அங்கோர் இடமுண்டோ?


மரண பயம் தொற்றிக்கொண்டது
நேர் மூத்த தலைமுறை உறவுகள்
‘பொத்’ பொதென்று
ஒவ்வொன்றாக விழ விழ
மரணம் சமீபித்து விட்டது
புரிந்து போனது…
முதுகுத்தண்டு சில்லிடுவதும்…
மரணத்தின் துர்நாற்றம்
முதுகு பின்னால் இருந்து வீசுவதும்
தொடங்கி தொடருகிறது…
மரணத்தின் பயத்தோடு
இன்னொரு அச்சமும்…

சொர்க்கத்துக்கு ஏகுவேனா?
இல்லை நரகத்தில் விழுவேனா?

சொர்க்கம் எப்படி இருக்கும்?
பூத்து குலுங்கும் சோலை..
குளிர் நீர் சொரியும் அருவி
இளங்காற்று வந்து மெல்லவே தொடும்
பளிங்கு மண்டபம்..
அளவில்லா அறுசுவை உணவு
பருக பலவித பழரசம்
தங்க கிண்ணங்கள் ஏந்தி
ஆட்டமும் பாட்டமுமாய்
தங்கமேனி பெண்கள்
அழகழகாய்!

நரகம்.?
கன்னங்கரேல் இருட்டு
வெளிச்சமூட்டவே
பொசுக்கபடும் பாவிகள்..
முட்டை முட்டும் ரத்தச் சகதி
மிதக்கும் கண்களும் கிழிந்த காதுகளும்…
எரியும் சதையின்
எழும்பின் நாற்றம்
புகை சூழ் பாழ்மண்டபம்..
கடித்த மூளைகள்
குதறிக் கிழித்த குடல்கள்…
வழிய வழிய
மண்டையோட்டில் இரத்தமேந்தி
ஆட்டமும் பாட்டமுமாய்
அச்சுறுத்தும் பேய்கள் பிசாசுகள்…

என்ன இது?
சொர்க்கம் என்ன மேலிலா
ஏன்? எதற்கு? “ஏகுவேனா?”
நரகம் என்ன பாதாளத்திலா
ஏன் விழவேண்டும்?

பூக்கள்,
குளிர்நீர் அருவி
இளங்காற்று பளிங்கு மண்டபம்
அறுசுவை உணவு
பழரசம், அழகழாய் பெண்கள்
எல்லாம்
என்னுள் ஒளிந்திருக்கும்
தீராத பேராசைகளின்
அசிங்கமான திரட்சியல்லவா?
சொர்க்கம் எங்கோ மேலில் தானோ?
ஏகத்தான் ஆகுமோ?
ஒன்று மட்டும் நிச்சயம்
எனக்கில்லை சொர்ர்க்கம்…

இருட்டு,
எரியும் பாவிகள்
இரத்தச்சகதி
சிதைந்த உடலுறுப்புக்கள்
புகை மூட்டம்
கடித்துக்குதற மூளை குடல்
மண்டையோட்டில் இரத்தம்
கொட்டமடிக்கும் பேய்கள் பிசாசுகள்..
எல்லாம்
மறைக்க முயன்று தோற்கும்
வெறியும் அச்சமுமல்லவா

நரகம் எங்கோ பாதாளத்தில் தானோ?
விழத் தொடங்கி வெகுகாலமானதோ?
அங்கோர் இடமுண்டோ
நிச்சயம் எனக்கு?