நம்பாமல் சிரித்திருக்கிறேன் அன்று…


 

“ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஒரு தடாகம்..
அதிலொரு தாமரைப்பூ..
அதிலென் உயிர்”;
மது மயக்கத்தில்
இரகசியத்தை
உளறுவான்
மந்திரவாதி.
வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்,
ஆனால்
நம்பாமல் சிரித்திருக்கிறேன்.
அன்று!

அவள் தொட்டியில்
நட்டு வளர்த்த செடி..
மூன்று வீடு
மாறியாகிவிட்டது
ஆகிவிட்டதோர்
பன்னிரண்டு
ஆண்டுகள்
அவள் போய்..
இன்று
நம்பி வாழ்கிறேன்
அவள் அதில்
இருந்து
நித்தம் காலையில்
நலம்
விசாரிக்கிறாள்,
“நல்லா இருக்கியா”,
வென்று!

 

Advertisements

அன்றாட சுகங்கள்…


 

அனாவசிய
கனவுகளை
காண்பதில்லை..
அவற்றை துரத்தி
திரிவதுமில்லை..

அன்றாட
சுகங்களில்
லயிக்கவே
விரும்புகிறது மனசு..

விழித்தெழும் போது
ஆரோக்கியமாய்
அருகில்
குடும்பத்தினர்..

அனைவரும்
கூடி
காலையில்
பருகும்
காபி..

நோகாமல் பிரியும்
மலம்..

பிறந்த ஊரில்
பழகிய தெருவில்
பரிச்சயமான
முகங்களை
பார்த்து திரும்பும்
கொஞ்ச தூர
நடை..

பிடித்து குளிர
வைத்த தண்ணீரில்
குளியல்..

மெல்ல உதயமாகும்
மிதமான பசி

ருசியறிந்து
அம்மா தரும்
அவித்த இட்லியும்
அரைத்த
தேங்காய் சட்டினியும்..

காலைப் பொழுதை
கழிக்க
ஒரு
கவிதை தொகுப்பு..

இடையில்
நானே போட்டு
அருந்தும்
கறுப்பு காபி..

உச்சிப்பொழுதில்
அம்மாவுடன்
அமர்ந்து
ஆற அமர
கொஞ்சம் சோறு
குழம்போ,ரசமோ
தொடுகறியோ
ஒரு அப்பளமோ
வெறும் ஊறுகாயோ..

உண்ட நிறைவில்
பாய் விரித்து
அதிலொரு கிடப்பு..

மாலையில்
கொரிக்க
ஏதெனும்
செய்து தருவார்கள்
அம்மா,
ஒரு கோப்பை
தேநீருடன்…

மாலைப் பொழுது
முழுவதும்
அம்மாவுக்கு..

இடைமறிக்காமல்
உம்கொட்டிக்
கொண்டு
கேட்டுக்
கொண்டிருப்பேன்
அவர்கள்
பேசி தீர்க்கும் வரை..

பின்மாலைப்பொழுதில்
நடந்து வர
கிளம்புவேன்..
கடை கண்ணிகளுக்கு
செல்லவேண்டியிருக்கும்
ஏதாவது வாங்கி வர..

திரும்பும் வழியில்
சில நேரங்களில்
தெரிந்தவர்களை கண்டு
உரையாடி வருவதும்
உண்டு..

திரும்பி வந்து
அம்மா நேர்பட பேசுவோ,
காலத்தின் குரலோ
பார்த்து முடிக்கும்
வரை
கூட இருந்து
அம்மாவின்
கருத்துக்களை
ஆமோதித்து கொண்டிருப்பேன்..

பிறகு
இரவு
வயிறை நோகடிக்காத
ஏதாவுது
சிற்றுண்டி….

மெல்ல
படுக்கச் செல்வார்கள்
அம்மா..

படிக்க ஆரம்பிப்பேன்
புத்தகங்களை
கண்கள்
கெஞ்சும் வரை..

நிறைவாக
சுகிக்கிறேன்
அன்றாட வாழ்வை…

ஒரே ஒரு கவலை..

