கை வந்தமரும்!


 

முதலில்
முரண்டு பிடிக்கும்
கவிதை
முரட்டுக்காளையைப் போல..
பிடிதராது
பிடிபடாது..

முதல் சிகரெட்டின்
முதல் இழுவையைப் போல
உள்ளிழுக்க முடியாது
இருமலாய்
வெளியேறித் தொலைக்கும்..
பிறகு
பழகப்பழக
நாலு இழுவை
உள்ளிருத்தி
தம் கட்ட முடியும்!

முதல்
பெக் போல
உள்புகாது
குமட்டிக் கொண்டு வரும்
பிறகு
பழகப் பழக
குவார்டர்
குவார்டராக
முழுங்கினாலும்
முடியுமே
கம்பா நிக்க..

முதல் சம்போகம்
போல விந்து முந்தி
தலைகுனிய வைக்கும்..
பிறகு
பழகப் பழக
அந்த மன்மதக்கலையும்
மண்டியிடும்..

பிடிதராத கவிதையும்
மிரளாமல்
மல்லுக்கட்டினால்
என் கணக்காசிரியர்
சொல்வார் ,-
“போட போட
சிறுகுழந்தையின்
இடதுகாலின்
சின்ன சுண்டுவிரலுக்கும்
வசமாகும்டா கணக்கு …”
அது போல
வசமாகும்..

கைவந்தமரும்
கவிஞனின்
சேதி கொண்டு வரும்
புறா போல!

 

Advertisements

அன்பனின் அழுக்காறு.


 

 

பொறாமைப் படுவேன்!
அவள் மேல்
நறுமணத்தை அள்ளி வீசும்
ஒவ்வொரு மலரின் மீதும்;
அவளுக்கு பாடும்
ஒவ்வொரு பறவையின் மீதும்;
அவளுக்கு
மலர்களின்
மணத்தை கொண்டு சேர்க்கும்
ஒவ்வொரு தென்றல் மீதும்.

அழுக்காறு கொள்வேன்!
அவள் மனதை
ஈர்க்கும்
ஒவ்வொரு கவிஞனின் பாட்டுமீதும்;
அவளுக்கு குளிர் நிழல் தரும்
ஒவ்வொரு மரத்தின் மீதும்

வெந்தெரிவேன்!
அவள் பாதங்களுக்கு குளிரொளி வீசும்
ஒவ்வொரு இரவின் மீதும்!

எனக்கு பொறாமை ஏதுமில்லை
அவளிடமிருந்து
எதையும்
எதிர்பார்த்து
அவள் மீது
அன்பை பொழியும்
எவர் மீதும்.

அது அவளை
களைத்து சலிக்க
வைக்க கூடும்.

 

நான் வாழ விரும்புவதே
அவளுக்கு கொடுப்பதற்காக,
அவளிடம் கேட்பதற்காக,
அவள் இதயம்
விரும்பும்
ஆசைகளையெல்லாம்..

 

முல்லை மணம் .


 

வழக்கமாய்
வரும்
மாலை நேரத் தென்றல்
தவறாது வந்தது
இன்றும்..

இன்று அது சுமந்து வந்தது
மல்லிகை மணம்..

சுகந்தத்தில்
சுகித்து
மயங்கியவனிடம்
தென்றல் கேட்டது..

“உனக்கு மல்லிகை மணத்தை சேர்த்துவிட்டேன்
எனக்கு முல்லை மணத்தைக் கொடு..
உன்னிடம் சேர்த்ததை போல
மற்றவரிடமும்
சேர்க்க வேண்டாமா?”

தயங்கினேன்
ஒரு நிமடம்
பதில் சொல்லத்
தெரியாமல்..

அதுவோ
விடாமல்
“உதிர்ந்த முல்லைகளையாவது
கொடு”,
என்றது..

எப்படிச்
சொல்வேன்
தென்றலிடம்
புதிய காரை
நிறுத்த
முல்லைக் கொடிகளை
அழித்ததை?

 

ஒரு வித்தியாசமுமில்லை.


ஒரு வித்தியாசமுமில்லை
எனக்கும்
உங்களுக்கும்
எதுக்கும்,
எல்லாம்
இருண்டுட்டா.

ஒரு வேளை
புரிய வைக்க
விளக்கேற்றியவனே
அணைக்க வேண்டுமோ
விரல் நீட்டி
திரியை
உள்ளிழுத்து!

இரண்டும் செய்யும்


வித்தியாசமான சமயம்

விடியலுக்கு முன்னான

அந்த ஒன்றரை மணிநேரம்.

பிரம்ம முகூர்த்தம்….

சொல்லக் கேட்டிருக்கிறேன்

இரண்டு உலகங்களுக்கிடையே

வாசல் திறக்கும் நேரம்…..

ரூமியின் பாட்டைப் படித்திருக்கிறேன்

தெரியாதெனக்கு உட்பொருளெல்லாம்.

விசித்திரமாக

விடைகள் கிடைத்திருக்கின்றன

அந்த வித்தியாசமான சமயங்களில்

வினாக்கள் பலவற்றிற்கு.

சிவ்வென்று பறக்கத்தூண்டும்

விண்ணில்

சில விடைகள்

விடுதலையாக்கி

கழுவேற்றிக் கொல்லும்

காலையிலேயே

சில உண்மைகளும்!

 

சிரிக்குது காலம்!


 

 

பொண்டாட்டிக்கு
பொடவை எடுக்கும் போது
பெத்தவ நெனைப்பு..

பெத்தவளுக்கு
பொடவை எடுக்கும் போது
பொண்டாட்டி நெனைப்பு…

பொறாமை…
கூச வைக்கும் பொறாமை
பெத்தவ மேலேயே.
பொண்டாட்டி மேலேயே.

ஏலாமை…
நெசத்தில் அது
நம்பிக்கை வச்சவங்க
எதிர்பார்ப்புகளை
ஒரு சேர
நெறைக்க முடியாத
ஏலாமை.

இப்ப புத்திககு எட்டி
என்னத்த  கிழிக்க
பொண்டாட்டிய
காலன் கொண்டுபோயிட்டான்..
கோலம் கொறைச்சுடுச்சு காலம்
அம்மாவெ,-
அப்பா இப்ப இல்ல-
பொடவையெல்லாம் வேணாம்னுட்டாங்க..

குரூரமாக சிரிக்குது காலம்!
என் ஈனத்தனத்தை
எனக்கே காட்டி!