எத்தனை எத்தனை அறைகள்?


 

வாழும் போது தான்
எத்தனை எத்தனை அறைகளை
கட்டிக்கொள்கிறோம் நமக்குள்?

ஆகச் சிறந்த அறையில் தான்
உறவினர்களையும் நண்பர்களையும் வரவேற்பது,
ஆகச் சிறந்த முகம் தான்
அங்கு கண்பிக்கப்படுகின்றது..

அடுத்து படுக்கை அறை
அங்கு வெகு சிலரை மட்டும்..

அதை விட தனியறை ஒன்று
அங்கு மனைவி மக்களை கூட
அனுமதிப்பதில்லை..
நாம் பங்கிட்டுக்கொள்ளாத
நாம் மட்டுமே அடிக்கடி
எடுத்தணிந்து பார்த்துக்கொள்ளும் முகங்கள்
இறைந்து கிடக்குமங்கு…

அதையும் விட இரகசியமானது இன்னுமொரு அறை
நாமே நுழைய அஞ்சும் அறை..
விளங்காத மர்மங்களும்,
மறக்கவே விரும்பும் துயரங்களும்
தோல்விகளும் அவமானங்களும்…..
குவித்து பூட்டிய அறை!
சாவியைக் கூட வீசி….

எல்லா கதவுகளையும்
தடுப்பு சுவர்களையும்
உடைத்து பிரித்து
வெட்ட வெளியாக்கி
நட்ட நடுவில்கிடந்து
ஒரே முகம் காட்டி
வாய் விட்டு சிரித்து
பிரிக்க வேண்டும் உயிரை!

Advertisements

பெரிசுகள் சிரிக்கின்றன!


மிச்ச கேசம் கலைந்து
களைத்த முகம் சுருங்கி
கண்கள் ஒளியிழந்து,
இருந்தும்
வாயோரங்களில்
எச்சில் மின்னுகிறது.
பெரிசுகள் சிரிக்கின்றன!

தள்ளாடும் தேகம்
நடுங்கும் கைகள்
ஒடிந்து விடுமோவென
கழுத்து,
அதன் மேல்
ஆடும் தலை .
பெரிசுகள் சிரிக்கின்றன!

சிர்ப்பதற்கென்ன?
மடிநிறைய நினைவுகள்,
வலியில்லாமல்
மரணத்தை வாரியணைக்க
ஓர் மனம்…
நேர்ந்ததற்காக
வாழ்வையும் மன்னித்தாயிற்று.
பெரிசுகள் சிரிக்கின்றன!

பேரழகு!


கலங்கிப்போனது கண்கள்
கலங்கிப் போவாளேயென்று
அம்மாவின்
மேல் வரிசை
கடைசிப் பல்லும்
விழுந்த போது…
மாறாக
“போனா போகுது விடுறா” வென்று
சிரித்தாள் கலகலவென
பேரழகு
அந்த பொக்கைவாய் சிரிப்பு!

கடந்து செல்கிறேன்!


கடந்து செல்கிறான்…
கண்ணோடு இணைந்த கண்ணை
பிடுங்கி பின்னுக்கிழுத்து
“முகமன் கூட கூறிவிடக்கூடாது”
முன்ஜாக்கிரதையுடன்
கடந்து செல்கிறான்.
முன் வேலையில்லாமல் இருந்தான்
வேலை வாங்கி கொடுத்தேன்
தங்க இடம் வேண்டுமென்றான்
உடன் தங்க வைத்தேன்
உடன் உறைந்தவனுக்கு
உணவும் அளித்தேன்
முடிந்தமட்டும்…

கடந்து செல்கிறான்.
கசந்து நிற்கவிடவில்லை
இய்ற்கை!

“உன் வழியாக அன்றும்
அவன் வழியாக இன்றும்
இயங்கியது நானே”
உரக்கச் சொல்லி
உந்தி தள்ளுகிறது
இயற்கை
கசந்து நிற்காமல்
இதையும் கடந்து செல்ல!
கடந்து செல்கிறேன்!