வேண்டாவிருப்பாகவே
எழுகிறான் கதிரவன்..
கடல்விளிம்பை
தாண்டியவுடன்
காண வேண்டியிருக்குமே
காணச் சகியாதவையை.
இதோ கடல் விளிம்பைத் தாண்டி உயர்ந்து
விட்டன
கண்கள்
வேறு வழியின்றி
திறக்கிறான்
கண்களை…
விடியுமுன்
வலை வீசிய பரதவர்கள்
பரிதாபமாய்
கரை திரும்பிக்கொண்டிருந்தார்கள்
வீசிய வலையை
கரையிலிருந்த இழுக்க..
இன்றாவது
ஏதாவது
சிக்க வேண்டும்
வலைகளுக்குள்..
பதட்டத்துடன்
விடிகிறது
பகலவனுக்கு..
கண்களை கசக்கி
பார்த்தவனுக்கு
ஏன் தான்
விடிகிறதோ
என்றிருந்தது
அடுத்த காட்சி…
மலம் கழித்த பின் கழுவிக் கொண்டிருந்தார்கள் சிலர்
கருத்த குந்துபுறங்களைக் காட்டி…
அவனுக்காக
அலைகள் பாய்ந்து
உள்ளிழுக்கப்பறந்தன
மேலும் அருவருப்பாகியது…
கரை முழுவதும்
கரைந்தும் கரையாத
மலக் கரைசல்கள்..
குமட்டிக் கொண்டு வருகிறது அவனுக்கு..
இந்தக்கொள்ளையில்
காத்திருக்கிறது ஒரு கூட்டம்
பிதுர்காரியம்
செய்து பிண்டம் கரைக்க,
செய்வினைகளை
தோஷங்களை
கழித்து
எதையெதையோ கரைக்க,
வீசியெறிய..
முதல் பார்வையிலேயே
அவன் ஆசைக் காதலியின்
அழகு
அசிங்கப்படுவதை
காணச் சகியாமல்
கண்களை
ஒரு நிமிடம்
மூடிக் கொள்கிறான்..
திறந்து பார்த்தவன் கண்களில்
எருமைகளின்
ஜலக்கிரீடை…
அவைகளென்ன
செய்யும்?
அளித்த நீரையெல்லாம்
அழித்து
அழைத்து வந்து விட்டார்கள்
ஆழிக்கரைக்கு…
ஆசைக் காதலியின்
மேனியை பரிவுடன்
கண்ணுற
மேயவிட்டான்
பார்வையை..
மிதித்து துவைத்ததோடு
விடாமல்
மேனியை
அலங்கோலப்படுத்தி விட்டு
அகன்றிருந்தார்கள்
அயோக்கியர்கள்..
இன்னதுதானென்றில்லை
எச்சிலைகள்,எச்ச உணவுகள்,காகித தட்டுக்கள்,கோப்பைகள்
பாட்டில்கள்,
நெகிழி கோப்பைகள்,
நெகிழிப்பைகள்.
பீடி,சிகரெட் துண்டுகள்
உள்ளாடைகள்,ஆணுறைகள்…
காதலிக்காக
சினந்த
அவன் கண்கள் சிவந்தன…
ஒரக்கண்ணில்
பட்டது
அவனுக்கு
பிரியமான பரதவர்கள்
வலைகளை இழுத்து முடிந்திருந்தது..
எட்டிப் பார்த்தவனுக்கு
வயிறு எரிந்தது…
நூறு ரூபாய் கூடத் தேறாது…
இன்றும் கடன் வாங்கித்தான் பிழைப்பு…
அவர்கள் டாஸ்மாக் விரையுமுன்
விரைந்து விட வேண்டும்…
தின்று கொழுத்து
அதை குறைக்கவே
நடப்பவர்கள்
வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்…
மிரண்டு வேகமாக மேலே
ஏறினான்..
இறங்கியவுடன்
பவ்யமாக
செய்து தொலைப்பார்களே
சூர்யநமஸ்காரம்
எல்லாவற்றிற்கும் காரணமான
இந்த படுபாவிகள்!
*மெரினாவில் நான் உலவிய காலங்களில் கண்ட காட்சிகள்
படிமங்களாய்
உறைகின்றன
இன்றும் மனதில்*
Like this:
Like Loading...