செல்வம்…


 
என்னிடம்
வேறேதும்
செல்வங்கள் இல்லை,
என் எண்ணங்களை தவிர,
என் சொத்தெல்லாம்
என் எண்ணங்களே.
உன்னைப் பற்றிய
என் எண்ணங்கள் எல்லாம்
என் மனதில்
பார்த்து பார்த்து
வார்க்கப்பட்ட
பொற்காசுகள்.

ஆனால் மிச்சம்
வைக்காமல்
செலவழிப்பேன்
என் எண்ணங்களை,
ஆம் !ஏட்டில்
எழுதி வைப்பேன்,
பாட்டுக்களாய்
பாடி வைப்பேன்…

ஏனெனில் சாவுக்கு
இப்பக்கம்
அவற்றை
செலவழித்து, பாடிவைத்து விட வேண்டும்,

அப்போது தானே
அவை அமரத்துவம் பெறும்?

 

ஞானம்…


 

என்று
தவறுகள்
இழைக்கப்படும் போது
பதறுவதை நிறுத்தினேனோ,

என்று
திறக்கப்படாமல்
மூடுண்ட கதவுகளுக்கு பின்னால்
சமரசங்கள் காத்திருப்பதை கண்டேனோ,

என்று அமைதியாகி
விட்டேத்தியாக
ஆனேனோ,

அன்று என் வாழ்வை
நேர்கொண்டு
கண்டேன்,

கிடைக்கப் பெற்றேன்
ஞானத்தையும்,

இளமையை
தொலைத்திருந்து!

 

ரசவாதம்!


 

நான் சித்தனில்லை,
ஆனால்
அறிவேன்
ரசவாதத்தை…

என் இதயத்தை
என்னால் மலர்த்த முடியும்
வசந்தம்
மண்ணை
மலரவைப்பது போல ….

ரசவாதத்தை கற்றிருக்கிறேன்
இலைகளிடமிருந்தும்
மலர்களிடமிருந்தும்….

உதிரப்போகும்
உடலங்களை
வண்ணங்களாலும்
நறுமணத்தாலும்
இருக்கப்போகும்
கணங்களில்
அவை
மலர்த்துவதைப்
போல
துருப்பிடித்து
உதிரப்போகும்
வாழ்வை
கிடைத்தவரை
பொன்னாக்குவேன்!

 

காத்திருக்கும் உலகம்…


 
வெறுமனே
ஏதும் செய்யாமல்
வீட்டுக்குள்
குத்தியிருந்து
ஜன்னல் வெளியே
எட்டி எட்டி
பார்க்காதே!
வந்து
வெத்தலை பாக்கை
வச்சு
அழைக்காது
வாழ்வு!

கண்ணுக்கு தெரியவில்லையா?
காத்திருக்கும்
உலகம்…

அப்படி
என்னத்தை
இழந்து விடுவாய்?
பாதுகாப்பெனும்
பழகிய
உன் சூழலை
விட்டு வெளியேறினால்…?
அப்படியென்ன
அச்சம்
வீட்டை விட்டு
வெளியே
சாட…

கண்ணுக்கு தெரியவில்லையா?
காத்திருக்கும்
உலகம்….
சவால்களை
சந்திக்க
துணிவில்லையெனில்
உன் ஓட்டுக்குள்ளேயே
ஊர்ந்து
ஒடுங்கி கொள்…

ஆனால்
ஒரு முறை
தான்
நீயே சுமந்து
வாழும்
நரகத்தை
உதறிச்
சாட
துணியேன்…

ஆசையாய்
அழைக்கிறது
பார்
வாழ…

காத்திருக்கும்
உலகம்!

