அம்பது வயது பிம்பம்…


கண்ணாடி காட்டும்
அம்பது வயது
பிம்பத்தின் கண்களில்
மிரட்சி!
நிழலின் கண்களில்
நிஜத்தின் மிரட்சி..
நிஜத்தின் புத்தியில்
படிந்த நிழல்கள்..
நிழலில் இனம்தெரியும்?
மனம் மிரளுகிறது?
அது பிம்பத்தின்
கண்களில்?
புத்தியில் படிந்த
நிழல்கள் எரிந்து
மனம் கண்ணாடியானால்
கண்ணாடி
மிரளும்
பிம்பத்தைக் காட்டி
மறிக்காமல்
ஓளி வீசி
வழிகாட்டுமோ?

நெடுவழியில் மலர்ந்த மலர்..


என்றோ முனைந்து
வேர் பாய்ச்சியது
ஒரு விதை.
அதன் வேர்வைத்துளிகளில்
எழுந்தது ஒரு மரம்…
அதன் உழைப்பில்
மலர்ந்தது
ஒரு பூக்கூட்டம்..
எல்லாப் பூக்களுமா
காயாகி கனிந்து
விதை தந்தன?
எல்லா விதைகளுமா
முனைந்து
வேர் பாய்ச்சின?
ஒன்றிரண்டு வேர் விட
பல உதிர்ந்து
உருமாறி உரமாகின..
அந்நெடுவழியில் மலர்ந்த
மலர் நான்..
என் மணம
ஆதி வேர்களின்
வேர்வை வாசம்.
பிஞ்சாகி காயாகி
கனிந்து விதையாகி
வேர்விட. வேண்டும்…
அது என் வசமில்லை.
விதிவசத்தால் இடையில்
உதிர்ந்து போனால்
பிற விதைகள்
ஊன்றி வேர் பாய்ச்ச
உரமாகி உதவ வேண்டும்……

பெத்தவளை கேட்டுக்கிறேன்…


பெரியசாமியும்,அவர் நண்பர் ஆறுமுகமும் அந்தக் கோயிலைக் கடந்தார்கள்.
அந்தக்கோயில் ஒரு மடத்தை சேர்ந்தது…அந்தக்கோயிலின் வளாகத்துக்குள்ளே ஒரு மண்டபம் உண்டு…100 பேருக்கு குறையாமல் உட்காரலாம்..
விசேச நாட்களில் ஏதாவதொரு தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கும்..
அன்றும் அப்படித்தான் யாரோ ஒரு பெரியவர் இராமாயணத்தின் பாலகாண்டததை எடுத்தோதிக் கொண்டிருந்தார்…
அதைக் கடந்து அதற்கு பக்கத்தில் இருந்த டீக்கடையில் டீ குடிப்பது அவர்கள் வழக்கம்..
இருவரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள்…இருவரில் பெரியசாமி மூத்தவர்.மாலை நேரத்தில் நடந்து திரும்புவது அவர்களின் அன்றாட பழக்கம்..
அந்த டீக்கடை முன்பாகத்தான் அந்த நேரத்தில் அவர்களின் நண்பர்களுடன் கூடி குசலம் விசாரித்துப் பிரிவார்கள்..
ஆறுமுகம் டீயும் சிகரெட்டும் வாங்கி வர கடைக்குச் சென்றார்…
பெரியசாமி கடைக்கெதிரே திறந்தவெளியில் நின்று ஓலிபெருக்கிகளுக்கு காதுகளை கொடுத்தார்…
……விசுவாமித்திரனுடன் இராம இலக்குவர்களை அனுப்ப தசரதன் மறுக்க
கோபங்கொண்டு அந்த ராஜரிஷி வெளியேறத் தீர்மானித்திருந்த கட்டம்..
வசிட்டர் இடைபுகுந்து அறிவுறுத்த ,அனுப்பி வைக்க சம்மதிக்கிறான் தசரதன்… பாலகாண்டத்தின் இந்தப் பகுதியை விளக்கிக்கொண்டிருந்த பெரியவர்.. வால்மீகி,..கம்பர் இருவரின் பார்வைகளை ஒப்பிட்டு கலக்கிக் கொண்டிருந்தார்….

