இன்னொரு காய் நான்..


தேவனும் சாத்தானும்
ஆடும் ஆட்டத்தில்
இன்னொரு காய் நான்…
தேவனின் படைப்பை
அசிங்கப்படுத்தி அவனை
அசிங்கப்படுத்த வேண்டும் சாத்தானுக்கு
படைத்து உலவ விட்டு விடுகின்றான் தேவன்…
சர்வ வல்லமை படைத்தவனுக்கு
சற்றே தான் குறைந்த
வலுபடைத்தவன் சாத்தான்…
அவனுக்கில்லை தற்காப்பு ஆட்டம்..
அவன் ஆட்டம் ஆக்ரோஷ தாக்குதல் ஆட்டம்..
உள்ளிருந்து அவ்வப்போது ஒலிப்பதோடு
விலகி நின்று கொள்கிறான் தேவன்..
சகல வித அஸ்திர சஸ்திரங்களையும்
பிரயோகிக்கிறான் சாத்தான்..
அவனுக்கென்ன
அவன் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை..
விலகி நின்று ஒலிப்பவனின் குரல்
சாத்தானின் ஆர்ப்பாட்ட ஆரவாரத்தில்
அமுங்கியே போகிறது…
அமிர்தமென்று ஏமாந்து
அமிழ்ந்து போகிறேன்
ஆபாச விஷத்தில்..
நோக்கம் நிறைவேறிய
சந்தோஷத்தில் அடுத்த காயை நகர்த்த
விலகிச் செல்கிறான் சாத்தான்..

விக்கித்து நிற்கும் என்னை
தேவனும் வாரியெடுத்து கொள்வதில்லை..
குடித்த விஷத்தை கக்கி விட்டு
கறை போக கழுவிவிட்டு வாவென்று
அவனும் விலகிக்கொள்கிறான்…
அடுத்த காயின் உள்ளிருந்து அவ்வப்போது ஓலிக்க…
அவர்கள் ஆடும் தீராத ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட இன்னொரு காய் நான்!

Advertisements

வெற்றிடங்கள்..


பிரிகிறார்கள் பிரியமானவர்கள்.
பிறக்கின்றன வெற்றிடங்கள்
புறவெளியிலும் அகவெளியிலும்.
நிரம்பிவிடுகின்றன வெற்றிடங்கள் ..
நிரப்பப்படுகின்றன தட்டுத் தடுமாறி ..
புறவெளியில் மெல்ல மெல்ல.

அகவெளியில்?
ஏனோ நிரம்புவதில்லை
என்ன முயன்றும்.

முட்டுகின்றன வீங்கி ..
அகண்ட வெளியில்
ஆன்மா கரையும் வரை
முட்டுமோ வீங்கி ?

முட்டை போச்சே!


