வெற்றிக் களிப்பு….


 

விடியலில்
தூண்டில் போட்டவன்….

சூரியன்
உச்சியை கடந்து
சரிய
ஆரம்பித்த பின்னும்
மீனேதும் சிக்காமல்
கலங்க
ஆரம்பித்திருந்த சமயம்…

தக்கை தாழ
உசாரானேன்…
“கவ்வனுமே!’
பதைத்தவன்
உள்ளம்
துள்ள
கடித்து
இழுத்தது
இரையை…

சுண்டி இழுத்தேன்
தரைக்கு…

சிக்கியிருந்தது
கைத் தண்டி
கெண்டை ….
துடித்தது
துள்ளித் தாவி
விட
மீண்டும்
தண்ணிக்குள்….

“விடுவேனா?”
தாவிப் பிடித்து
மடக்கினேன்…

கைகளில்
மெல்ல அடங்கிய
அது
பரிதாபமாக
பார்த்தது
என்னை
மலங்க
மலங்க…

பசித்திருந்தவனுக்கு
முள்ளாக குத்தியது….

அதுவும்
கடும் பசியில்
இரைக்கு
ஆசைப்பட்டு
சிக்கிக் கொண்ட நிஜம்
உறைத்து….
முள்ளை
கவனமாக
நீக்கி
மீண்டும் விட்டேன்
தண்ணீரில்…

ஒரு முறை மேலெழும்பி
மூழ்கி
மறைந்தது
கெண்டை…

வீடு திரும்பினேன்
விவரிக்க முடியாத
வெற்றிக் களிப்புடன் ….

 

Advertisements

பொருட்கள்!


 

மக்கள் திரள்
ஊடேயும்
தனித்தே அதிகம் வாழ்வதாலோ
என்னவோ
உபயோகிக்கும்
உயிரற்ற பொருட்களோடு
உறவாட தொடங்கினோம்…
நம்மின் சாயலிலேயே
அவற்றை
காணத் தலைப்பட்டோம்…
கடிகாரத்துக்கு
முகத்தை தந்தோம்…
நாற்காலிக்கு
நம்மைப் போல
முதுகை தந்தோம்…
மேஜைக்கு
களைத்து தளராத
உறுதியான
நான்கு கால்களை…

கால்களில்
அணியும்
சப்பாத்துகளுக்கு
நம்மைப் போல
நாக்குகளை
அளித்தோம்…

மணிகளுக்கு
தொண்டைகளில்
தொங்கவிட்டோம்
நாக்குகளை
அவை மங்கலமாகவும்
மென்சோகமாகவும்
உ ணர்ச்சிகரமாக
ஒலிக்கும் போது
லயிக்க…
வாளிப்பான
வடிவங்களே
நம்மை
வசீகரித்ததால்
நீர் நிரப்பும்
வாளிகளின்
வாய்களுக்கு கூட
உதடுகளை
படைத்தோம்….
இதே போக்கிலே
நம்மை
மீறிய
பெரும் பருப்பொருட்களையும்
நம் சாயலிலேயே
காணத் தலைப்பட்டோம்…
நாட்டுக்கு இதயத்தை
கொடுத்தோம்…
சூறாவளிக்கு
கண்ணை…
குகைகக்கு
அகண்ட வாயை,
சவுகரியமாக
நுழைந்து
ஒடுங்க…

 

வருச பிறப்பு!


புது வருச பிறப்பு!

2018
கொண்டு
சேர்த்திருக்கும்
கால-வெளியில்
ஒரு சந்திப்பு,
ஒரு திருநாள்…
திருவிழா…

2018
2019க்கு
நம்மை
தோள் மாற்றி
விட
தேர்ந்தெடுத்த
திருநாள்…

நமது
நெடும்பயணத்தில்
அடுத்த தடத்திற்கு
நம்மை
பொறுப்புடன்
சேர்த்த
2018க்கு
பிரியாவிடையும்
அடுத்த கட்டப்
பயணத்திற்கு
கரம் பிடித்து
வழகாட்ட
வரும்
2019க்கு
உறசாக வரவேற்பும்
அளித்து
கொண்டாடவேண்டிய
உன்னத
திருநாள்,
உன்னத திருவிழா…

நன்றிப்பெருக்கோடு
2018ஐ
வழியனுப்பி,
நம்பிக்கையோடு
2019இன்
கரம் பிடித்து
முன்னகர்வோம்
அடுத்த தடத்தில்
அடுத்த தளத்திற்கு…

 

புது வருசமே!


புது வருசமே!

வாழ்க்கை ஒரு கடலென்றால்
நீ ஒரு அலையாய்
என்னை மூழ்க விடாமல்
உன் தோள் மேல்
தாங்கிச் சென்று
இன்னொரு
கரையில் சேர்ப்பாயா?

வாழ்க்கை ஒரு புத்தகமென்றால்
நீ ஒரு பக்கமாய்
என்னை
சுயநலத்தில்
வீழந்துவிடாமல்
பொது நலத்தை
புரியவைத்து,
காத்து,
என் எண்ணங்களை
எள்ளளவேனும்
மேம்படுத்தி
அடுத்த பக்கமான
மற்றொரு
ஆண்டுக்கு
தோள் மாற்றுவாயா?