“இந்தாங்க டீயைப் பிடிங்க…”,என்று லயித்துப்போயிருந்த பெரியசாமியின்
கவனத்தைக் க்லைத்தார் ஆறுமுகம்..
வாங்கிக்கொண்டு டீயை உறிஞ்சினார்…
“ஆசையாயிருந்தா உள்ள போயி உக்கார்ந்துக்க வேண்டியது தானே…”
“ஆசையாத்தான் இருக்கு …சொல்லாமக் கொள்ளாம வந்திருக்கோம் நேரங்கடந்து போனா.. தேடித் தவிச்சுப்போவாங்க…”
சொல்லிவிட்டு டீயைக் குடித்தார்…
“…..வால்மீகியின் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் கழித்து வணக்கத்துக்குரிய கடவுளாக ராமர் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் படைக்கபட்டது கம்பராமாயணம்… ஆதலால்…”
ஒலிபெருக்கியில் பெரியவர் இலக்கிய நயங்களை தொட்டுக்கொண்டிருந்தார்…

டீயை முடித்து விட்டு சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டனர் இருவரும.
“….அவர் காலத்துப் பண்பாட்டின் உச்சங்களையும்…எதிர்காலத்திற்கான அவரின் கனவுகளையும் மனதில் கொண்டே கம்பர் விரித்தும் சுருக்கியும் வேறுபட்டிருக்கிறார்…..”
“சார்…சார்..”
மீண்டும் கவனம் கலைந்தது..
கலைத்தது..
“புரபசர்..வாங்க வாங்க நீங்களும் வாக்கிங்கா?”
“இல்ல சார்.வீட்டுக்குப் போயிருந்தேன்… இங்க உங்களைப் பார்க்கலாம்னு சொன்னாங்க..”
“என்ன சார். போனடிச்சிருக்க வேண்டியது தானெ..”
“இல்ல விசயம் கொஞ்சம் சங்கடமானது அதான் நேர்ல..”
“என்ன சொல்லுங்க..”
“கொஞ்சம் தள்ளிப்போயிருவோமே…ஒரே சத்தமா இருக்கு…”
“வா ஆறுமுகம் கொஞ்சம் தள்ளிப்போயிருவோம்..”
ஒலிபெருக்கிகளின் வலிமைக்கு அப்பால் சென்று தோது பார்த்து நின்றுகொண்டார்கள்..
“சொல்லுங்க புரபசர்…”
“நாளைக்கு காலையில் உங்க பசங்களை கொஞ்சம்அனுப்பி உதவனும்…”
“என்ன வீட்டுல எதும் பிரச்சனையா….தண்ணிகிண்ணி வரலையா இல்ல ஏதும் ரிப்பேரா?
புரபசர் பெரியசாமிக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்…
“இல்ல சார்..வந்து..”
தயங்கினார்..
“தயங்காமச் சொல்லுங்க”, ஆறுமுகம் ஊக்குவித்தார்…
“என் பெரிய பொண்ணு காலேஜுக்கு போகும்போதும் வரும் போதும் இரண்டு பசங்க பின்னாலேயே சுத்துறாங்க.. அவ பயந்து போயிருக்கா..உங்க பசங்க வந்தா…”
“அதுக்கு எதுக்கு பசங்கள அனுப்பணும் நானே வர்றேன்.. சொல்லிப் பார்ப்போம்..”
“இல்ல சார்.. அந்தப் பசங்க கொஞ்சம் சரியில்லாத பசங்கன்னு ஏரியாவில் சொன்னாங்க… நீங்க வந்தா துடுக்கா எதுவும் பேசி அசிங்கப் படுத்திருவாங்க..