சர்க்கரை வியாதி எட்டிப்பிடித்ததில் இழந்தது நிறைய.
அதில் பெரிய கொடுமை மிகவும் பிடித்த முட்டை மறுக்கப்பட்ட உணவுகளின்
பட்டியலில் சேர்ந்துகொண்டது.
‘வேண்டுமானால் வெள்ளைக்கருவை மட்டும்…’,
யாருக்கு வேண்டும் அந்த அரைகுறை முட்டை?
முட்டையை அவித்தோ, பொரிச்சோ, அடை போட்டோ எப்படிக்கொடுத்தாலும்
அள்ளி வாயில் அடைத்துக் கொள்வேன்..
புளிக்குழம்பு,புளிச்சாறு வைக்கும்போதெல்லாம் அவற்றை உட்கொள்ள லஞ்சமாக எங்கம்மா கொடுத்து பழக்கியது அவித்த முட்டையை..
அவர்கள் அதற்கு பருப்புத் துவையலையும் கூட்டையும் தொட்டுக்கொள்ளும்போது எனக்கு மட்டும் முட்டையை அவித்து கொடுத்துவிடுவார்கள்..
பின்னாளில் அந்தக் குழம்புகள் பிடித்துப்போனது வேறு கதை..
அவித்த முட்டையை கருவாட்டுகுழம்புக்கு தொடுகறியாக கடித்துப் பாருங்கள்… பூலோகத்திலேயே சொர்க்கம் தெரியும்..
நாலைந்து முட்டையை அவித்து ஓட்டை நீக்கி கழுவி வைத்திருப்பார்கள்..
போகிற போக்கில் ஓன்றை எடுத்து ஒரே முழுங்காக முழுங்கிக் கொண்டு முதுகில் விழுந்த அறையைக் கூட பொருட்படுத்தாமல் கும்மாளத்தோடு
ஓடிய நாட்களுமுண்டு…
அவித்த முட்டையை முனையில் லேசாக கீறி அதன் மீது புளிக்குழம்பை ஊற்றி தின்று பாருங்கள் அது ஒரு ருசி..
அவித்த முட்டையை நான்காக பிளந்து உப்பும் மிளகும் தூவித் தருவார்கள்.. சாக்கனாங்க்கடைகளில்..அது ஒரு ருசி..
வீட்டில் அம்மா கைவண்ணத்தில் தயாரித்து தரும் முட்டை மசாலா(தேங்காய் சேர்த்தது)..அது சுவையின் உச்சம்.. அந்த மசாலாவை வைத்தே சோற்றைப் பிசைந்து தின்று விடுவேன்…
பல நேரங்களில் என்னை சாம்பாரை ஏற்றுக்கொள்ள வைக்க எனக்கு அம்மா அருளியது இந்த முட்டை மசாலாவைத் தான்…
நான் படித்த கல்லூரி விடுதியில் வியாழனன்று இரவு சாப்பாட்டுக்கு இரண்டு அவித்த முட்டை தருவார்கள்.. வெளியே சென்றுவிட்டு விடுதியில் உணவு உண்ணாத நண்பர்களின் நம்பர்களைச் சொல்லி அந்த முட்டைகளையும் பெற்றுக் கொள்ளலாம்..
அப்படி பல இரவுகளில் 5,6 முட்டைகளை அமுக்கியிருக்கிறேன்.
மட்டன் பிரியாணியுடன் ஒரு அவித்த முட்டையை சுவைத்துப் பாருங்கள்..பிரியாணி சிறக்கும்… அதை உதிர்த்து தூவி உருண்டை பிடித்து தின்று பாருங்கள்…ம்ம்..ம்ம்..
மதுரையில் உணவு விடுதிகளில் மட்டன் பிரியாணியுடன் அவித்த முட்டை தர மாட்டார்கள்.. கூடுதலாக வாங்க வேண்டும்.. சென்னையில் அப்படியல்ல அரை முட்டையாவது உடன் உண்டு…
அவித்த முட்டையின் நீட்சியான இன்னும் சில சுவையான வடிவங்கள் உண்டு முட்டை போண்டா,முட்டை பஜ்ஜி,முட்டை பஃப்ஸ்… எல்லாம் போச்சு…
சென்னை தேவி தியேட்டரில் தான் முதன் முதலில் முழு முட்டை போண்டாவை சுவைத்தது..
அதற்காகவே காசை ஒதுக்கியதுண்டு… (78இல் ஒரு முழு ரூபாய்..பெரிய காசு)
அவித்த முட்டையை வைத்து இன்னொன்று பரிமாறுவார்களே..
ஆங்…அதை மறந்துட்டேனே.. முட்டைகுருமா… இது சென்னை மலையாள முஸ்லீம் உணவு விடுதிகளில் புரோட்டாவிற்கு கிடைக்கும்.. வீட்டில் செய்ய தெரியாது..
கறி ,கோழி குழம்புக்ள் வாங்க காசில்லாத இரவுகளில் அதைத்தான் புசித்திருக்கிறேன்..
வட மாநிலங்களில் பரிமாறும் மொகலாய் மட்டன் குருமாக்களில் அவித்த முட்டையை நொறுக்கி தூவிவிடுகிறார்கள்.. அது ஏற்கெனவே குறைவாக இருக்கும் உரைப்பை இன்னும் குறைத்து விடுகிறது..
அவியலின் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால்..
அடையை அதாங்க ஆம்லெட்டை விட்டுர முடியுமா..?
அம்மா சுட்டுத் தரும் ஆம்லெட் அபார ருசி ..இருக்காதா பின்னே சின்ன வெங்காயத்தையுயும் பச்சை மிளகாயையும் லேசாக வதக்கி அதற்கு பின்னர் அடித்து கலக்கிய முட்டையுடன் கலந்து மஞ்சத்தூளும் உப்பும் சேர்த்து ஊத்தி தருவார்கள்..
அதுவும் நாட்டுக்கோழி முட்டையில்..
என்ன உணவு விடுதிகளில் போல மிதமான வேக்காட்டுடன் எடுக்க மாட்டார்கள்..தவிர வீட்டில் இருக்கும் கல் குழிவானது…
தடிமனாக இருக்கும்..சில சமயங்களில் கூடுதலாக வெந்து விடும்…கரிந்து கூட போகும் ஒன்று இரண்டுமுறை..
முட்டை மட்டும் கரிந்தால் வீடே நாறிப்போகும்..
உணவு விடுதிகளில் அப்படியில்லை.. பெரிய கல்லா.. எல்லாப் பக்கமும் சமமாக வெந்து சுவையாக இருக்கும்.. மிக மெலிதாக வார்ப்பார்கள்..
அங்கு வேறு சிக்கல்.. பெரிய வெங்காயம்..அதுவும் சரியான அளவில் இருக்காமல் பெரிசு பெரிசா.. பச்சையாக பல்லில் படும்
சொல்லி வாங்கிக்கலாம்… வெங்காயமில்லாமல் கூட…
சென்னை GPO வுக்கு பின்புறம் ஒரு உணவு விடுதி இருந்தது.. நேஷனல் என்று பெயர்? அங்கு மிக மெலிதாக சுவையாக கிடைக்கும்..
என் மனைவி வார்க்கும் முட்டை அடை அம்மா வார்ப்பதிலிருந்து வேறுபட்டிருக்கும்.. ஒரு சிட்டிகை மிளகாய்ப்பொடி மஞ்சத்தூளோடு சேர்த்து கலப்பார்களோ..? ஆந்திராக்காரங்க…எண்ணெய் தூக்கலாக இருக்கும்…
எண்ணெய்ன்னோ தான் நினைவுக்கு வருது.. சென்னை திருவெல்லிக்கேணியில் பெல்ஸ் சாலையில் ஒரு குறுக்கு சந்தில் நாயர் மெஸ் என்று ஒன்றிருந்தது..
அங்கு தேங்காய் எண்ணெயில் வார்த்து தருவார்கள்.. அது வித்தியாசமாக இருக்கும்.
கல்லூரி உண்வு விடுதியில் பகல் சாப்பாட்டிற்கு ஆம்லெட்டை கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம்.. சிங்கிளோ டபுளோ .. வாய்ப்பை விட்டதில்லை ..நோக்கத்திற்கு வெட்டியிருக்கிறேன்.. அப்பா காசு ..அதனாலேயோ நல்லா செல்லுச்சு…செரிச்சுச்சு..
ஆனா ஒரு குறை ஆறிப்போயிருக்கும்… இதுல தான் அவியல் அடையை தூக்கி சாப்பிட்டுரும்..
அவித்த முட்டையை ஆறினாலும் சாப்பிடலாம்.. ஆம்லெட் அவ்வளவு ருசிக்காது.. இன்னொன்று.. அவித்த முட்டைஓட்டை உடைத்து பிரிக்காத வரை கெடாது…
ரயில் பயண்ங்களில் சிலர் இப்படி கொண்டு வருவதை பார்த்திருக்கிறேன்…
ரயில் பயணங்களில் பெரும்பாலும் உணவு இந்த (பிரட்)ஆம்லெட் தான்..
நாக்பூருக்கு முன்னால பலார்ஷா என்றோரு ரயில்நிலையம். அங்கு ( பிரட்)ஆம்லெட் பிரபலம்..
வடக்கே செல்ல செல்ல கடுகு எண்ணெயெல்லாம் பய்ன்படுத்துவார்கள். கொஞ்ச்மென்ன நிறையவே சங்கடப்படுத்தும்..
இந்த ஆம்லெட்டில் தக்காளி சேர்த்தாலும் நல்ல சுவை தான் தஞ்சை சங்கத்தில் சாப்பிட்டிருக்கிறேன். அருமையாய் இருந்தது..
சில வித்தியாசமான ஆம்லெட்டுகளை நானே முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்..
முட்டைகளை நன்றாக மிக்ஸியில் நுரை பொங்க அடித்து விட்டு மஞ்சத்தூள் உப்பு மட்டும் சேத்து வார்த்து மசாலாதோசையை போல நடுவே மட்டன் சுக்கா, உருளைக்கிழங்கு வருவலை வைத்து தின்று பார்த்திருக்கிறேன்.. ஆனால் நிறைய மெனக்கெடணும்.
ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன்..தொலைக்காட்சியில் தான்.. அதில் ஆம்லெட்டின் நடுவே சூடான ஜாமை வைத்துச் சாப்பிடுவார்கள்..எப்படியிருக்கும்?
மதுரை சந்திரன் மெஸ்ஸில் நண்டு ஆம்லெட் ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.,விட்டு வைக்க கூடாதில்ல…