 

குற்றங்குறைகள்…


 

மெனக்கெட்டு
காசு செலவழிச்சு
வண்டி போட்டு
தேடி வந்திருந்தார்கள்
குற்றங்
குறைகளாக
எடுத்துக்கூற…
உன்னைப்பற்றி
என்னிடம்…
ஒவ்வொருவரும்
வந்திருந்து
ஆளுக்கொரு
பட்டியலை
வாசித்துவிட்டுச் சென்றார்கள்…

உரக்கச்சிரித்தேன்
ஒவ்வொருவரும்
வத்தி வைத்துவிட்டுப் போன பின்…

எனக்கு தான்
அத்துப்படியே
உன்
குற்றங் குறைகளெல்லாம்
முன்பே…

அவர்கள்
அறிந்திருக்கவில்லை….

என்னை
உன்னை மேலதிகம்
நேசிக்க வைத்தததே
அந்த
உன் குற்றங்குறைகள் தானே….

 

வெற்றிக் களிப்பு….


 

விடியலில்
தூண்டில் போட்டவன்….

சூரியன்
உச்சியை கடந்து
சரிய
ஆரம்பித்த பின்னும்
மீனேதும் சிக்காமல்
கலங்க
ஆரம்பித்திருந்த சமயம்…

தக்கை தாழ
உசாரானேன்…
“கவ்வனுமே!’
பதைத்தவன்
உள்ளம்
துள்ள
கடித்து
இழுத்தது
இரையை…

சுண்டி இழுத்தேன்
தரைக்கு…

சிக்கியிருந்தது
கைத் தண்டி
கெண்டை ….
துடித்தது
துள்ளித் தாவி
விட
மீண்டும்
தண்ணிக்குள்….

“விடுவேனா?”
தாவிப் பிடித்து
மடக்கினேன்…

கைகளில்
மெல்ல அடங்கிய
அது
பரிதாபமாக
பார்த்தது
என்னை
மலங்க
மலங்க…

பசித்திருந்தவனுக்கு
முள்ளாக குத்தியது….

அதுவும்
கடும் பசியில்
இரைக்கு
ஆசைப்பட்டு
சிக்கிக் கொண்ட நிஜம்
உறைத்து….
முள்ளை
கவனமாக
நீக்கி
மீண்டும் விட்டேன்
தண்ணீரில்…

ஒரு முறை மேலெழும்பி
மூழ்கி
மறைந்தது
கெண்டை…

வீடு திரும்பினேன்
விவரிக்க முடியாத
வெற்றிக் களிப்புடன் ….

 

பொருட்கள்!


 

மக்கள் திரள்
ஊடேயும்
தனித்தே அதிகம் வாழ்வதாலோ
என்னவோ
உபயோகிக்கும்
உயிரற்ற பொருட்களோடு
உறவாட தொடங்கினோம்…
நம்மின் சாயலிலேயே
அவற்றை
காணத் தலைப்பட்டோம்…
கடிகாரத்துக்கு
முகத்தை தந்தோம்…
நாற்காலிக்கு
நம்மைப் போல
முதுகை தந்தோம்…
மேஜைக்கு
களைத்து தளராத
உறுதியான
நான்கு கால்களை…

கால்களில்
அணியும்
சப்பாத்துகளுக்கு
நம்மைப் போல
நாக்குகளை
அளித்தோம்…

மணிகளுக்கு
தொண்டைகளில்
தொங்கவிட்டோம்
நாக்குகளை
அவை மங்கலமாகவும்
மென்சோகமாகவும்
உ ணர்ச்சிகரமாக
ஒலிக்கும் போது
லயிக்க…
வாளிப்பான
வடிவங்களே
நம்மை
வசீகரித்ததால்
நீர் நிரப்பும்
வாளிகளின்
வாய்களுக்கு கூட
உதடுகளை
படைத்தோம்….
இதே போக்கிலே
நம்மை
மீறிய
பெரும் பருப்பொருட்களையும்
நம் சாயலிலேயே
காணத் தலைப்பட்டோம்…
நாட்டுக்கு இதயத்தை
கொடுத்தோம்…
சூறாவளிக்கு
கண்ணை…
குகைகக்கு
அகண்ட வாயை,
சவுகரியமாக
நுழைந்து
ஒடுங்க…