வாழ்க்கை ஒரு
நாடகமென்றால்
நீ ஒரு நல்ல காட்சியாய்
நல்லதை பிறருக்கு
எடுத்துச் சொல்லும்
நல்ல பாத்திரத்தில்
நல்லபடியாக
என்னை
மிளிர
வைப்பாயா?

வாழ்க்கை ஒரு பயணமென்றால்
நீ ஒரு இரயிலாய்
இயற்கை சிரிக்கும்
சிற்றூர்கள் வழியே
இழுத்துச் சென்று
வருசக்கடைசியில்
சத்தியத்தின்
தடத்திற்கு
இன்னும்
அருகே
கொண்டு
என்னை சேர்ப்பாயா?

 

வருகிறது 2019!


வருகிறது
புத்தம் புதிய வருசம்…

மீண்டும்
இன்னொரு வருசம்
கடந்து போகிறது…

நிறைய
நினைவுகளை
விட்டுச்செல்கிறது…

நல்லவையோ
அல்லவையோ
அவற்றை
அலசிக் கொண்டிருக்க
அவசியமில்லை…

ஏனெனில்
அவை இனி
நேற்றைய
வரலாறு….

இன்னொரு
புத்தம் புதிய
வருசம்
வர காத்திருக்கிறது…

நாளும்
நம்மை
மேம்படுத்தி
அனுபவசாலியாக்க…

முதிர்ச்சி பெற
வைத்து
முன்னேற
வைக்க…

பேரார்வத்துடன்
தயாராவோம்!

அதிசயித்து
லயிக்க!

ஒவ்வொரு
நாளும்
அது
நாளைய
மர்மங்களை
அவிழ்க்க!

 

இசை!


இசையே!

கலைகளின் அரசியே!

தூய ஆனந்தத்தின்
புனித ஆதாரமே!

இன்பத்தை மட்டுமா
இரட்டிப்பாக்கிறாய்?

திருமண
விருந்துகளையும்
பிறந்த நாள் கொண்டாட்டங்களையும்
மட்டுமா
சிறக்க வைக்கிறாய்?

இரங்கி
துயர் விழுங்கி
மலங்க மலங்க
விழிக்கும்
இதயங்களையும்
அல்லவா
வருடிக் கொடுக்கிறாய்?

இறப்பாலும்
பிரிவாலும்
இழப்பால்
ஸ்தம்பித்த
இதயங்களை
நீவி விட்டு
மீண்டும்
துடிக்க வைத்து,
திணறிய சுவாசங்களை
சீராக்கி,
நெற்றிகளை பிடித்து விட்டு,
சோர்ந்த செவிகளில்
ஆறுதல்களை
இதமாக
மொழிகிறாயே…

நீயல்லவோ
அந்த நீதிதேவதையை
விட
உயர்ந்தவள்?
உண்மையில்
இறைவி …

உனை என்
சொல்லி
வாழ்த்துவனே!

இருண்ட உண்மை…


இருண்ட உண்மை…

பாடும் பறவைகள்
அறியுமா?
அவற்றின்
முடிவை,
மரணத்தை….

அறியாது…

சுகராக
சுவாசம்
மரணப்பெருமூச்சாக
மாறி சாகுமென்று
அறியுமா?

அறிந்தால்
நித்தம்
என்னை உயிர்ப்பிக்க
ஜீவனோடு பாடுமா?
என் வீட்டு
வேப்பமரத்துக் குயில்…
அதோ
மந்தை மந்தையாக
மேய்கின்றனவே
ஆடுகள்
மலையடிவாரத்தில்…

அவை கற்பனையில்
கூட
கண்டிருக்குமா?
கசாப்புகடைக்காரனின்
உயிர்குடிக்கும்
வெட்டுக்கத்தியில்
நிழலை…

இயற்கையே
பேரிரக்கத்துடன்
இந்த இருண்ட
உண்மையை
அவற்றிற்கு
மறைத்த
நீ
உன்
ஆகச்சிறந்த
படைப்பான
மனிதனுக்கு
மட்டும்
கல்லறையைப் பற்றிய
தெளிவை
ஏன்
விரித்து காட்டினாய்?

மண்ணோடு மண்ணாகப்போகும்
அந்த
முடிவை
ஏன் மறைக்காமல்
காட்டினாய்?

பாடும் பறவைகளும்
மேய்ந்து திரியும் விலங்குகளும்
ஆனந்தமாய்
அனுதினத்தையும்
எதிர்கொள்கின்றன
ஆனந்தமாக
இந்த இருண்ட
உண்மையை
அறியாமல்
வெகுளியாய்…

மனிதனை
மட்டும்
ஏனிப்படிச்
சபித்தாய்…

தான்
பாடையில்
சுடுகாட்டுக்கு
சமந்து போகப்படுவதை
கற்பனையில்
கண்டு
தன் மீது
கழிவிரக்கம்
கொள்ள
ஏன் வைத்தாய்?

இல்லை…

இதுவே
அவனுக்கு
படுக்கையிலிருந்து
பாடைக்கு
உறுதியோடு
மாறி கிடக்க
நீ
அவனுக்கு
உவந்தளித்த
வரமா?