ந்தார்..
ஒரு வழியாக பணத்தை செலுத்தி ,டிஸ்சார்ஜ் ரெபொர்ட்டை வாங்கி,அடுத்து வரு நாட்களுக்கு மருந்துகளை வாங்கி ஆம்புலன்ஸில் ஏற்ற கீழே கொண்டு வந்த போது மணி 2.50..
“ஆதி நீ வண்டியை எடுத்துக்கிட்டு முன்னால போ..நாங்க அத்தானை ஏத்திக்கிட்டு வந்துர்றோம்..”
“சரி மாமா..”
நகர்ந்து முன்னேறியவன் கண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அந்த அம்மாவைத் தேடின..
அந்த அம்மா அங்கேயே அப்படியே…
‘இவ்வளவு நேரமா அப்படியே கைகூப்பி…இன்னும் எவ்வளவு நேரத்துக்கோ…? இது தான் தவமா…?’
மனசு வலித்தது கால் சலித்தது…
‘என்ன செய்து விட முடியும்..?’
வண்டியை எடுக்க தன்னைத் தானே நிர்ப்பந்தித்து தள்ளிக்கொண்டு சென்றான்..
ஆயாசமாக இருந்தும் ஆக வேண்டியதை செய்ய வண்டியை எடுத்தான்..
திட்டமிட்டபடி ஆம்புலன்ஸ் வருமுன வீட்டை அடைந்து விட்டான்..இறக்கி ஏற்றுதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு காத்திருந்தான்..
ஆம்புலன்ஸும் வந்தது..
கஷ்டப்பாடு பட்டு.. கைமாத்தி மாத்தி மேலே ஏற்றி படுக்கையில் அப்பாவை கிடத்தினார்கள்..
அதே வீதியில் பத்து பதினைஞ்சு ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி கஷ்டப்பட வேண்டியிருந்திருக்காது ..ஊரே கூடியிருக்கும்.. மேலே பாதுகாப்பாக கொண்டு செல்ல ஊரே பொறுப்பேற்று நடத்தி முடித்திருக்கும்..
இப்போதெல்லாம் கதவுகள் திறப்பதில்லை.. அடைத்துகொள்ளும்.. சன்னல்கள் மட்டும் திறக்கின்றன..அந்த சன்னலகளில் கண்களாக அப்பியிருக்கும்..

மதி ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அவர் உதவியாளருக்கும் குடிக்க தண்ணி கொடுத்து தக்க மரியாதை செய்தனுப்ப முனைந்தான்.
ஆதியும் மாமாவும் அப்பாவை வசதியாக கிடத்தி ஆசுவாசப்படுத்தினார்கள்..
அது வரை சங்கடத்துடன் விலகியிருந்த அம்மா,
அப்பாவின அருகே ஓடி வந்து..
“என்னங்க..என்னங்க..”
அதற்கு மேல் பேச்சு வரவில்லை பாவம்..
“..அதான் வந்துட்டேன்ல் ..அழாதே கழுத…”
அதில் ஆறுதலடைந்த அம்மா,
“..ஏங்க சாபிட எதாவது?”
“அதெல்லாம் ஆஸ்பத்திரியிலே முடிச்சாச்சு.. மொதல்ல மூணு பேரும் போயி ஓட்டைப் போடுங்க…”
“உங்களை விட்டுட்டு…”
“அதான் மாமா இருக்கான்லடா..அவந்தான் உஷாரா அவங்கட்சிக்கு காலையிலே போட்டுட்டான்ல…அவன் என்னைய பார்த்துப்பான் நீங்க போய் ஓட்டைப் போடுங்கடா..”
“சரிங்க “,என்று அம்மா தயாராக ஆதிக்கு வேறு வழியிருக்கவில்லை..
“பூத்ஸ்லிப்?”
“இந்தா தயாரா வச்சுருக்கேன்..”,அம்மா .பூத்ஸ்லிப்பையும் அடையாள அட்டையு எடுத்து நீட்டினார்கள்..
அப்பாவின் தயாரிப்பு..தவிர அம்மாவுக்கும் அரசியலில் ஆர்வம்.
நேரத்தைப் பார்த்தான் ஆதி .மணி 4.50 தான் ஆகியிருந்தது..
அம்மாவையும் மதியையும் அழைத்துக் கொண்டு வக்களிக்க கிளம்பினான்..
வாக்குச்சாவடி முக்கால் கிமீரில் ஒரு பள்ளியி.ல்
கூட்டமிருக்கவில்லை.. விரைவில் வாக்களித்து விட்டு திரும்பினார்கள்..
“என்னடா ஓட்டு போட்டுட்டீங்களா?”
விரலை உய்ர்த்தி அம்மா சிரிக்க..
“அப்பாடா இப்பத்தாண்டா நிம்மதி…ஆனா ஒரு வருத்தம்டா… என் ஒரு ஓட்டு நம்ம கட்சிக்கு மிஸ்ஸாயிடுச்சு..”
“அடப் போங்கத்தான்.. உங்க கட்சி ஒரு லட்சம் ஓட்டுல தோக்கப் போகுது..உங்க ஒரு ஓட்டு..”
“போடா அயோக்கிய பயலே ஓங்கட்சி தான் 2லட்சம் ஓட்டுல தோக்கும்..”
“ஆமா வேணா பாரு அத்தான் சொல்லுற மாதிரி ஓங்கட்சி டெப்பாசிட் கூட வாங்காது ..”
“போக்கா நீ அவருக்கு ஏத்துக்கிட்டுத் தான் பேசுவ..”
இதை பார்த்து மானசு தாங்காமல் அங்கிருந்து விலகி முன்னறைக்குச் சென்றார்கள் ஆதியும் மதியும்..
இளையவன் உடைந்து அழுதான்..
அவனை நெஞ்சோடு அணைத்து கொண்ட ஆதிக்கு
மனசு நடுங்கியது..
‘முழு விவரம் தெரிஞ்சா..
அம்மா உருண்டுருவாங்க…. மாமா அம்மாவை தாங்கிப் பிடிக்க தடும்மாறிப்போவாரு..
மதி அந்த இளம்பெண்ணை ப்போல இப்பவே அழுகிறான்..என்ன செய்ய? அந்த நடுத்தர வயசு அம்மாவைப் போல கைகூப்பி ஊருல இருக்கிற எல்லா தெயவங்களையும் வேண்டுறதா..?அதைக்கூட மறைச்சு மனசுக்குள்ள மட்டுந்தானெ…’
எல்லாம் புதுசு…இன்னும் என்னவெல்லாம் புதுசு அவனுக்கு காத்திருக்கிறதோ?