தவிர என் பொண்ணு டூவீலர்ல் போகும் போது வழியில் சேர்ந்துக்கிறாங்க..
உங்களால..”
“என்னங்க இப்படிப் பேசுறீங்க.. போலீஸில் சொல்லி நாலு போடு போடாமெ…
உங்களுக்குச் சங்கடமா இருந்தா நான் ஏரியா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசுறேன்..”
“வேண்டாம் சார்.. காதும் காதும் வச்ச மாதிரி விலக்கிவிடணும் சார்…
அந்தப் பசங்கள்ல ஒருத்தன் யாரோ வட்டச் செயலாளர் மகனாம்…”
“எல்லாம் சரிங்க ஏம்பசங்க வந்து…”,ஒரு தந்தையின் கவலையொலித்த்து பெரியசாமியின் குரலில்..
“உங்க பெரிய பையன் முத்துச்சாமிக்கு ஏரியாவில் நல்ல செவாக்கு..சின்னபையன் வேலுச்சாமி கொஞ்சம் முரடன்.. ஆனாலும் நல்லவன்.. ஈஸியா பிரச்சனையத் தீர்த்துருவாங்க சார்…கொஞ்சம் தயவு பண்ணி அனுப்பி வைங்க சார்…”.
பெரியசாமிக்கு இந்தச் செய்தி புதுசு”…நம்ம பெரிய பையனுக்கு செல்வாக்கா..
சின்னவன் முரடனா…”
“அதான் கேக்குறாருல்ல பெரியசாமி.. அனுப்பி வையுங்களேன்..”
“இல்ல ஆறுமுகம்…சின்னப் பசங்களை…”
“அடப்போங்க..நீங்க.. உங்க பசங்களைப் பத்தி தெரியாமெ.. இரண்டும் இரண்டு சிங்கங்க…”
“பெரியசாமி சார்.. நான் இந்த ஊருக்கு புதுசு .உறவுன்னு இங்க எனக்கு யாருமில்ல… நீங்கதான் எல்லாம். தயவுபண்ணி அனுப்பி வையுங்க..புண்ணியமாப் போகும்…”
“அனுப்பி வைப்பாருங்க..என்னங்க பெரியசாமி..?”
“சரி சார்.. அவங்க அம்மாவை ஒருவார்த்தை கேட்டுக்கிறேன்…
பெத்தவளைக் கேட்டுட்டுச் சொல்றேன்.. நீங்க கிளம்புங்க..”
தயங்கி நின்ற புரபசரை”..தைரியமாப் போங்க.. அக்காவைப் பத்தி எனக்குத் தெரியும் ..அனுப்பி வச்சுரும்…”
கொஞ்சம் நம்பிக்கை வந்து கிளம்பினார் புரபசர்..
“என்ன ஆறுமுகம் நீ பாட்டுக்கு வசிட்டர் மாதிரி குறுக்க புகுந்துட்டியே…
பெத்தவன் கவலையப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீயே..”
“இதுவும் நல்லாருக்கே..புரபசர்- விசுவாமித்திரர்… நான் -வசிட்டன்…
ஆனா தசரதன் கௌசல்யாவை கேட்ட மாதிரி படிச்சதில்லையே..”
“யோவ் அதெல்லாம் ஆணாதிக்கம் மேலோங்கியிருந்த காலம்யா..இன்னைக்கு பெத்தவளைக் கேட்காம ஓண்ணும் முடியாது….கொஞ்சம் முன்னேறியிருக்கு…முழுக்க முன்னேறிருச்சுன்னா இந்த பிரச்சனையே கூட வராது..
ஆமா ஆறுமுகம், என் பசங்க பார்த்துப்பாங்யங்கிற…”

