அழகான பொய் நான்!


சலித்துப் போன
சாவு வாழ்வை கேட்டது:
விலக்கில்லாமல் உன்னை
நேசித்து கொண்டாடும்
எல்லோரும் என்னை மட்டும்
வெறுத்து ஒதுக்குவதேன்?
ஏனா?
கேட்ட வாழ்வு
சிரித்து விட்டு சொன்னது
சாவிடம்:
அழகான பொய் நான்
அப்பட்டமான உண்மை நீ
அலைக்கழிப்பவள் நான்
அளிப்பதாய நம்புகிறார்கள்
அருளுபவள் நீ
அழிப்பதாய் அஞ்சுகிறார்கள்
காடுமேடெல்லாம்
இரக்கமில்லாமல் இழுத்தடிப்பவள் நான்
கனிவாய் கரை சேர்ப்பவள் நீ
இனிதான பொய் நான்
இடியென இறங்கும்
உண்மை நீ!

Advertisements