ஊறவைத்து
ஊறவைத்து
ஒருமணி நேரம்
மட்டுமே
ஓட்ட முடிகிறது
தண்ணீர் பம்ப்பை..

குண்டி கழுவ
குளிக்க
அன்றாடம்
புழங்க
தண்ணீருக்கு
அலைய வைத்துவிடுமோ
என்று ஒரு அச்சம்..

மழை வர வேண்டும்…

என் அன்றாட
சுகங்கள்
இடைஞ்சலின்றி
தொடர..

 

அப்பா-மகன் உறவு…


நான் என்ன புதுசா சொல்லப் போறேன்னு நினைக்கிறீங்களா?
எனக்கும் கொஞ்சம் சொல்ல இருக்கு..

அப்பனுக்கு புள்ளை நல்லா இருக்கணும் அம்புட்டு தான்..
மகனுக்கும் பெரும்பாலும் அப்பன் தான் ஆதர்சம்..
எனக்கு ஆதர்சம்னு சொல்லமாட்டேன்.முன்னுதாரணம்னு தான் சொல்லுவேன்..
ஏன்னா எனக்கு ஆதர்சம் அம்மா…

அதிருக்கட்டும் விசயத்துக்கு வாரேன்..

எனக்குத் தெரியும்.
அப்பா எம்மேல உயிரையே வச்சிருந்தார்..
கேட்டதெல்லாம் முன்னப் பின்ன வாங்கிக் குடுத்துருவாரு..
சின்னப்பிள்ளையிலிருந்து
கைப்பிடித்து கூட்டிட்டு போவாரு..
அன்பை காட்டுனதோட அந்தந்த வயசுக்கு அவசியமான அறிவையும் புகட்டினாரு.இன்றைய என்னுடைய ரசனைகளை என்னிடம் ஊட்டி வளர்த்தவரு அவரு தான்..
ஆனா மகனுக்காக வாழ்க்கையே அர்ப்பணிச்சவர்
சில விசயங்களில் எனக்கு எது நல்லதுன்னு அவர் நினைக்கிறாரோ
அதையே திணிப்பாரு..
எனக்கு பிடிக்குதா பிடிக்கலையா கேட்டுத் தெரிஞ்சுக்கமாட்டாரு..
ஏன் பிடிக்கலை
அறிஞ்சுக்க மாட்டாரு..

ஏழெட்டு வயசிருக்கும்..ஒரு சிவப்புக்கலர் சட்டை..
பளபளன்னு இருக்கும் பருத்தியாடையில்லைன்னு நினைக்கிறேன்..
சைசு வேற கொஞ்சம் பிடிச்ச மாதிரி இறுக்கமா இருக்கும்..
அதைப் போட்டா
திகுதிகுன்னு எரியும் உசிரே போற மாதிரி இருக்கும்..
அந்தச் சட்டையைக் கண்டாலே மிரளுவேன்..அழுவேன்…அடம்பிடிப்பேன்…
ஏன்னு விளக்கிச் சொல்லத் தெரியாத வயசு..
அன்னைக்கு அம்மா யாருக்கோ உடலநிலை சரியில்லேன்னு
கைப்புள்ளை தம்பியை தூக்கிக்கிட்டு போயிட்டாங்க..

அப்பாதான் என்னைத் தயார் செய்து அனுப்பணும்..
அந்த சட்டையப் போய் எடுத்துட்டார்..
வேணாம்பா வேணாம்பான்னு நான் அழுது அடம்பிடிக்க…
வெலம் வந்துருச்சு அவருக்கு..
விசிறிக்காம்பால
வெப்பீட்டாரு.
அழுக அழுக பள்ளிக்கூடத்திலே கொண்டு விட்டாரு..
சாயங்காலம் தீயா காய்ச்சல்..
அப்புறம் அவர் தான் ராத்திரி பகலா கவனிச்சுக்கிட்டாரு..
தாங்கி தடுக்கிட்டு கவனிச்சாரு…
இவ்வளவு பிரியமானவரு நமக்கு ஏன் பிடிக்கலைன்னு
ஏன் கேட்கமாட்டேங்கிறாரு..
மனசுல இது ஒரு ஆறா சினமாவே தங்கிப் போச்சு…
அதுக்காக அப்பா மேலே பிரியமெல்லாம் குறையலை…
இப்படித்தான் நிறைய சின்ன சின்ன விசயங்களில்..

