நம்ம பயகெளும் உதைச்சாடணும் உலகத்திருவிழாவிலே!


 

ஒரு பந்து,
22 பேர் ஆடலாம்..

கொஞ்சம்
திறந்தவெளி..

ஊருக்கு ஊர்
இல்லையா மந்தை?
சந்தை கூடுறது
காய்,கனி, பலசரக்கு விற்க
ஒரு நாளு,
ஆடுமாடு விற்க
ஒரு நாளு,
வாரத்துக்கு
அஞ்சு நாளு
சும்மா தானெ
கிடக்கு?

நேரமோ 90 நிமிசம்;
ஆடுறவனுக்கும்
ஆட்டம் பார்க்கிறவனுக்கு
அதிக நேரம்
வீணில்ல.

ஊக்கத்தோட
ஆடட்டும்
நம்ம
பயகெ,
உற்சாகத்தோட
ஊக்கப்படுத்துவோம்
ஊர் கூடி..

நம்ம நாடும்
இறங்கி
உதைச்சாடணும்
பந்தை,
இந்த நாலுவருச்சத்துக்
கொரு முறை
நடக்கிற
உச்சபட்சத் திருவிழாவிலே!

நடக்கணும்
மக்களே!

நாண்டுக்கிட்டு
சாகலாமான்னு
வருது,
நம்ம பயகெ
உதைச்சாடுறத
காணாமெ!

 

Advertisements

பாவக்கணக்கு!


 

 

ஆடி மாதம்
தேய்பிறை சதுர்த்தி திதி
அப்பாவுக்கு தெவசம் கொடுக்கணும்,
இன்னும் இரண்டு
நாளிலே.
அய்யர்கிட்ட பேசீட்டான்,
பட்டியலும்
வாங்கிட்டான்,
அவருக்கெவ்வளவு?
பேசீட்டான்.
எல்லாஞ்சேத்து
இரண்டாயிரம் ரூவா,
கணக்கு சொல்லீட்டாரு..
கையிருப்பு
மூவாயிரம் ரூவா…

“முடிச்சுரலாம்
நல்லபடியா…”

நினைச்சுட்டு
ஹோம குண்டத்துக்கு
வாங்கிவச்சிருந்த
அந்த கானகிரீட்
தொட்டியை
கழுவிக் காயவைக்கப்போனான்….

“டிட்டிங்..டிங்..
டிட்டிங்..டிங்..”

வாசல் மணி..

”ஆர்றா இந்நேரத்திலே?”

பக்கத்து வீட்டுக்காரர்..

பதறிப்போயிருந்தார்..

“என்னண்ணே?”

“அம்மாவுக்கு திடீர்னு நெஞ்சு வலீ…”

“ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போக வேண்டியது தானண்ணே”

“தம்பி ஆட்டோவில்
கூட்டீட்டு போறான் ..
கையிலெ காசில்ல..
அதாம் உங்க கிட்ட..”

முடிக்க கூட
இல்ல

முழிகளில்
முட்டிக்கிட்டு
கண்ணீர்..

“இருங்கண்ணே
இந்தா வாரேன்”

இருந்த மூவாயிரத்தை
அவர் கையில் திணித்து,

‘நீங்க போங்கண்ணே
நான் பின்னாலேயே
இந்தா வாரேன்”

அவர் நன்றியுடன்
பதட்டம் கொஞ்சம்
குறைந்து ஓடினார்..

அப்பா படத்தை
பார்த்து
சொன்னான்
“இந்த வருசம்
மட்டும்
மஹாலய அமாவசைக்கு
குடுத்துருறேன்பா”

“அய்யருகிட்ட
சொல்லணுமே..”

கைபேசியை
எடுத்தான்..

 

மேலே
வானின்
மேலடுக்குகளில்
இரண்டு ஜோடிக்
கண்கள்
குளமாகின..

“என்ன செய்யலாம் சாமீ?”,
கேட்டார்
சித்திரகுப்தர்
எமதர்மராசாவிடம்..

“அழிச்சுரும்யா
அவன் பரம்பரை
பாவக் கணக்கை,
கிழச்சிரும்யா
அந்தப் பக்கத்தையே”,
என்றார்
சந்தோசமாய்
எமராசா..

“பர்ர்ர்ர்ரென்று”
கிழத்தார்
நிறைவாய்
அந்தப் பக்கத்தையே
சித்திரகுப்தர்!

 

ஏனோ காட்ட மாட்டான்!


 

தந்தை
வினோதமானவன்..
பிழைப்பு காரணம்,
பிள்ளைகள்
உறங்கிய பின்பே,
பின்னிரவிலேயே
திரும்புவான்..

உண்ண அமரும் போது
கேட்பான்,
“பெரியவன்
சாப்பிட்டானா?
சின்னவன்
சாப்பிட்டானா?”,வென்று
“சாப்பிட்டாய்ங்கங்கிற”
பதிலைக்கேட்ட பின்பே பசியாறுவான்..

உறங்கும்
பிள்ளைகளை
உசுப்பி
விடாமலேயே
மெய் தீண்டி
மெய் சிலீர்ப்பான்.

இவ்வளவு பாசத்தை
வைத்திருப்பவன்
இதயத்தை திறந்து
காட்டவே
மாட்டான்,
அதனுள் நம்மை
பொத்தி வைத்திருப்பதை!
மறைத்தே வைத்து
மறைந்தே போவான்..

தந்தையின்
பாசமும்
நமக்கு
மறைபொருளே!

