தனிமை.


 

தனிமை
ஒரு பழைய
சிநேகிதனைப் போல
தேடி வருகிறது
மாலையில்..

ஊற்றித் தருகிறது
ஒரு கோப்பையில்
மதுவை..

என்னுடன்
சேர்ந்து காத்திருக்கிறது
நிலவும்
நீயும்
வர…

 

Advertisements

தனிமையென்னும் பாழ்நிலம்.


 

 

தனிமையென்னும்
பாழ்நிலத்தில்,
என் அன்பே!
உன் குரலின்
நிழல்கள்
ஜல்ஜல்லென்று
ஒலிக்கின்றன..

தனிமையென்னும் பாழ்நிலத்தில்
அசைந்தாடுகின்றன
உன் அதரங்களின்
அரூப பிம்பங்கள்..

தனிமையென்னும்
பாழ்நிலத்தில்
பிரிவுச்
சாம்பலிலிருந்து
மொட்டுவிழ்க்கின்றன
உனது
இருப்பின்
மல்லிகையும்
ரோஜாவும்.

 

தனிமையென்னும்
பாழ்நிலத்தில்,
எங்கோ
அருகிலிருந்து
எழுகிறது
உனது
சுவாசம்..
அது தகிக்கிறது
கனலாய்
அதன்
உஷ்ணத்தில்…

தனிமையென்னும்
பாழ்நிலத்தில்,
தூரத்தில்
துளிர்க்கிறது
சொட்டு சொட்டாய்
பனித்துளி போல
உன் மயக்கும் பார்வை..

தனிமையென்னும்
பாழ்நிலத்தில்,
இப்படி விழுங்கி விடும்
காதலுடன்
என் இதயத்தின்
கன்னத்தில் முத்தமிடுகிறது
உன் நினைவு

தனிமையென்னும் பாழ்நிலம்
நம்ப வைக்கிறது
பிரிவு அஸ்தமனம்
ஆவதாய்…
கூடல் விடிவதாய்!