மனிதம்…


மனிதம்…

எந்த மனிதனிலும்
மனிதம்
மிச்சமிருக்கும்
சொற்ப
அளவிளேனும்
மக்களே!

அவன் நல்லவனா
கெட்டவனா
என்றாராய்ந்து
கொண்டிருக்காமல்
அவனில்
எஞ்சியிருக்கும்
மனிதத்தோடு
கைகுலுக்குவோம்
உரையாடுவோம்
உறவாடுவோம்
மக்களே!

மனிதத்தை
முன்னிறுத்தி
மனிதத்தை
போற்றுவோம்..

இன்னும்
முழுக்க
வறண்டு விடவில்லை…
அருகினாலும்
இன்னும்
ஈரம்
உலரவில்லை…

போற்றி
பெருக்குவோம்
மனிதத்தை
மானுடம்
வெல்ல…

நானும்
என்னை
நிறுவவோ,
முன்னிறுத்தவோ,
இனி
கவிதை
எழுதமாட்டேன்..

இயன்றவரை
மனிதத்தையே
நிறுவ,
முன்னிறுத்தப் பாடுவேன்..

 

புனைவுலகில் இருந்து யதார்த்தத்தில்…


புனைவுலகில்
இருந்து
யதார்த்தத்தில்…
அறியாமையில்
மிரண்டு
போய் பார்க்கிறேன்
விரிந்த வானில்
எண்ணற்ற
நட்சத்திரங்களை…
அவை எழுவதையும்
மறைவதையும்…

இந்த பிரம்மாண்டத்தைக்
கண்டு
அசைவற்று நிற்கிறேன் அசந்து…

இதில்
என் பங்களிப்பு
சொற்பமே எனினும்
ஏதேனும்
இருக்கிறதா….?

அதிசயித்து
உறைந்து போய்
நிற்கிறேன்…

இந்த
பிரம்மாண்டத்தின்
தூய
இயக்கம்
என்னையும்
தீண்டாமலா
போகும்…?

என் நாளங்களின்
இரத்த ஓட்டம்
இந்த பிரம்மாண்டத்தின்
இயக்கத்திற்கேற்ப
ஏறி இறங்காமலா போகும்….?

எனது எல்லா
ஆசைகளையும்
துறக்கிறேன்…

என்னை இதன்
இயக்கத்திற்கு
ஒப்புவிக்கிறேன்…

என் புனைவுலகில்
இதுவரை
மிதந்து கொண்டிருந்த
நான்
இந்த பிரம்மாண்டத்தின்
தூய இயக்கத்தின்
விசைகள்
சுழற்றி
அடித்து
செல்லும்
சிறு
துகளாய்
யதார்த்தத்தில்
காலூன்றுகிறேன்….

 

வாழ்வு கசப்பானது…


வாழ்வு கசப்பானது…

எல்லா வருசங்களின்,
இளைய மூத்த,
எல்லா வருசங்களின்
முகங்களும்
கறுத்திருக்கின்றன
களைப்பால்….
கண்ணீரால்….

நான்
எதுக்கு வாரிச்சுருட்டி
எழ வேண்டும்
உழைத்து
களைத்து
கண்ணீர் வடித்து
அழுகவா….?
வெயிலில்
வெக்கையில்
உழன்று
புழுங்கவா
….?

அரவணைத்திருக்கும்
உறக்கத்தின்
ஆழங்களில்
கனவு கண்டு கொண்டு
கிடந்து
விட்டு போகிறேனே…

ஈட்டிய
செல்வத்தை
ஏளனம்
செய்கின்றன
இழந்த
வருசங்கள்…
புகழ் எனும்
முத்து ஒளிந்திருக்கிறது
கண்ணீர்க் கடலின்
அடியாழத்தில்……

காதலென்னும்
பூவும்
உதிரும்…..

இல்லை
இணையை இழந்து
தனித்து வாழ
தவித்து
அழ வேண்டும்…

விடியலில்
வாரிச்சுருட்டி
எதுக்கு
எழ வேண்டும்…?

வெயிலில்
உழன்று
அழவா…?

அரவணைக்கும்
உறக்கத்தின்
ஆழங்களில்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன்…
உறக்கத்திலேயே
கனவிலேயே
வாழ்வு
இனிதே
முடிவதாக!