திண்ணை போச்சு!


 

திண்ணை மட்டுமா போச்சு,
துண்டை
உதறி விரிக்க,
கையை தலையனையாக்க,
வேட்டியை
நெகிழ்த்தி
இழுத்து போர்த்த,
இடமளித்ததோடு
உறக்கம் வரும் வரை
உரையாடிக்கொண்டிருக்க
நித்தம்
ஒரு வடிவில்
நிலவைத் தந்த
சொர்க்கமல்லவா
போச்சு!

 

Advertisements

என்னை விட்டு வெளியேறுகின்றேன்…


என்னை விட்டு வெளியேறுகின்றேன்..
என் கண்களை விட்டு..
என் கரங்களை விட்டு..
கண்டடைகின்றேன்
என்னை
என்னிலிருந்து வெளியே நின்று..
நிறைய முயற்சியும்
அதைவிட மேலதிகம் அருளும்(?)
சாத்தியப் படுத்துகின்றன
இந்த சித்துவிளையாட்டை!

எளிமையும் பகட்டே!


அத்தியாவசியத் தேவைகளை
அவசியமான வழிகளில்
பூர்த்தி செய்துகொள்வது மட்டுமே
எளிமை.

அனாவசியமான
எளிமையும்
அலங்கார பகட்டே!

சாத்வீக கர்வமும்
பாவமே!

நூலகம்..


“நீ படித்ததெல்லாம்
ஒன்றுமில்லை
குவிந்து கிடக்கிறது
என்னிடம்
நீ படிக்காதது”
அகங்காரம் குலைக்கும்
பிரம்மாண்டம்
நூலகம்!

சரண்புகுந்தால்
நாளும் புகட்டும்
தாய்
நூலகம்..

அவள் கோருவதெல்லாம்
வாசித்து தெளிய..
இயன்றால் தெளிந்ததை
எழுத…

தாங்கி நிற்பாள்
பெருமையுடன்
அதையும்!

கவிதையின் பிறப்பு!


அனுபவம்
கசந்தோ
இனித்தோ
கற்பனையை
உந்த
வலம் வருகின்றன
படிமங்கள்
மனதில்.

அவை ஒன்றோடொன்று
உரையாடி
வருகின்றன
ஒரு ஒழுங்கமைவுக்குள்..

பிறக்கிறது கவிதை!