ஆம்லெட்டின் இளைய சகோதரி ஆஃப்பாயில் தான் கவர்ச்சிக்கன்னி..
வீட்டில் அவ்வளவு சுத்தப்படாது.. உணவு விடுதிகளில் அம்சமாக இருக்கும்.. ‘புல்ஸ் ஐ’ம்பாங்க.. காளை மாட்டுக்கண்ணு மாதிரியே வெள்ளைவெளேர்னு மிதமாவெந்து மினுமினுக்கும் வெள்ளைக்கருமேலே உடையாமல் வட்டமாக வேகாத மஞ்சக்கரு..
முதல்ல சரியாத திங்க தெரியாது.. எடுத்து முழுங்குவேன்..
அப்புறம் கரண்டியால் சாப்பிடப் பழகிக்கிட்டேன்..
ஆனா அதை மிகச் சரியா சாப்பிட கற்றுக்கொண்ட்து நம்ம டாஸ்மாக் பார்களில்..
இலையில் மிளகு, உப்பு தூவித் தருவதை நேரே வாய்க்கு கொண்டு போய் ஒரு உறிஞ்சு .. மஞ்சக்கரு அப்படியே உள்ளே தொண்டைக்கு சுகம் கொடுத்து இறங்கும்..அப்புறம் சாவகாசமாக வெள்ளைக்கருவை சப்புக் கொட்டி திங்கலாம்..
அங்கெல்லாம் அஞ்சாறு சர்வசாதாரனமாக உள்ளே போயிருக்கு..
இன்னொரு சகோதரி உண்டு ஆம்லெட்டுக்கு, முட்டைதோசை..
அதை வீட்டில் மட்டுந்தான் சாப்பிடுவேன்.. தேங்காய்ச்சட்னியோடு தருவார்கள் அற்புதமாக இருக்கும்.. உணவு விடுதிகளில் ஏனோ எனக்கு ரசிக்கவில்லை..
மதுரை கோனார் கடையில் கறிதோசையில் முட்டை சேர்ப்பார்கள்..
அங்கு முட்டைக்கறி என்றுமொரு தொடுகறி கிடைக்கும்..

