இதுவும் பூதம் தான்…


இதுவும் பூதம் தான்…
விளக்கைத் தேய்த்தால்
வெளிவரும் பூதத்தைப் போல
அபூர்வமானதல்ல!
எங்கும் எப்பொழுதும் கிடைக்கும்.
காசிருந்தால் வாங்கலாம்.

புராதன ஜாடிகளிலிருந்து
வெளிப்படும் பூதத்தைப் போல
விசுவாசமான அடிமை தான்..

பாட்டிலை
கவிழ்த்தால் வரும்.
விரும்பிய பொய்யுலகத்திற்கு
கொண்டு செல்லும்….
என்ன
குறைபட்ட விசுவாசம்!
விசுவாசத்தை நீட்டிக்க
புது பாட்டிலை
கவிழ்க்க வேண்டும்…

கவிழ்க்க கவிழக்க
விசுவாசமாயிருக்கும்
இந்த பூதம் வினோதமானது…
பாட்டுப்பாட வைக்கும்
ஆடவைக்கும்
ஏன் அந்நியமொழிகளில் கூட
அனாயாசமாக பேச வைக்கும்…

கிறங்கி கிடக்க
வாய் பிளந்து
நாக்கை விரிக்கும்
இந்த அடிமைக்கும்
வாலாட்ட ஆசை
வந்து தொலைக்கும்..

அதன் பிறகு
அதன் ஆசைக்கு
ஆட்டி வைக்கும்.
நண்பர்களை விரட்டும்,
சுற்றத்தை துரத்தும்.
மனைவி மக்களை பிரிக்கும்
அதன் பேராசை
அத்தோடு நிற்காது..
எமனாகி முடிக்கவும்
துணியும்..
குப்பியில் அடைபட்ட மதுவும்
ஒரு பூதம் தான்!

Advertisements