தாயே
குருவாயிருந்து
காட்டுவாள்
அவன் மறைந்த
பிறகு!

 

மகத்தான மருத்துவச்சி!


 

முனைந்த வாசிப்பு
முடிஞ்ச மட்டும்,
பின்னிரவில்
தாமாக
கண்கள் மூடும் வரை.

கனவுகள்!

கட்டிப் புரள்கின்றன வாசித்த
நினைவுகள்,
உள்ளே
விழித்துக்கொண்ட
உறைந்த நினைவுகளுடன்.
புணர்ச்சியில்
கருக்கொள்கின்றன
புதிய
எண்ணங்கள்.

எழுந்த எண்ணங்கள்
எழுப்பி விடுகின்றன
விடியலில்.

பிரம்ம முகூர்த்தமோ,
படைப்பின்
நேரமோ,
பிறக்கத் தவித்து
உருளுகின்றன
நெஞ்சுக்கும்
கண்டத்துக்குமாய்.

விக்கித்துப் போகின்றேன்
எண்ணங்களை
வார்த்தைகளாக்க.

முட்டுகின்றன
அவை நெஞ்சக்கூட்டை,
குரல்வளைக்கு
ஏறுகின்றன,
அனத்துகின்றன
நாக்கும்
மேலன்னமும்
சொற்களை
பிரசவிக்க
ஏலாமல்.

ஆத்தாள் தமிழச்சி
என்ன,
கம்பனின்
நாவில் மட்டுமா
சந்நதம் கொண்டெழுவாள்?
இந்த பரதேசிக்கும்
பரிதாபப்படுவாள்;
நின்றாடுவாள்
சாமி!

சாமியாடித்தீர்ப்பாள்
மலையேறும்
வரை!

கைவிரல்கள்
நர்த்தனமாடும்
அவள் சாமியாட
சாமியாட;
அவள்
ஆட்டத்தின்
நீட்சியாய்
கைபேசியின்
தொடுதிரையில்.

நாலஞ்சு
கவிதைகளை
சுகமாய்
பிரசவிக்க
வைத்து,
குளிப்பாட்டி,
அருகில் கிடத்திவிட்டே
அகல்வாள்
காலையில்,
மந்தகாச புன்னகையுடன்
அந்த மகத்தான
மருத்துவச்சி!

 

முன்பு, ரெம்ப முன்பு, எவ்வளவு முன்பு!


 

இரவின் அமைதியில்
வா!
கனவின் பேசும் மவுனத்தில் வா!
உருண்ட
கன்னங்களுடன்
சூரிய ஒளிபட்டு
ஒளிரும்
ஓடையின்
கண்களுடன்
வா!
திரும்பி வா
கண்ணீருடன்,
நினைவே!
நம்பிக்கையே!
நிறைவுற்ற வருடங்களின்
நேசமே!

இனித்த கனவே!
தித்தித்த கனவே!
கடைசியில்
கசந்த சொப்பனமே!

விடிந்திருக்க வேண்டும்
நீ
சொர்க்கத்தில்;

எங்கே
நேசம் பொங்கும்
ஆன்மாக்கள்
சந்தித்து
சமாதானமாகுமோ?
அங்கே!

எங்கே
ஏங்கும்
விழிகள்
உள்பக்கம் மட்டுமே
மெல்ல திறந்து
அனுமதித்து
மூடிக்கொண்டு
பிறகு
வெளியே திறந்து
தள்ளி மூடாத
கதவை
காணுமோ?
அங்கே!

இருந்தும்
கனவுகளில்
வா!
என் வாழ்வை
நான் மீண்டும்
வாழ..
சாவெனும் சாயல் படர்ந்த
உறைந்த வாழ்வு தானெனினும்.

திரும்பி
வா கனவில்,
தருகிறேன்!
இதயத்துடிப்புக்கு துடிப்பு,
மூச்சுக்கு மூச்சு.

சாயேன்
மார்மேலே..
பேசேன்
மெல்ல..
முன்பு போல,
நேசமே!
ரெம்ப முன்பு போல,
எவ்வளவு முன்பு !

 

இருக்கிறாய்!!


 

 

எனக்கு ஏனென்று தெரியவில்லை,
எனக்கே இனித்தன
என் பாடல்கள்,
உனக்கு பாடிய போது.

அதிலே தான்
ஆனந்தமோ?
என் எண்ணங்களை
உன் கண்களில்
வாசித்தேனோ?

நம்பினேனோ
என் கலை
உன்னுள்
ஆழ
நுழைந்ததென்று?

ஒருவேளை
விரும்பினேனோ
என் வார்த்தைகளை
சின்ன சின்னப்
பறவைகளாய்
உன்னைச் சுற்றி
வட்டமிட வைக்க?

ஒருவேளை
இனித்தனவோ
என் வார்த்தைகள்
உன் பாதங்களை
அர்ச்சித்ததால்?

நம்பினேனோ
உன் கன்னத்தை
வருடிக் கொடுத்தன
என் வார்த்தைகள்
என்று?

நம்பினேனோ
அவை ஆனந்தமாகி
உன்
அதரங்களில
மரித்தனவென்று?

இப்போது
நீ இல்லையே!

இருப்பாய்…
ஆமாம்
இருக்கிறாய்…
இயற்கையோடு
இயற்கையாய்.

இல்லையேல்
எப்படி
இனிக்கிறது
என்
இதயம்
இப்போதும்
நான்
பாடும்போது?