குப்பையை சேர்க்கிற மாதிரி மனசுல ஒரு மூலையில் சேர்த்துக் கிட்டேன்..

வாய்விட்டு கேட்க ,அவ்வளவு பெரிய மனுசனை தைரியமில்லை..

என் 43 வயசுல மனைவியை இழந்து மனசொடிஞ்சிருந்தவனை அரும்பாடு பட்டு மீட்டு எடுத்தவர் 68 வயசான அப்பா தான்..
அப்ப ரெம்ப நெருங்கியிருந்த நேரம்..
அந்தச் சட்டைச் சமாசாரத்தை நினைவூட்டி..”ஏம்பா என்னைய ஏன் பிடிக்கலைன்னு கேட்கலை..
ஏம்பா அப்படிப் போட்டு வெளுத்தீங்க?”
ன்னு கேட்க…
அவர் அதிர்ச்சியாயிட்டாரு..
எதுவுமே பேசலை.
கண்கலங்கீட்டு போயிட்டாரு…

அதைப்பத்தி அடுத்து பேச அஞ்சு வருசம் எடுத்துக்கிட்டாரு..
தயங்கித் தயங்கி
அருகில் வந்தவர்”நான் அன்னைக்கு நடந்துக்கிட்டது தப்புடா ..உனக்கு ஏன் புடிக்கலைன்னு கேட்டிருக்கணும்..
சராசரி மனுசனா ஏதோ ஒரு அவசரத்திலே அப்பனா இருக்க தவறிட்டேன்டா..
மன்னிச்சுருடா…அதை மறந்துருடா..

நீ நல்லாருக்கணும்னு மட்டுந்தாண்டா நினைப்பெல்லாம்”னு கதறீட்டாரு.
அவ்வளவு பெரிய மனுசனை மன்னிக்கிறதாவுது மறக்கிறதாவுது…

மனசார நேசிக்கிறேன்
இந்த நொடிவரை
அப்பனை…
இன்னைக்கு அவரு இல்லைன்னாலும் அந்த மனுசன் தான் வாழவைக்கிறாருன்னு நம்புகிறேன்..

அப்பா-மகன் உறவு மட்டுமில்ல…

எந்த ஒரு அமைப்பின் நிர்வாகத்துக்கும்
அதன்
அங்கத்தினர்களுக்குமான
உறவு உண்மையில்
இப்படித்தான்…

உனக்கு ஏன் பிடிக்கலே ஒரு தடவையாவுது கேட்கணும்..
தனக்கு ஏன் பிடிக்கலேன்னும் சொல்லணும்!

மழைத்துளிகளும் ஆன்மாக்களும்.


 

மெலிந்த மழைத்துளிகள்
விழுகின்றன
கடலில்.
சிணுங்கிச் சுருக்குகிறது
கடல் முகத்தை..

விழுந்த வேகத்தில் மறைகின்றன மழைத்துளிகள்
கடலில் கரைந்து..

எஞ்சிய
கடலின் முகச் சுருக்கங்களே
சாட்சிகள்
தோன்றி விழுந்து மறைந்த மழைத்துளிகளுக்கு.

ஆன்மாக்கள் இறங்குகின்றன மானுட சாகரத்துக்குள்..
சிணுங்கி சுருக்குகிறது மானுடம் முகத்தை.

இறங்கிய வேகத்தில் சங்கமித்து மறைகின்றன
சதைச் சாகரத்துக்குள்
மென்மையான
ஆன்மாக்கள்..

எஞ்சிய மானுட
முகச் சுருக்கங்களே
சாட்சிகள்
தோன்றி இறங்கி
மறைந்த
ஆன்மாக்களுக்கு!

 

காதல் கணங்கள்.