இனி பொரிச்ச முட்டைக்கு போவோம்..இதை மட்டும் உண்வு விடுதிகளில் நான் சாப்பிட மாட்டேங்க..
கருக்கீருவாங்க ஆறி அலண்டு தான் கிடைக்கும்..
வீட்டுல அப்படியில்லீங்க இளமஞ்சலும் வெள்ள்ளையுமா அம்மா சுட சுடப் பொரிச்சு தருவாங்க.. முக்கால் வாசி புளிக்குழம்பு சோற்றுக்குத்தான்.. அள்ளி அள்ளி தின்றிருக்கிறேன்.. இடையிடையே பச்சைமிளகாய் துண்டு கடிபடும்.. அப்பா அம்புட்டு நல்லா இருக்கும்..
என் மனைவி பூண்டெல்லாம் போட்டு எண்ணெய் தூக்கலா பொரிச்சு தருவாங்க சுடுசோற்றோடு பிடிச்சு கூட சாப்பிடலாம்..
ஆனா உணவுவிடுதிகளில்.. ம்கூம் சரி வராதுங்க…
இந்த முட்டைப்பொரியலை கொஞ்சம் நீட்டி பச்சரிசி சோற்றொடு
கிளறீட்டா ஃப்ரைடு ரைஸ்.. கொள்ள காசு பிடுங்கிடுறாங்க.. நமக்கு வேணாங்க..
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விருந்தின் போது முட்டையை பல வகையாக சமைத்துப் போடுவார்களாம்.. நான் படித்த காலத்தில் சிலாகித்து சொல்வார்கள்..
அந்த விருந்து உண்ண வாய்ப்பு கிடைத்ததில்லை.. அது ஒரு நிறைவேறாத ஆசை.
ம்ம்..இப்பச் சொல்லுங்க ..இந்த முட்டையை ஆகாதுன்னுட்டாங்க எப்படியிருக்கும்…
‘முட்டை போச்சேன்னு!’ புலம்ப வச்சுருச்சுங்க இந்த வீணாப் போன சர்க்கரை வியாதி…

பெயர்த்து பெயர்த்து…


உள்ளே இறுகி கிடக்கிறது.
பெயர்க்க பெயர்க்க
வந்து கொண்டேயிருக்கிறது…
கறுப்பாய் முடிவேயில்லாமல்…
பெயர்த்துப்போட்ட குவியல்
உயர்ந்து கொண்டே போகிறது
ஆயாசமாயிருக்கிறது…
பெயர்த்து எடுப்பதை நிறுத்தி விட்டால்..
ஆரம்பித்து தொலைத்திருக்க கூடாது..
வெளியிலே சுற்றித் திரிந்தவன்
ஏன் உள்ளே
எட்டிப் பார்த்து தொலைத்தேன்?
வெளியில் இருண்டு வந்ததே!
இப்போது வெளியிலும் இருட்டு
உள்ளிலும் இருட்டு..

பற்ற வைக்கிறேன் குவியலை
எரிகிறது ஓங்கி
அந்த வெளிச்சத்தில்
உள்ளே திரும்புகிறேன்
இன்னும் பெயர்த்தெடுக்க…