இது போதும்


 

 

கீழே நிற்பவனுக்கு
இல்லை
வீழ்வோமோ
என்ற அச்சம்..
செருக்கில்லாதவனுக்கு
அடக்கமானவனுக்கு
என்றுமில்லை
கவுரவ குறைச்சல்,
கர்வபங்கம்.

 

எனக்கு போதும்
எனக்கு
வாய்த்தது,
கொஞ்சமோ
நிறையவோ!

இந்த
போதுமென்ற
மனத்தை
இழக்காதிருந்தாலே
போதும்..

பயணிப்பவனுக்கு
சுமை ஆகாது..
இங்கு கொஞ்சமும்
இதற்கப்புறம்
அங்கு
நிறைவான
மகிழ்வும்
போதும்
காலங்காலத்துக்கு..

 

 

Advertisements

கவிதை என்ன செய்யும்.


 

வாசிக்கும்
ஒவ்வொரு கவிதையும்
தீக்குளிக்க
வைக்கும்.

எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஒழுகும் வாழ்க்கையை
வரையறுத்து
ஒழுக்க வேலியை
எழுப்பிவிடும்.

எழுதிய கவிதையே
மறிக்கும்..
ஏன்
மீறினால்
ஒறுத்தும்!

 

வீதி.


 

நீளுகிறது
அமைதியாக
வீதி.
நடக்கிறேன்
இருட்டிக் கொண்டுவரும்
கருமையில்..
தடுமாறி விழுகிறேன்,
எழுந்து நடக்கிறேன்..
குருட்டுத்தனமாகவே.
இடறுகின்றன
கல்லும்
காய்ந்த இலைகளும்..
என் பின்னேயும்
இடறுகிறார்
யாரோ
கல்லிலும்
காய்ந்த இலைகளிலும்,
வேகமாக ஓடுகிறேன்
அவரும் ஓடிவருகிறார்..
மெதுவாக நடக்கிறேன்
அவரும் மெதுவாக
வருகிறார்..
தரும்பிப் பார்க்கிறேன்:
யாருமில்லை!

எங்கும்
இருட்டு
என் காலடி
மட்டுமே
காட்டும்
நான் நடப்பதை.
யாரும் எவருக்காகவும்
காத்திருக்காத
நீளும்
இருண்ட வீதியின்
காவல் என்னுடையது..
எவனோ வீதியில்
தடுமாறி விழுகிறான்.
விரைகிறேன்,
எழுந்து நடக்கிறான்
துணைக்கு நடக்கிறேன்
பின்னே,
புரியாமல்
ஓடுகிறான்
வேகமாக
வேகமாக
ஓடுகிறேன்
வேறுவழியின்றி.
மெதுவாக
நடக்கிறான்
மெதுவாகிறேன்
நானும்;
நின்று திரும்பிப்
பார்த்து
எவரையும் காணாது
திகைக்கிறான்..

புத்தி கெட்டவன்!
கண்ணுக்கு
எப்படித் தெரியும்
காவல்தெய்வம்.