 

அன்றொரு நாள்
எதிர்பாராமல்
வானம் திறந்து கொள்ள
வண்டியை நிறுத்தி
ஒண்டி ஒடுங்கினோம்
ஒரு டீக்கடையின்
துருத்திக் கொண்டிருந்த சிறு
கூரையில்..

எதிர்வாடையில்
ஒரு தட்டு வண்டியில்
ஆவி பறக்க
அவிச்ச கடலை..

அவளுக்கு
அந்நேரத்தில்
ஆசை வர,
நனைந்தோடி
வாங்கி வந்தேன்
சுடச்சுட ஒரு
பொட்டலம்..

சுற்றி மழை

கொட்டக் கொட்ட
சாரலிலிருந்து தப்ப
ஒருவருக்குள்
ஒருவர் ஒண்டி
அவிச்ச கடலை
தின்று
அந்தக் கடை
டீ குடித்த
தருணங்கள்…

ஆகா!
ஆனந்தமான
அபூர்வ
காதல்
கணங்கள்!

 

அந்த மற்றவர்கள்…


 

சிலர்
வெளிச்சத்தை கண்டடைகிறார்கள்,
இலக்கியத்தில்.

சிலர் கவின் கலைகளில்.

இன்னும் சிலர்
பிடிவாதமாக
நம்பத் தலைப்படுகிறார்கள்
ஒளிர போவது
என்னவோ
இதயத்தில் என்று!

 

சிலர் அவர்கள் வெளிச்சத்தை மதுவில்,
சிலர் பாலுணர்வின்
வெடிப்பில்.

சிலர் கண்டடைவதே இல்லை வெளிச்சத்தை;
ஒப்பேத்துகிறார்கள்
வாய்த்த இருட்டை வைத்தே!

நாம் நினைக்கக் கூடும்
இவர்கள் சோர்ந்து
இருண்டிருப்பார்களென்று!

ஆனால் அதுவல்ல உண்மை…

அவர்கள் கண்டடையாத வெளிச்சத்தை,
அவர்கள் நாடியதே
இல்லை;
அவசியமில்லை
யென்றே
எண்ணுகிறார்கள்!

 

 

மணியோசை…


 

பரவசமாயிருக்கும்
பாட்டி வீட்டில்
விடியற்காலையில்,
கொட்டத்திலிருந்து மாடுகள்
அன்றைய மேய்ச்சலுக்கு
ஓட்டிச் செல்லப்படும் போது..
விதவிதமாய்
ஒலிக்கும்
அவற்றின்
கழுத்து மணியோசை..

 

காபி வரப்
போவதை
முன்னறிவிப்பு செய்து
எதிர்பார்ப்பை
உண்டாக்கும்,
காலையில்
எங்கள் வீட்டு வாசலில்
ஒலிக்கும் பால்காரரின்
சைக்கிள் மணியோசை..

 

பள்ளிக்கூட மணியோசை
பலவிதம்.
வகுப்பறைக்கு
அழைக்கும் ஒன்று,
ஒவ்வொரு வகுப்பும் முடிவதை ஒலிக்கும்
சில..
உணவு உண்ண
அனுமதிக்கும் ஒன்று..
மீண்டும் வகுப்பறைக்கு கறாராக
அழைக்கும்
இன்னொன்று..
விடுதலையாகி வீட்டுக்கு
சிறகடித்து பறக்க
ஒன்று..

 

இடையிடையில் ஒலிக்கும்
பள்ளிக்கு அருகில் இருக்கும்
மாதாகோயிலின்
மணியோசை..

பின் மாலைப் பொழுதில்
ஒலிக்கும்
குடியிருப்பு
கோயில் மணியோசை..

நினைவூட்டும்
விளையாட்டை
நிறுத்தி
வீட்டுக்கு
திரும்பி
படிக்க உட்கார..

 

சலிக்க சலிக்க
கேட்ட
இரயிலடி
வருகை
புறப்பாடு
மணியோசை..

உற்ற உறவுகள்
உயிரினும் மேலான
நண்பர்கள்
மறைவை
அறிவித்து
சங்கொடித்த,
நாளை சுடுகாடு
வரை
எனக்கு
துணை வரப் போகும்
சாவு மணியோசை!