மனம் திறந்து பேசேன்…


 

நல்ல சிநேகிதனே!
என்னைப் போலவே
உணர்கிறாய்…
எனது சொல்லும்
செயலும்
என் மேலொரு
பரிவை
சகோதரத்துவ
உணர்வை
எழுப்புகிறது
உன்னில்.
பிறகென்ன?
மனம் திறவேன்
பேசேன் என்னோடு

 

மவுனப் போர்வைக்குள்
ஒளித்துக் கொள்ளாதே
உன்னை,
மண் மேல்
வாழும் வரை..

மண் மேல்
வாழும் நாட்கள்
குறைவென்கிறார்கள்
நல்லவர்கள்.
பிறகென்ன?
பேசேன்
என்னோடு..

என்னைத் தெருவில்
என்னைக் கடந்து
செல்லும் போது
நம் கண்கள்
உரசிக் கொள்ளும் போது
உணர்கிறேன்
நீ உரையாட
விரும்புவதை.
பிறகென்ன?
பேசேன்
என்னோடு.

ஒருவேளை
என்னிடமிருந்து
சமிஞையை
எதிர்பார்க்கிறாயோ?
உன் கையை
நீட்டினால்
நான் பிடித்து
குலுக்குவேனோ
என்று
அஞ்சுகிறாயோ?
என் ஏக்கத்தை
என் உடல்மொழி
அறிவிக்கவில்லையா?
பிறகென்ன?
பேசேன்
என்னோடு..

 

ஏதோ ஒரு வகையில்
நம் எண்ணங்கள்
ஒன்றாகவே
ஓடுகின்றன…

இருவரும்
புருவங்களை
உயர்த்தி
அண்ணாந்து
நீலவானையே
தேடுகிறோம்
நம் வாழ்வின்
சிக்கல்களுக்கு
விடைகளை.
மண் மேலே
பிறகென்ன?
மனதைத் திறவேன்,
பேசேன்
ஒரு வார்த்தை
என்னோடு!

 

Advertisements

கொஞ்சம் வெளிச்சம்.


 

எதற்கும்
ஒரு காரணம்
எதற்குமே ஒரு
பருவம்
சூரியனின் கீழ்.
எந்தப் புதிருக்கும்
விடையுண்டு
எந்த விடையும்
நமக்கே நமக்கான
தனித்த ஒன்றில்லை.

 

எதுவுமே
மர்மமாய்
நீடிப்பதில்லை
வாழ்வனுபவம்
தரும் வெளிச்சத்தில்.
எதுவுமே
வலிதருவதில்லை
திரும்ப ஒரு தருணத்தை
வாழ ஏலாது
என்ற புரிதலை
விட.

இருந்தும்
யாதொரு அறிவும்
அழிவதில்லை
அடுத்தவருக்கு
கடத்திவிட்டால்..

எவர் வாழ்வும்
வீணில்லை
பின் வரும்
ஒரு தம்பி/தங்கைக்கு
அந்த கொஞ்சம்
வெளிச்சத்தை
தந்து விட்டால்!

நமக்கானது
மட்டுமே இல்லை
நம் வாழ்வனுபவம்..
இரகசியமில்லை
அதன் சாரம்..
அந்த கொஞ்சம்
வெளிச்சம்
ஒரு தம்பி/தங்கையின்
உரிமை.

 

 

அம்பத்தைந்து கடந்து..


 

பாடியெழுப்ப
பறவைகள்
வருவதில்லை..

துள்ளியெழவும்
முடியவில்லை
அள்ளிப் பெறக்கி
கோர்த்து
எழவேண்டியிருக்கிறது..

சன்னல் வெளியே
பார்க்க
ஆர்வமில்லை
அங்கே
மலர
மலர்களில்லை
சூரிய வெளிச்சத்தில்
வண்ணங்களை
விரிக்க
இலைகளில்லை..
வெளிரி காட்சி
தர
வண்ணமிழந்த
சுவர்கள் மட்டும்…

வாழ்க்கை
தந்த
தேர்வுகள்
இரண்டு
வாழ,
சாக.
வாழப் பயந்து
சாவை நோக்கியே
நகர்ந்ததில்
கீறலும் தழும்பும்
விழுந்த மனசு..

ஒரு கோப்பை
காபியை போட்டு
சூரியன் முழுதாக
நிறைய
காத்திருக்கிறேன்

அந்த கோப்பையில்
நிறைந்திருக்கிறது
ஐம்பத்தைந்து
வருடங்களும்.

கசந்து இனிக்கும்
காபியை
விழுங்கிக் கொண்டே
காத்திருக்கிறேன்
எழும்
சூரியனுக்காக..

ஏதும்
ஆர்வமின்றி!