“..நிசம்மா பெரியசாமி…உங்க பசங்க இரண்டு பேரும் நல்லா வருவாங்க…உங்களை விட…. கொஞ்சம் உங்க நிழலிலிருந்து வெளியே வரவிடுங்க…வேணும்னா அக்காகிட்டப் கேட்டுப் பாருங்க..அக்கா உடனே அனுப்பி வச்சுரும்..”
“எனக்கு ஒண்ணும் புரியலை ஆறுமுகம்…”
“நான் பிரியிற இடம் வந்தாச்சு.. போயி நல்லபடியா முடிவெடுத்து புரபசருக்கு உதவுங்க.. நானும் பொபளைப்பிள்ளைய பெத்தவன்..”
யோசனையோடு பிரிந்து நடந்தார் பெரியசாமி…
வீட்டுக்குள் நுழைந்தார்…கண்கள் பெரியவனைத் துழாவியது…அவனைக் காணவில்லை.. சின்னவன் தென்பட்டான்..
“முரடனாம்ல…”
“டேய் வேலுச்சாமி இங்க வாடா..என்னடா முரட்டுப்பயன்னு பேரெடுத்துவச்சுருக்க..”
அவனெங்கே பதில் சொல்ல…
“ஆரு சொன்னா …?”குறுக்கே பாய்ந்தாள்.. மலரு…பெத்தவள்…
“அந்த புரபசர் தான்…”
“அதுக்குத் தான் வந்தாராமா?…என்ன பண்ணீட்டானாம் எம்புள்ள…?”
“ஏய்..ஏய்..மலரு…அந்தாளு..இந்தாளுன்னு பேசாத..
அவரு நல்லாத்தான் சொன்னாரு..நாந்தான்..”
“அதானெ பார்த்தேன்..”
“நாந்தான் கேக்கத்தெரியாம கேட்டுட்டேன்.”
“புரியலை கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க..”
“இல்ல… அந்த புரபசர் பொண்ணை இரண்டுபேரு சுத்தி சுத்தி வர்றாங்களாம்..
நம்ம புள்ளைங்களை கொஞ்சம் அனுப்புங்க.. விலக்கி விடணும்னாரு…
இவங்களால முடியும்னாரு…
அப்பத்தான் பசங்க இரண்டுபேரும் அதிரடியானவங்கன்னாரு.. அதிலும் இவன் கில்லாடியாம்…”
“நீங்க என்ன சொன்னீங்க…?”
“உன்னைய கேட்டுக்கிட்டுச்சொல்றேன்னேன்…என்ன சொல்ற..?”
“நல்லா போகட்டும்.. நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க…நாம் செய்யாம் யாரு செய்யப் போறா…?”
புது மரியாதையுடன் அந்தப் பெத்தவளைப் பார்த்த பெரியசாமி கேட்டாரு…
“அவங்ய கொஞ்சம் சரியில்லாத பசங்களாம் மலரு..ஏதாவது அடிதடி கேசு கீசுன்னு ஆகிப்போச்சுன்னா..”
அதற்கு அவருக்கு கிடைத்த பதிலு…
“அதெல்லாம் ஓண்ணும் ஆகாது.. தப்பு பண்ணுறவனுக்குத்தான் மனசுக்குள்ள பயமிருக்கும்.. விலக்க ஆள் போனா ஓடிப்போயிருவான்…அப்படியே எதுவும் ஆச்சுன்னா… “

“ஆச்சுன்னா சொத்து சேர்த்து வச்சுருக்கோம்ல
எடுத்து நடத்த நீங்களும் நானும் இருக்கோம்ல..”

“அப்ப இரண்டு பேரையும் நாளைக்கு போகச் சொல்லு..
ராத்திரியே போன் போட்டு எப்ப வரணும்கிற விவரத்தை புரபசர் கிட்ட கேட்டுக்கச் சொல்லு..”
முடிவுக்கு வந்திருந்தார் பெரியசாமி.